"நாங்கள் சிரித்துக்கொண்டே அழுகிறோம்.!"- திமுக-வின் தொகுதிப் பங்கீடு குறித்து மதி...
Youth: "இப்போவும் Sivakarthikeyan சார் ஆபீஸ்லதான் தங்கியிருக்கேன்"- 'யூத்' பப்ளூவின் இன்ஸ்பயரிங் கதை
கென் கருணாஸின் 'யூத்' திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கிறது.
இப்படத்தில் பப்லு என்கிற கதாபாத்திரம் கென்னுடன் பள்ளிக் காட்சிகளில் பயணிக்கும். அக்கதாபாத்திரத்தில் சரத் என்பவர் நடித்திருக்கிறார்.

இவரை நாம் 'டான்', 'லப்பர் பந்து' உள்ளிட்ட சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் பார்த்திருப்போம். இன்று 'யூத்' இவரை உயரத்திற்கு ஏற்றி விட்டிருக்கிறது.
ஆபீஸ் பாய் வேலைக்காக சென்னைக்கு வந்தவர் இன்று நடிகராக உயர்ந்து நிற்கிறார். அவரைப் பேட்டிக் கண்டோம். 'யூத்' ஏற்படுத்தித் தந்த மகிழ்ச்சியில் நம்பிக்கையோடு பதில் கொடுத்தார் சரத்.
"நான் 'லப்பர் பந்து' படத்துல ஒரு சின்னக் கேரக்டர்ல நடிச்சிருப்பேன். அந்தப் படத்தைப் பார்த்த கருணாஸ் சார், 'யூத்' படத்துல வர்ற பப்லு கேரக்டருக்காக என்னைக் கென்கிட்டச் சொல்லியிருக்காரு.
நான் ஒரு படப்பிடிப்புல இருக்கும்போதுதான் கென் எனக்குக் கால் பண்ணினாரு. இரவு 11 மணி போல அவர் என்னை அழைத்து, 'நான் கென் பேசுறேன். உங்களுக்காகவே ஒரு கேரக்டர் எழுதியிருக்கேன்'னு சொன்னாரு.
இரவு நேரத்துல நம்மள யாரோ பிராங்க் பண்றாங்கன்னு நினைச்சு விட்டுடேன். பிறகு உண்மையிலேயே கென்தான் எனக்குக் கால் பண்ணினார்ங்கிறது தெரிஞ்சது. மறுபடியும் அவர்கிட்ட பேசி 'யூத்' கேங்குள்ள நானும் ஒருவனாக வந்துட்டேன்.

கதை சொல்லும்போதே எனக்குப் படத்துல ஒரு ஃபைட் சீன் இருக்குன்னு சொல்லிதான் கென் எனக்குக் கதை சொன்னாரு. எனக்கு ஃபைட் சீன்லாம் இருக்குன்னு ரொம்ப ஆச்சரியப்பட்டேன்.
இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கு. என்னை எதற்காக இந்தப் படத்துக்குத் தேர்வு பண்ணினேங்கிற காரணத்தை கென் எனக்குச் சொன்னார். என்னுடைய குரலுக்காகத்தான் அவர் என்னைத் தேர்வு பண்ணியிருக்கார்.
ஏன்னா, என்னுடைய பேச்சு எல்லோருக்கும் புரியாது. எனக்குத் தொண்டையில சில பிரச்னைகள் இருக்கு. அதனாலதான் என்னுடைய குரல் இப்படி இருக்கு. நான் ஆடிஷன்னு எங்கப் போனாலும், 'நீ இன்னும் தெளிவாகப் பேசணும்'னு சொல்வாங்க. அப்படி இத்தனை நாட்களாக என்னுடைய குரல் எனக்கு நெகட்டிவ்வாக இருந்திருக்கு. ஆனா, கென் மட்டும்தான் அந்த விஷயத்தை நேர்மறையாகப் பார்த்தாரு." என்றார் மனநிறைவுடன்.
தொடர்ந்து பேசிய அவர், "சிவகார்த்திகேயன் சார் மூலமாகத்தான் நான் சினிமாவுக்கு வந்தேன். அவர்தான் என்னை முதல் முதலில் 'டான்' படத்துல நடிக்க வச்சாரு. நான் முதல்ல எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் ஆபீஸ்ல ஆபீஸ் பாயாகத்தான் வேலை பார்த்துட்டு இருந்தேன்.
என்னைப் பத்தி அங்க இருக்கிறவங்க எஸ்.கே. சார்கிட்டச் சொல்லியிருக்காங்க. அப்படி ஒரு நாள் ஆபீஸ்ல சுத்திட்டு இருக்கும்போது, எஸ்.கே. சார் சிபி சக்ரவர்த்தி சார்கிட்ட என்னை அறிமுகப்படுத்தினாரு.
நான் ஒரு கேரக்டருக்குச் சரியாக இருப்பேன்னு சொல்லி என்னை நடிக்க வச்சாங்க. 'கனா' படத்துல தமிழரசன் பச்சமுத்து அண்ணா உதவி இயக்குநராக வேலை பார்த்திருந்தார்.

