பாஞ்சாலங்குறிச்சி கோட்டை, பாரதியார் இல்லம், மணப்பாடு கடற்கரை- தூத்துக்குடி முக்க...
இந்திய மாம்பழங்களுக்கு ஜப்பான் திடீர் தடை! 20 ஆண்டுகளுக்குப் பின் அதிர்ச்சி - காரணம் என்ன?
கோடைக்காலம் தொடங்கிவிட்டாலே நம் நினைவுக்கு வருவது மாம்பழங்கள் தான். இந்தியாவின் அல்போன்சா, கேசர், பங்கனப்பள்ளி மற்றும் லங்ரா போன்ற மாம்பழ ரகங்களை ஒருமுறை சுவைத்தவர்கள் அதன் சுவையை மறக்க மாட்டார்கள். ஆனால், இந்திய மாம்பழங்களை இந்த ஆண்டு ருசிக்கக் காத்திருந்த ஜப்பான் மக்களுக்கு ஒரு கசப்பான செய்தி கிடைத்துள்ளது.
இந்தியாவில் உள்ள சில மாம்பழ ஆலைகள் தங்களது கடுமையான சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்று கூறி, இந்திய மாம்பழங்களின் இறக்குமதிக்கு ஜப்பான் நாடு அதிரடியாகத் தடை விதித்துள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டிற்குப் பிறகு, அதாவது சுமார் 20 ஆண்டுகள் கழித்து ஜப்பான் இந்த அதிரடி முடிவை எடுத்திருப்பது உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயப் பயிர்களை அழிக்கும் பூச்சிகள் விஷயத்தில், ஜப்பான் நாடு எப்போதுமே ரொம்பக் கடுமையான சட்டங்களைப் பின்பற்றி வருகிறது. இதனால், இந்தியாவிலிருந்து ஜப்பானுக்கு அனுப்பப்படும் பழங்கள் அனைத்தையும் 'வேப்பர் ஹீட் ட்ரீட்மென்ட்' என்று சொல்லப்படும் ஆவி வெப்பம் மூலம் சுத்தப்படுத்த வேண்டும் என்பது மிக முக்கியமான விதியாகும்.
இந்தச் சுத்தப்படுத்தும் வேலையை ஜப்பான் நாட்டு அதிகாரிகள் நேரில் வந்து, அவர்களின் நேரடிப் பார்வையில் இந்தியாவில் உள்ள ஆலைகளில் செய்ய வேண்டும்.
ஆனால், இந்த வருடம் இந்தியாவில் உள்ள சில குறிப்பிட்ட ஆலைகளில் இந்தச் சுத்தப்படுத்தும் முறைக்கான கட்டமைப்பு, சரியாக வேலை செய்யவில்லை என்று ஜப்பான் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஒரு குறைபாட்டிற்காக, தவறு நடந்த ஆலைகளை மட்டும் தடை செய்யாமல், ஒட்டுமொத்த இந்திய மாம்பழ இறக்குமதிக்குமே ஜப்பான் அரசு அதிரடியாகத் தடை விதித்துள்ளது.
இதனால், இந்தியாவில் இருந்து இனி எந்தவொரு மாம்பழத்தையும் ஜப்பானுக்கு அனுப்ப முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இது இந்திய மாம்பழ வியாபாரிகளுக்குப் பெரிய கவலையையும் அதிர்ச்சியையும் தந்துள்ளது.

தற்போது பல மாநிலங்களில் மாம்பழ சீசன் மிகத் தீவிரமாக இருக்கும் வேளையில், ஜப்பானுக்கு மாம்பழங்களை அனுப்ப முடியாமல் போனது பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சிக்கலைச் சரிசெய்ய இந்திய தாவர தனிமைப்படுத்தல் வாரியம் அதிகாரிகள் இப்போது தீவிரமாக வேலை செய்து வருகிறார்கள்.
ஆலைகளில் உள்ள குறைகளைச் சரிசெய்து, ஜப்பான் அரசுக்கு ஒரு புதிய திட்ட அறிக்கையை அனுப்ப அதிகாரிகள் தயாராகி வருகிறார்கள். இந்தச் சிக்கல் விரைவில் தீர்க்கப்பட்டு ஜப்பான் கடைகளில் மீண்டும் இந்திய மாம்பழங்கள் விற்பனைக்கு வரும் என்று அதிகாரிகள் நம்புகிறார்கள்.





















