`கிலுகிலுப்பை ஆட்டி விளையாட்டு காட்டும் ஆளைப் பார்த்து குழந்தை நிச்சயம் மயங்கும்...
அன்பார்ந்த வேட்பாள பெருங்குடி மக்களுக்கு... நடப்பு அரசியல் கண்டு அழும் வாக்காளனின் கடிதம்!
அன்பார்ந்த வேட்பாள பெருங்குடி மக்களே..
'வழக்கத்தைத் தாண்டி இந்தத் தடவை கொஞ்சம் அதிகமா ஏமாந்துட்டோமோ'ங்கிற ஆதங்கத்துடன் உங்களுக்கு ஓட்டுப் போட்ட வாக்காளன் வரையும் மடல் இது.
'யோக்கியன் வர்றான் செம்பெடுத்து உள்ள வை'னு ஒரு சொல்லாடல் தமிழ்ல உண்டு. 'அயோக்கியன் இல்லையே, அப்புறம் எதுக்கு செம்பை எடுத்து உள்ள வைக்கணும்'னு யாராவது எப்பவாவது கேட்டிருப்போமா?
ஒரே வாக்கியத்துல பாசிடிவாகவும் நெகடிவாகவும்.. வாவ்'ங்கிறவங்க தமிழின் வளமை தெரிஞ்சவங்க. 'பாராட்டவும் செய்யணும், திட்டவும் செய்யணும், அவ்ளோதான் இதோட அர்த்தம்.
சரி, விஷயத்துக்குப் போயிடலாம்.
ஓட்டுப் போட்டு உங்களையெல்லாம் தேர்ந்தெடுத்துட்டோம். அதனால பாராட்டாம இருக்க முடியாது. அதேநேரம் தேர்தல் முடிவு வந்ததுல இருந்து இந்தப் பத்து நாளா நீங்க நடந்துக்கிடறதையெல்லாம் பார்த்தா கொதிக்கவும் செய்யுது. அதனால எளிதாகக் கடந்து போகவும் முடியலை.
மீடியா, சோஷியல் மீடியானு எந்தப் பக்கம் போனாலும், 'அவர் அந்தப் பக்கம் போயிட்டார்', 'இவர் இந்தப் பக்கம் போயிட்டார், 'நாங்கதான் ஒரிஜினல்', 'எங்களுக்கே அதிகாரம்'.. இப்படி ஏக கரைச்சல், சகிக்கல, எரிச்சல், ஆத்தாம, கோபம், இன்னும் என்னென்னவோ வருது.
ஒருத்தராச்சும் போன மாசம் மக்கள்கிட்ட போய் என்ன பேசினோம், இன்னைக்கு என்ன பேசிட்டிருக்கோம்னு நினைச்சுப் பார்க்கிறீங்களா?
எவ்வளவு காலம் சவாரி?
காங்கிரஸ்காரங்க கொஞ்சம் முன்னாடி வர்றீங்களா, கடிதத்தை உங்ககிட்ட இருந்துதான் தொடங்கணும். ஏன்னா 'துரோகி' பட்டம் உங்களுக்குத்தானே முதல்ல கிடைச்சது. அதுக்கு ஆறுதல் சொல்றது எங்க வேலை இல்ல. அது உங்களுக்கும் திமுகவினருக்குமான பிரச்னை.
எங்களுடைய ஆதங்கம் என்னன்னா பேச்சுக்குப் பேச்சு 'பேரியக்கம்'னு சொல்றீங்க, ஆனா நடந்துக்கிடறதெல்லாம் ரொம்ப சின்னப்புள்ளத்தனமா இருக்குங்கிறதுதான்.
பிடிக்கலையா கூட்டணி வச்சிருக்கக் கூடாது. மாநிலத் தலைமையைக் கட்டுப் படுத்த முடியாம கூட்டணி வச்சு தேர்தலும் முடிஞ்சுடுச்சு. ரிசல்ட் வந்த மறுநாளேவா கூட்டாளியை விட்டுட்டு ஓடுவீங்க. 'நன்றி சொல்ல கூட வரலை'னு திமுக தலைவர் நொந்து போய் பேசுற அளவுக்கு ஒரே நாளில் மாறிட்டீங்க...