பிறகு அவர் என்னைப் பத்திக் கேள்விப்பட்டு 'லப்பர் பந்து' படத்துல என்னை நடிக்க வச்சாரு. நடிப்புன்னு ஆசையோட சினிமாவுக்கு வரல. ஆனா, 'டான்'ல நடிச்சதுக்குப் பிறகு எனக்கு நடிப்பு மீது ஆர்வம் வந்துடுச்சு. 'டான்' படம் முடிச்சப் பிறகே வாய்ப்புகள் தேட ஆரம்பிச்சுட்டேன்.
எஸ்.கே. புரொடக்ஷன்ல இப்போ நான் வேலைல இல்லைன்னாலும், நான் அந்த ஆபீஸ்லதான் தங்கியிருக்கேன். சாப்பாடு, வீடுன்னு வெளியே போனா நிறைய செலவாகும்னு என்னை அங்கேயே தங்கச் சொல்லிட்டாங்க.
இப்போவும் அங்கதான் தங்கியிருக்கேன். அங்க இருந்துதான் இப்போ இந்தப் பேட்டிக்கும் வந்திருக்கேன். வரும்போதுகூட, எஸ்.கே. சார் 'யூத்' படத்துக்கு வாழ்த்துச் சொல்லி, 'இனிமேல் உனக்கு நல்ல கேரக்டர்ஸ் வரும்'னு சொல்லி வாழ்த்தினாரு" என்றவரிடம் அவர் எஸ்.கே. புரொடக்ஷனுக்குள் எப்படி வந்தாரெனக் கேட்டோம்.
அவர், "நான் பெருசா படிக்கல. படிப்பும் வரல. 10வது முடிச்சதும் ஐடி படிக்கிறேன்னு வீட்டுல சொன்னேன். பிறகு நேரடியாகவே ஒரு மெக்கானிக் ஷாப்ல வேலைக்குச் சேர்ந்துட்டேன். அங்க கிடைச்ச சம்பளம் எனக்குப் பத்தல.
அப்போ இது மாதிரி ஆபீஸ் பாய் வேலைக்கு ஆள் தேவைன்னு எங்க சொந்தகாரங்க சொன்னாங்க. சம்பளமாக 10,000 வரைக்கும் தர்றதாகவும் சொன்னாங்க. எங்க வீட்டின் பொருளாதார சூழலைக் கருத்திக் கொண்டு சென்னைக்குக் கிளம்பி வந்து வேலைக்குச் சேர்ந்துட்டேன்.
அப்படித்தான் எஸ்.கே. புரொடக்ஷனுக்குள்ள வந்தேன். எஸ்.கே. அண்ணாவுக்கு என்னைக்கும் நன்றி சொல்வேன்.

அவர் மூலமாகத்தான் இத்தனை விஷயங்களும் எனக்குக் கிடைச்சிருக்கு. சின்ன வயசுல நான் பெருசா எங்கையும் வெளில போக மாட்டேன். எப்போதும் வீட்டுக்குள்ளேயேதான் இருப்பேன்.
இன்னைக்கு நான் நடிக்கிறதைப் பார்த்துட்டு அப்பாவும், அம்மாவும் ரொம்ப சந்தோஷப்படுறாங்க. அவங்களுக்கு அதைப் பத்தி பெரியளவில் தெரியலைன்னாலும், மத்தவங்க பெருமையாகப் பேசுறதை நினைச்சு சந்தோஷப்படுறாங்க" என்றார்.

















