செய்திகள் :

VIT: "படைப்பாளியைப் பார்க்காமல் படைப்புகளைப் பாருங்கள்"- ஞானபீடம் வைரமுத்துவுக்கு `ஞானம்பாடி' விருது

post image

ஞானபீட விருது என்பது இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் ஓர் உயரிய விருது ஆகும். இந்த விருதினை கடந்த ஜூலை 13 ஆம் தேதி வைரமுத்து பெற்றிருந்தார். அதற்காக இன்று வேலூர் வி.ஐ.டி தமிழியக்கம் சார்பில் கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு இன்று பாராட்டு விழா நடைபெற்றது. வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்தப் பாராட்டு விழாவில் வி.ஐ.டி மற்றும் தமிழியக்கத்தின் தலைவர் கோ.விஸ்வநாதன், கவியருவி அப்துல் காதர், கவிச்சுடர் கவிதை பித்தன், தமிழ் செம்மல் வே.பதுமனார், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ப.சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் வேலூர் மாவட்டத்தைச் சுற்றி உள்ள தமிழ் ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள், பொது மக்கள் என சுமார் 1,500 பேர் கலந்து கொண்டனர். ஞானபீட விருது பெற்ற கவிப்பேரரசு வைரமுத்துவைப் பாராட்டி ஞானம்பாடி என்ற மற்றொரு விருதும் தமிழியக்கம் சார்பில் வழங்கப்பட்டது.

நிகழ்வில் பேசிய வி.ஐ.டி மற்றும் தமிழ் தமிழியக்கத்தின் தலைவர் கோ.விசுவநாதன், “24 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டிற்கும் தமிழுக்கும் மற்றொரு பெருமை கிடைத்திருக்கிறது. அதுதான் வைரமுத்து ஞானபீட விருது பெற்ற நிகழ்வு. கடந்த 58 ஆண்டுகளில் மூன்று முறைதான் இந்த விருது தமிழுக்கு கிடைத்துள்ளது. ஞானபீட விருது வாங்கியுள்ள வைரமுத்துவை கட்சிகள் தங்களுக்குள்ளே எப்படிப்பட்ட வேறுபாடு இருந்தாலும், ஒன்று சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ பாராட்ட வேண்டும். இது நம்மையே நாம் பாராட்டிக் கொள்வதுபோல ஆகும். தமிழர்களுக்கு இது பெரிய பெருமையாக இருக்கிறது. அதை செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கின்றேன்.” என்றார்.

கவிபேரரசு வைரமுத்து பேசுகையில், “‘எனக்கொண்ணு ஆனதுன்னா உனக்குவேற பிள்ளையுண்டு... உனக்கேதும் ஆனதுன்னா எனக்கு வேற தாயிருக்கா?’ என்னும் என்னுடைய கவிதையைப் படித்துக் காட்ட மேடையிலேயே தமிழ் செம்மல் பதுமனார் கண் கலங்கினார். ஒரு கவிஞனுக்கும் ஒரு படைப்பாளனுக்கும் வழங்கப்படுகிற மிகப்பெரிய பாராட்டு என்ன தெரியுமா? அவன் வாங்கிய சொல் அல்ல, தங்கம் அல்ல, பொன்னாடை அல்ல, பூமாலை அல்ல, கரவொலி அல்ல. இது அத்தனையும் தாண்டிய ஒரு விருது மற்றொரு படைப்பாளனிடம் இருந்து கிடைக்கும் பாராட்டுதான். அதனை தற்போது எனக்கு வழங்கி இருக்கிறார், தமிழ் செம்மல் பதுமனார் அவர்கள்.

இந்த 91 வயது கொண்ட ஒரு மூத்தவன் தன் கண்ணீர் துளியை காணிக்கையாக்குகிறான் என்றால், அதுதான் சிறந்து விருது என நான் உறுதியாக நம்புகிறேன். அந்தக் கண்ணீர் துளிக்கு இணையாக இன்னொரு விருது ஒரு தமிழ் விருது இருக்க முடியுமா என்று எனக்கு தெரியவில்லை.

