'எடப்பாடிக்கு எதிராகவே `அதிமுக அதிகாரப்பூர்வ' ஊடகங்கள் திரும்பியது எப்படி?
`ஆங்கிலம் பேச 175 கிளைகளோட ஒரு நிறுவனமானு வியந்தாங்க, இப்ப ஒரேயொரு சென்டர்தான்!'- 'Veta' ராஜகோபாலன்
'என்ன, என்னை ஞாபகம் இருக்கா' என கடந்த சில தினங்களாக சோஷியல் மீடியா பக்கம் ஒரு குரல். வீடியோக்குள் போனால், அட, நம்ம 'வீட்டா' ராஜகோபாலன்.
ஆங்கிலம் பேசறதுக்குன்னே ஒரு இன்ஸ்ட்டியூட்டை நிறுவி பெரிய அளவுல நடத்திட்டிருந்தாரே அவரேதான்.
'இவ்ளோ நாள் எங்க போயிருந்தீங்க. இப்பவும் ஸ்போக்கன் இன்ஸ்டியூட் போயிட்டிருக்கா' உள்ளிட்டக் கேள்விகளுடன் அவரிடம் பேசினோம்.
''நன்னிலத்துல பெரியப் பணக்காரக் குடும்பப் பின்னணி. ஆனா சொத்துப் பிரச்னையில ஆளாளுக்குப் பகையாகி சொத்தும் கரைஞ்சு பஞ்சம் பிழைக்க வந்த மாதிரி சென்னைக்கு அம்மா, தம்பி, தங்கையோட வந்தேன். நாற்பது ரூபாய்க்கு வாடகைக்கு வீடு பிடிச்சோம். பேப்பர் போட்டதுதான் என்னுடைய முதல் வேலை. அமைச்சர் வீடுகளுக்குப் பேப்பர் போட்டதுல அமைச்சர் ராகவானாந்தம் கிட்ட அறிமுகமானேன். ஹெல்த் டிபார்ட்மென்ட்ல ஒரு டெம்ப்ரவரி அட்டெண்டர் வேலை இருக்குன்னு சிபாரிசு செஞ்சார்.
அந்த வேலையை செஞ்சுகிட்டே லயோலா காலேஜ்ல பியூசி சேர்ந்தேன். பொருளாதாரம் எனக்குப் பிடிச்ச பாடம்.

அதுல கொஞ்சம் வீக்கா இருக்கிற பசங்க எங்கிட்ட சொல்லித் தரச் சொல்வாங்க. நான் சொல்லிக்கொடுத்து அவங்களுக்கு நல்ல மார்க் வர. டியூசன் எடுத்தா என்னனு தோணுச்சு. என் தம்பியும் படிச்சு முடிக்க முழு நேர வேலையா டியூசன் சென்டர் தொடங்கினோம்.
லயோலா காலேஜ்ல படிக்கிறப்ப வெளியூர்கள்ல இருந்து சென்னைக்கு வர்ற பசங்க ஆங்கிலம் பேசறதுக்கு சிரமப்படுறதைப் பார்த்ததுல, ஏன் நமக்கு நல்ல பேச வருகிற ஆங்கிலத்தை இவங்களுக்குச் சொல்லித் தந்தா என்னனு தோண, டியூசனைக் குளோஸ் பண்ணிட்டு ஸ்போக்கன் இங்கிலீஷ்ல மட்டுமே கவனம் செலுத்த தொடங்கினோம். 'பிறரின் கேலி கிண்டல்களுக்கு காது கொடுக்காதே, உன்னிடம் என்ன திறமை இருக்கோ அதை வைத்து சாதிக்கப்பார்' என்கிற விவேகானந்தரின் வரிகள் உத்வேகம் தர, அவருடைய பெயரையே நிறுவனத்துக்கு வச்சோம். வருஷம் 1981.
சென்னை தி.நகரில் பயிற்சி மையத்துக்கு அவ்வளவு கூட்டம் வரும். பேட்ஜ் பேட்ஜா நாள் முழுக்க பயிற்சி நடக்கும். எங்ககிட்ட படிச்சுப் போன சிலர் நல்ல வேலைகளில் சேர்ந்துட்டு வந்து நன்றியெல்லாம் சொல்லிட்டுப் போவாங்க. எங்க நிறுவனமும் வளர்ந்துச்சு. இந்தியாவுல ரெண்டு மாநிலம் தவிர்த்து 175 கிளைகள், ஏகப்பட்ட பணியாளர்கள்னு உயர்ந்தோம். ஆங்கிலம் பேச இப்படியொரு நிறுவனமானு பலரும் வியந்தாங்க. அதெல்லாம் ஒரு காலம்..." எனப் பெருமூச்சு விட்டவர், சில நொடிகள் மௌனத்திற்குப் பிறகு தொடர்ந்தார்...

'இப்ப எத்தனை கிளைகள் இருக்கும்னு நினைக்கீங்க' எனக் கேட்டுவிட்டு அவரே தொடர்ந்தார்..
`` 'வேறெங்கும் கிளைகள் இல்லை'னு சில விளம்பரங்கள்ல கேட்டிருப்பீங்கல்ல, அதுதான் நிலை. இன்னைக்கு தி.நகர் ஆபீஸைத் தாண்டி ஒரு கிளைகூடக் கிடையாது. எதைச் சொல்லியும் குத்தமில்லை, காலமாற்றம், நடக்கத்தான் செய்யும்.
நாங்க நிறுவனம் தொடங்கினப்ப சோஷியல் மீடியா கிடையாது. அதனால ஏகபோகம இருந்தோம். சோஷியல் மீடியா வந்த பிறகு கொஞ்சம் பிசினஸ் டல் ஆக தொடங்குச்சு. ஆனா நாங்களும் ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கி அப்டேட் ஆனோம். ஆனா கோவிட் வந்து மொத்தமா எல்லாத்தையும் காலி செஞ்சிடுச்சு. கோவிட் காலத்துலதான் கிளைகள் எல்லாம் மூடப்பட்டன.
அதன் பிறகு ஆஃப், அது இதுன்னு நிறைய வந்துட, தி.நகர் மையம் மட்டும்தான் இப்ப இருக்கு. ஆன்லைன் வகுப்புகள் போயிட்டிருக்கு. 25 வயசுக்கு மேல 60 வயசு வரைக்கும் உள்ளவங்க இப்பவும் ஆர்வமா வர்றாங்க. ஆனா ஜென் சி தலைமுறைகள் யாரும் வர்றதில்லை. அவங்க பேசற இங்கிலீஷ் ஸ்லேங்கே வேற மாதிரி இருக்கு. 'வைப்', 'நோ கேப்'னு என்னென்னவோ பேசறாங்க. நாமதான் அவங்ககிட்ட கத்துக்கணும் போல இருக்கு'' என்றபடி முடித்தார்.













