தார் பாலைவனத்தின் அபாயகரமான மாற்றம்: பசுமையை சுமக்கும் மணலின் சாபக் கதை!
TVK: அமைச்சர் சம்பந்திக்கு வாய்ப்பு? பட்ட அவமானம்தான் காரணமா? - அஜிதாவுக்கு மறுக்கப்படுவது ஏன்?
கட்சி தொடங்கி, இன்னும் ஒரு தேர்தலைக் கூட சந்திக்கவில்லை. அதற்குள் மாவட்டச் செயலாளர் மீது பாலியல் புகார், பதவி நீக்கம், கட்சி அலுவலகத்தையே முற்றுகையிடும் தொண்டர்கள் என தவெக சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.
அடுத்த ஆண்டு தேர்தலில் நாங்கதான் ஆளூங்கட்சியாகப் போகிறோம் எனச் சொல்லிக் கொண்டிருக்கும் தவெக, கட்சியின் பல்வேறு பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை நியமித்து வருகின்றது.
முக்கால்வாசி மாவட்டங்களுக்கு மா.செக்கள் நியமிக்கப்பட்டு விட்ட நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில், அந்தப் பதவிகள் எதுவும் நியமனம் செயயப்படாமலே இருந்து வந்தது.
காரணம், அங்கு ஆரம்பத்திலிருந்தே கட்சிக்காக வேலை பார்த்து வந்த அஜிதாவும் எதிர் தரப்பில் சாமுவேல் என்பவரும் அந்தப் பதவியைக் குறிவைக்க, யாருக்குத் தருவது என்பதில் குழப்பம் நிலவ, அறிவிப்பை நிறுத்தி வைத்தது தலைமை.
இந்த சூழலில் இன்று மீதமுள்ள தூத்துகுடி உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கான நியமனங்களை அறிவிக்கப் போவதாக தகவல் வர, காலையில் இருந்து களேபர பூமியாக காட்சியளிக்கிறது பனையூர்.
உச்சகட்டமாக அஜிதா தன் ஆதரவாளர்களூடன் விஜய் வந்த காரை மறித்ததும் நடந்து விட்டது.
தூத்துக்குடியில் என்ன பிரச்னை ? அங்குள்ள தவெகவினர் சிலரிடம் பேசினோம்.

''அஜிதா ஆரம்பத்துல இருந்து கட்சிக்காக் நிறைய ஒர்க் பண்ணினாங்க. ஆனா இப்ப திமுகவில் இருக்கிற அவங்க அண்ணன் பில்லா ஜெகனாலதான் பிரச்னைனு சொல்றாங்க.
ஜெகன் முதல்ல ரஜினி ரசிகரா இருந்தார். `பில்லா' அடைமொழி ரஜினி ரசிகராக வச்சதுதான். பிறகு அரசியல்ல கட்சி மாறுவது போல சினிமாவுல கட்சி மாறி விஜய் ரசிகரானார்.
சில வருடங்கள் திமுக-வில் இருந்து கொண்டே விஜய் ரசிகர் மன்றத்துலயும் ஒர்க் பண்ணினார். அந்தச் சமயத்துல ஒரு தடவை ஏதோவொரு விஷயத்துல் அவருக்கும் ஆனந்துக்கும் இடையில் வாக்குவாதம் வந்து ஆனந்தை திட்டி விட்டதாச் சொல்றாங்க.
அந்தக் கோபம் ஆனந்த் கிட்ட இன்னும் இருக்கு. அவர் மீதுள்ள பகையை வச்சே அஜிதாவைப் பழி வாங்குறார் ஆனந்த்' என்கிறார்கள் சிலர்.

வேறு சிலரோ, `மத்த ஏரியா போல இத பின்னாடியும் சாதி அரசியல்தான் இருக்கு. தூத்துக்குடியைப் பொறுத்தவரை நாடார் சமூக ஆட்களே தேர்தல்ல ஜெயிக்க வாய்ப்பு இருக்கறதா நம்பப்படுது. அஜிதா மீனவர் சமூகத்தைச் சேர்ந்தவரா இருப்பதால் அதைக் காரணம் காட்டி மறுக்கறாங்கனு நினைக்கிறோம்' என்கிறார்கள்.
சாமுவேலை அதிகாரபூர்வமாக மாவட்ட செயலாளராக இதுவரை அறிவிக்கவில்லை. ஒருவேளை அறிவித்தால் அடுத்து அஜிதா என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பது தெரியவில்லை.
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவெனில், சாமுவேல் திமுக அமைச்சர் கீதா ஜீவனின் குடும்பத்துடன் சம்பந்தி முறை உறவினர். மேலும் இவரது உடன்பிறந்த சகோதரர் விஜயசீலன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.!