மார்ச் 14ஆம் தேதி ஞானபீட விருது எனக்கு அறிவிக்கப்பட்டது. அதே வாரத்தில் என் வீடு தேடி வந்தார் வி.ஐ.டி வேந்தர் விஸ்வநாதன் ஐயா. இந்த விருதுக்கு நாங்கள் ஒரு பாராட்டு விழா நிகழ்த்த வேண்டும் என்றார். நான் மகிழ்ந்து போனேன். ஆனால் அவருக்குச் சொன்னேன், விருது அறிவிக்கப்பட்டுதான் இருக்கிறது. முதலில் விருது வழங்கப்படட்டும்... பிறகு பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறிவிட்டேன். இந்தக் காலத்தில் எப்போது என்ன ஆகிறது என யாருக்கும் தெரியாது. ஏனென்றால் டெல்லிக்கு இன்னொரு பெயர் உண்டு. தந்திர பூமிதான் டெல்லி. அந்த தந்திர பூமியிலிருந்து இதற்கு ஏதாவது மாற்றாக நிகழ்ந்துவிட்டால் என்ன செய்வது, கொஞ்சம் பொறுங்கள் எனக் கூறிவிட்டேன். ஜூலை 13ஆம் தேதி ஞானபீட விருது எனக்கு வழங்கப்பட்டது.

அப்போது வழங்கப்பட்ட விருதுக்கு இதோ ஆகஸ்ட் 14ஆம் தேதி மற்றொரு விருது வழங்கி இருக்கிறது வேலூர் வி.ஐ.டி தமிழியக்கம். உழைப்பவனின் வியர்வை காய்வதற்குள் அவனுக்கான ஊதியத்தை வழங்கிவிடு என்கிறார் நபிகள் நாயகம். விருது பெற்றவனின் கைகளில் அந்த விருது இறக்கி வைக்கப்படுவதற்குள் அடுத்த விருது வழங்கி பெருமை சேர்க்கும் தமிழியக்கத்திற்கு மனமார்ந்த நன்றிகள். பூமிக்கும் வானத்துக்கும் உள்ள தூரம் கூட குறையலாம், தங்கத்தின் விலை திடீர் என்று 40 ஆயிரமாக குறைந்தாலும் குறையலாம். ஆனால் ஒரு கவிஞன் இன்னொரு கவிஞனைப் பாராட்டுவது என்பது நடக்கவே நடக்காது. ஆனால் என்னை அப்துல் காதர், கவிச்சுடர் பதுமனார் ஆகியோர் அவர்கள் மனதின் ஆழத்திலிருந்து மிச்சமில்லாமல் பாராட்டி இருக்கிறார்கள். இதுதான் தமிழன் காட்டுகிற மரியாதை.” என்றார்.

தொடர்ந்து ஞானபீட விருது குறித்து பேசிய அவர், “இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளிலும் எழுதுகிற எழுத்தாளர்களுக்கு ஞானபீடம் என்பதுதான் மோட்சம். ஞானபீடம் என்பதுதான் கனவு. ஞானபீடம் என்பதுதான் உச்சம். எல்லோரும் சொல்கிறார்கள் நோபல் பரிசு பெற்ற படைப்பாளன் என்று பல பேரைக் கொண்டாடுகிறார்கள். ஞானபீடத்திற்கு இன்னொரு பெயர் உண்டு, இலக்கியத்திற்கு இந்தியாவில் வழங்கப்படும் நோபல் பரிசு தான் ஞானபீட விருது. ராஜேந்திர பிரசாத் அவர்கள் இந்திய குடியரசு தலைவராக இருந்தபோது, இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மொழிகளுக்கும் சேர்த்து ஒரே ஒரு ஒற்றை விருது உருவாக்கப்பட வேண்டும். அதற்கு செல்வந்தர்கள் முன்வரலாம் என்று அழைப்பு விடுத்தார். அப்போது வந்தவர்தான் சாந்திபிரசாத் ஜெயின். அந்த பெருமகன் ஒரு ஜெயின் குடும்பத்தைச் சார்ந்தவர்.