நேரு ஸ்டேடியத்துல முதல்வர் பதவி ஏற்பு விழாவுல தவெக தலைவர் பக்கத்துல உட்கார்ந்து உங்க தலைவர் ராகுல் சிரிச்சு சிரிச்சுப் பேசிட்டிருந்ததைப் பார்த்த போது, இந்தியாவுல வேற யாருமே சொல்ல தயங்கிய போது 'பிரதமர் வேட்பாளர்'னு அவரை முதல் ஆளா ஸ்டாலின் முன்மொழிஞ்சதுதான் ஞாபகத்துக்கு வந்துச்சு.
சரி, ஜெயிக்கற குதிரை மேலதான் காசு கட்டணும்னு இறங்கிட்டீங்க. ஆனா இன்னும் எத்தன காலம்தான் அடுத்த குதிரையில சவாரி செஞ்சிட்டிருப்பீங்கனுதான் தெரியலை.
'முட்டு' வேண்டாமே!
அடுத்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மத்த சகாக்களான விசிக, கம்யூனிஸ்ட்களுக்கு..
உங்க மேல எங்களுக்கு ரொம்ப கோபமில்லை. திமுக ஆட்சி வரணும் ஓட்டு கேட்டதால அவங்ககிட்ட போய் முறைப்படி சொல்லிட்டு, கவர்னர் ஆட்சி வந்துடக்கூடாதுங்கிற நோக்கத்துல பெரும்பான்மைக்குத் தேவையான ஆதரவை தவெகவுக்கு வழங்கியதா சொல்றீங்க. ஆனாலும் உங்களுக்குச் சொல்லவும் ஒரு விஷயம் இருக்கு.
கடந்த காலங்கள்ல திமுக செய்த சில விஷயங்களுக்கு முட்டு கொடுத்திட்டிருந்தீங்களே, அதே காரியத்த தவெககிட்டயும் செய்யாதீங்க.
அவங்க உங்க பேரைக் கூடச் சொல்லல!
மூணாவது ரத்தத்தின் ரத்தங்களுக்கு..
தமிழகத்தை அதிக காலம் ஆண்ட கட்சி.. எம்.ஜி.ஆர் தொடர்ந்து மூணு தடவை ஜெயிச்சார்.. ஜெயலலிதா தொடர்ந்து ரெண்டு தேர்தல்ல ஜெயிச்சாங்க. அவங்க இல்லாத சூழல்ல அடுத்தடுத்த தேர்தல்ல தோல்விங்கிறது முதல் அனுபவம்தான். ஆனா அவ்வளவு மோசமான தோல்வி இல்லையே.
சினிமாவில் உச்சத்திலிருந்த ஹீரோ வந்ததால் வீசிய சூறாவளியில திமுகவில் தலைவர், பொதுச் செயலாளரே காலி ஆன நிலையில, திரைப் பிம்பம், அரசியலில் குடும்பப் பின்புலம்னு எதுவும் இல்லாத பழனிசாமிங்கிற அந்த மனுஷனுக்கும் 47 இடங்களைத் தந்திருக்கோமே.

நாலு சீட் ஜெயிச்ச காலமெல்லாம் பார்த்தோமேனு நினைச்சுகிட்டு 'அடுத்து என்ன செய்யலாம்னு யோசிக்காம மறுபடியும் கட்சியை ஒரு வழி பண்ணக் கிளம்பறீங்களே, உங்க உடம்புல ஒரிஜினல் அதிமுக ரத்தம் தான் ஓடுதா?
'திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி'ங்கிற அந்த ஐடியாவை முன்மொழிஞ்சது நீங்களா அல்லது அவங்களா தெரியலை. ஆனா அது மட்டும் ஒர்க் அவுட் ஆகியிருந்தா ரெண்டு பேருமே காலத்துக்கும் எழுந்திட முடியாத ஒரு சம்பவம்தான் நிகழ்ந்திருக்கும்.
தனியா குரூப் சேர்ந்து அரசை ஆதரிக்கறோம்னு சொல்ற கூட்டம் 'அவங்க நம்ம பேரைக் கூடச் சொல்லாம 'மற்றும் பலர்'னு சொன்னாங்களேன்னு கூடவா நினைச்சுப் பார்க்கலை. திமுகவாச்சசும் எதிரினு அறிவிச்சுட்டு மோதுது. புதுசா வந்தவங்க உங்க தலைவர்களைப் புகழ்ந்துகிட்டே உங்களையெல்லாம் அவங்க பக்கம் இழுக்கிறாங்க. அதுகூட தெரியாம இவ்வளவு நாள் என்ன அரசியல் கத்துக்கிட்டீங்களோ?
