நீங்கள் போடும் கோலத்துக்குப் பரிசு வேண்டுமா? சென்னையிலிருக்கும் கீதம் உணவகக் கிள...
Vijay : திருச்செங்கோட்டில் போட்டியிடும் அருண் ராஜ்; முதல் வேட்பாளரை அறிவிக்கும் தவெக! - விவரம் என்ன?
2026 சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு இன்னமும் இரண்டரை மாதங்கள் மட்டுமே இருக்கிறது. இந்நிலையில், தவெக தங்களது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று முதல் அறிவிக்க திட்டமிட்டிருக்கிறது. அதன்படி ஈரோட்டின் திருச்செங்கோட்டில் இன்று ஒரு நிர்வாகிகள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அந்த கட்சியின் வேட்பாளர்களை வேக வேகமாக அறிவித்து வருகிறார். காங்கிரஸ் 234 தொகுதிக்கும் விருப்ப மனுக்களை வாங்கி வருகிறது. இந்த வரிசையில் தவெகவும் தேர்தல் வேலைகளை முடுக்கி விட்டிருக்கிறது. மூன்று நாட்களுக்கு முன்பாக பனையூரில் தவெகவின் மா.செக்கள் மற்றும் நிர்வாகக்குழுவினரின் கூட்டம் நடந்திருந்தது.
அதில், வியூக வகுப்பு குழுவினர் லேட்டஸ்ட்டாக எடுத்திருந்த ஒரு சர்வேயும் பவர்பாய்ண்டாக போட்டுக் காட்டப்பட்டிருந்தது. அதன்படி 160 தொகுதிகளில் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக தவெக தலைமை நம்புகிறது. இதைத் தொடர்ந்துதான் இன்று முதல் கட்சியின் முக்கியமான நிர்வாகிகள் போட்டிப் போடப்போகும் தொகுதியை வரிசையாக அறிவிக்கவிருக்கின்றனர்.

விஜய்யுடனான நட்பால் ஐ.ஆர்.எஸ் பணியை விட்டுவிட்டு தவெகவில் இணைந்து கொள்கைப் பரப்புப் பொதுச்செயலாளர் பொறுப்பை வாங்கிய அருண் ராஜ் திருச்செங்கோட்டில் வேட்பாளராக நிற்கவிருக்கிறார். இதற்காக அவரின் குழு கடந்த சில வாரங்களாக தொகுதியில் இறங்கி பல்ஸ் பார்த்திருக்கின்றனர். இதைத் தொடர்ந்து இன்று திருச்செங்கோட்டில் நிர்வாகிகள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பொதுச்செயலாளர் ஆனந்தும் கொங்கு மண்டல அமைப்புச் செயலாளர் செங்கோட்டையனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அருண் ராஜை நிர்வாகிகள் மத்தியில் வேட்பாளராக அறிமுகப்படுத்தி, அவரின் வெற்றிக்கு அத்தனை நிர்வாகிகளும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென பேசவிருக்கின்றனர்.