அதற்கு குழு உண்டாக்கப்பட்டது. இந்தக் குழுதான் தமிழ்நாட்டிலிருந்தும், ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் ஞானபீட விருதுக்கு விருதாளரை தேர்வு செய்கின்றனர். அப்படி அந்த குழுவுக்கு இந்த ஆண்டு இந்த எழுத்தாளரை நீங்கள் பரிசீலிக்கலாம் என்று பல கடிதங்கள் செல்ல வேண்டும். நம்ம ஊர்ல கடிதங்கள் அப்படி அனுப்பதே இல்லை. ஏனென்றால் ஒரு எழுத்தாளன் இன்னொரு எழுத்தாளனை அவ்வளவு சீக்கிரம் அங்கீகரிப்பதில்லை. ஒரு கவிஞன் இன்னொரு கவிஞனை அவ்வளவு சீக்கிரம் அங்கீகரிப்பதில்லை. பேராசிரியர்கள், பல்கலைக்கழகங்கள் வேறு வேலைகளில் இருக்கின்றனர். 11 பேர் கொண்ட தேர்வு குழுவில் பஞ்சாபி, மராட்டி, பெங்காலி, குஜராத்தி, டெல்லி, கன்னடம், மலையாளி என மொழிகளில் உள்ளவர்கள் பணியாற்றுகிறார்கள். இதுவரைக்கும் ஒரு தமிழர்கூட அந்த தேர்வு குழுவில் உறுப்பினராய் இல்லை.

விஐடி விஸ்வநாதன் என்னை கேட்டார், ஏன் உங்களுக்கு இந்த விருது வாங்க 24 வருடங்கள் ஆயிற்று என்று. நான் பரவாயில்லை ஐயா ஜெயகாந்தனுக்கு 27 வருடங்கள் ஆனது. 1975-ல் அகிலன் பெற்றார். 2002-ல் ஜெயகாந்தன் பெற்றார். ஜெயகாந்தனுக்கு 27 வருடங்களுக்குப் பிறகு தமிழுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. நான் 24 வருடங்களுக்குப் பிறகு அதை தமிழுக்கு பெற்றுக் கொண்டதே எனக்கு பெருமை என்றேன். தமிழ் மீது வடகுலத்தில் ஒரு சின்ன எதிர்ப்பு உள்ளது. இந்த நாட்டுக்கு சமஸ்கிருதம் தான் பாரம்பர்யம் சொல்லி கொடுத்தது என்ற ஒரு முடிவில் அவர்கள் தீர்மானமாக இருக்கிறார்கள். தமிழின் ஆழம், தமிழின் இலக்கணம், இலக்கியம் இவற்றை அவர்கள் முற்றிலும் அறிந்திருக்கவில்லை.

உங்களுடைய தாடி வைத்த தாகூரை மட்டும் நாங்கள் அறிந்திருக்கிறோம். எங்களுடைய மீசைக்காரரான மகாகவியை நீங்கள் ஏன் அறியவில்லை என அவர்களிடம் நான் கேட்கிறேன். தமிழ் படைப்பாளிகளே... நீங்கள் இயற்றும் நூல்களை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுங்கள். பல்கலைக்கழகங்களே, தொண்டுநிறுவனங்களே, கல்லூரிகளே பேராசிரியர்களே, மொழிபெயர்ப்பு ஆசான்களே உங்களுக்கெல்லாம் ஒரு வார்த்தை, தமிழில் படைப்பாளியைப் பார்க்காமல் படைப்புகளை பாருங்கள். படைப்புகளைப் பார்த்து அவற்றை மொழிபெயர்த்து வெளியிடுங்கள். பொதுவாக வாழுகிற படைப்பாளி மீது எவருக்கும் முழு அன்பு இருக்காது. படைப்பாளியை கழித்துவிட்டு படைப்பைப் பாருங்கள்.” என்றார்.