அமைச்சர் பதவி, வாரியப் பதவினு எதுக்காகவாச்சும் அங்க போய் செட்டில் ஆகிட்டிங்கன்னா, அப்படியே சென்னையிலேயே அஞ்சு வருஷமும் இருந்துக்கோங்க. தப்பித் தவறி தொகுதிப் பக்கம் வந்துடாதீங்க.
அப்பாவை மிஞ்சிட்டீங்க!
அடுத்து ஆட்சியைக் கோட்டை விட்ட உடன்பிறப்புகளுக்கு..
சொந்த தொகுதியில் தலைவர் தோற்கிற நிலையில் கட்சிய நடத்திக்கிட்டு, அதிக தொகுதிகள்ல ஜெயிச்சவங்களை தடுக்க நினைச்சிருக்கீங்க. கம்யூனிஸ்ட் தலைவர் பேபி பொதுவெளியில போட்டு உடைச்சப்ப உங்க கட்சியிலயுமே பாதிப்பேர் கூனிக் குறுகிப் போனாங்க தெரியுமா?
'ஆட்சி அமைக்க ஆளுநர் தவெக-வை அழைக்கணும்'னு ஒரு பக்கம் அறிக்கை. பின்னாடி கட்சிக்காரங்ககிட்ட 'ஆட்சியமைக்க பழனிசாமியை அழைக்கலாமா'னு டிஸ்கஷன்.. அற்புதம், தலைவரே, அவங்க அப்பாவை விட டேஞ்சர்னு ஹெச்.ராஜா சரியாதான் சொல்லியிருக்கார். தோல்வியில இருந்து பாடம் கத்துக்காம பழைய அழுக்கு அரசியலைத் தொடர்ந்தீங்கன்னா சொல்றதுக்கு ஒண்ணுமில்ல.ப்
இதுவா மாற்றம்?
கடைசியா முதல் தேர்தல்லயே இருபெரும் கழகங்களை வீழ்த்தி ஆட்சி அமைச்சிருக்கிற தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களே முதல்ல வாழ்த்துகளைச் சொல்லிடுறோம். உங்களோடது சாதாரண வெற்றி இல்ல..
இருங்க ரொம்பக் குளிர்ந்துடாதீங்க. இன்னொரு வாழ்த்தும் இருக்கு. அது எதுக்குன்னா மூணு அணியா போட்டியிட்ட தேர்தல் முடிஞ்சதும் மூணு அணி ஆட்சியையும் அமைச்சீங்க பார்த்தீஙக்ளா, அதுக்கு.
உங்க உறுப்பினர்கள், ம.மு கூட்டணியில இருந்து திமுகவின் தோழமைக் கட்சிகளின் ஆதரவு, தே.ஜ கூ.ட்டணியில இருந்து அதிமுக கலக முகங்கள்னு எடுத்த எடுப்புலயே வேற லெவல் அரசியல்.
திமுக கூட்டணிக் கட்சிகள் கிட்ட ஆதரவு கேட்டவரைக்கும் ஓ.கே. ஆனா அதிமுக கலக ஆளுங்களை போய் பார்த்தீங்களே, இதை நாங்க உங்ககிட்ட எதிர்பார்க்கவே இல்ல. எல்லா கட்சி தலைவர்களை பார்த்து நாகரிக அரசியல் செய்த உங்களை பாராட்டினோம். அதே வரிசையில அதிமுகவில் பொதுச் செயலாளராக இருப்பவரான எடப்பாடி பழனிசாமியை தானே சந்திச்சிருக்கணும். அதில் மட்டும் ஏன் இப்படி?
மாற்றம் வேணும்னு சொல்லிட்டு ரெண்டு கழகங்களூம் செஞ்சதையே நீங்களூம் செஞ்சீங்கன்னா, வாக்களித்த மக்களின் மனநிலை என்னவா இருக்கும்னு யோசிங்க.."
இப்படிக்கு
உங்களுக்கு வாக்களித்த வாக்காளன்!