ஜென்சி (Gen Z) தலைமுறை குறித்து பேசிய அவர், “இப்போதெல்லாம் ஜென்சி (Gen Z) தலைமுறை என்று ஒரு புதிய குரல் கேட்கிறதே. அந்த தலைமுறையை அழைத்து ஒரு தமிழ் பத்திரிகை கொடுத்து தமிழ் தடையில்லாமல் படிக்கச் சொல்லுங்கள். தமிழ் படிக்க தெரியாத தலைமுறைக்கு ஜென்சி (Gen Z) தலைமுறை என்று பெயரா. தமிழ் எழுத வராத தலைமுறைக்கு அப்படி ஒரு பெயரா. பல பள்ளி மாணவர்கள் பள்ளி இறுதி தேர்வு கடந்த பிறகும் கூட தமிழில் எழுதவோ தடையின்றி பேசவோ முடியாதவர்களாக இருக்கிறார்கள். இது தான் கல்வி கொடுத்த பெருமையா நமக்கு. தயவுசெய்து இந்த தலைமுறையை மீட்டெடுக்க வேண்டியதும் இனிவரும் தலைமுறை தமிழைத் தாண்டிப் போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதும் இந்தப் பல்கலைக்கழகங்களின் பொறுப்பு என்று இந்த மேடையில் நான் உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன். ஞானபீடம் என்பது இன்னொருவன் வாங்குவான். 15 வருடங்கள் கழித்து வைரமுத்துபோல இன்னொருவன் வருவான். பலபேர் வரவேண்டும், வந்தால்தான் வாழையடி வாழையாக தமிழ் வளர்கிறது என்று பொருள்.

உலக மக்களால் பேசப்படுகிற எண்ணிக்கை வரிசையில் தமிழ் 24ஆம் இடம். இதன் பொருள் என்ன? தமிழர்களின் எண்ணிக்கையைப் பெருக்க வேண்டும். இல்லையென்றால் தொகுதி மறுவரையரையே நம்மை சாகடித்து விடும். குடும்பக் கட்டுப்பாடு என்ற ஒரு நல்ல கொள்கையை தமிழனை போல பயந்து கொண்டு நிறைவேற்றியவர் வேறு யாரும் அல்ல. பயந்து நிறைவேற்றி விட்டார்கள். அதனுடைய பலனை 25, 30 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நாம் அனுபவிக்கிறோம்.” என்றார்.

தாளத்தில் தடம் பதிக்கும் ஜமாப் இசைக் குழு; கவனம் ஈர்க்கும் மருதமலை இளைஞர்கள்!

மருதமலைக்கு மேலே வசிக்கும் பழங்குடியின இளைஞர்கள் சுமார் 20 பேர் இணைந்து 2013-ஆம் ஆண்டு ஜமாப் இசைக் குழுவைத் தொடங்கினர். தங்களுக்குப் பிடித்த இந்த இசையில் திறமை இருப்பதை உணர்ந்த இளைஞர்கள், தனித்தனியாக ... மேலும் பார்க்க

`வெப்பத்தின் வெறியாட்டம்' - சமூக மாற்றத்துக்கும் பொறுப்புணர்வுக்கும் வித்திட்ட கட்டைக்கூத்து

அசார் சோஷியல் இம்பாக்ட் அட்வைசர்ஸ் நிறுவனமும், எம்.எஸ் . சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையும் இணைந்து நடத்திய வெப்பத்தின் வெறியாட்டம் கட்டைக்கூத்து நிகழ்ச்சி, வெகு சிறப்பாக நடைபெற்றது.அசார் சோஷியல் இம... மேலும் பார்க்க

`GI டேக் கிடைச்சிருக்கு; ஆனா இந்தக் கலையைக் காப்பாத்த ஆள்தான் இல்லை!'- சொப்புச் சாமான் கலைஞர் சரவணன்

"குழந்தை பிறந்ததிலிருந்து திருமணம் ஆகும் வரை வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் எங்களோட கைவினைப் பொருள்கள் பயணிக்குது" என்று பெருமையுடன் கூறுகிறார், அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த கைவினைக் கலைஞர் சரவணன். ... மேலும் பார்க்க