செய்திகள் :

`இயற்கை எனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை நான் சரியாக நடிக்க விரும்புகிறேன்'- ஈரோடு நாடகக் கொட்டகை சதீஷ்

post image

சினிமாக்கள் இல்லாத காலங்களில் மக்கள் நாடகங்களையே விரும்பி ரசித்து பார்த்து வந்தனர். பம்மல் சம்பந்த முதலியார், சங்கரதாஸ் சுவாமிகள், சபாபதி முதலியார் போன்றோரின் நாடகப் பணி அளப்பரியது. நடிக்கும் நாடகக் கலைஞர்கள் நடிப்பை உள்வாங்கி நடிப்பதோடு மட்டுமல்லாமல் பார்த்து ரசிக்கும் மக்களையும் ஒவ்வோர் உணர்வுகளாலும் ஈர்த்துவிடுவார்கள், நாடகக் கலைஞர்கள். இன்று நாடகத் துறை நலிவடைந்ததுபோல் காணப்பட்டாலும் நிறைய நாடகக் கலைஞர்கள் நாடகத்துறைக்கு புதுப்பொலிவு கொடுத்து வருகின்றனர்.

அதில் முக்கியமானவர் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ். இவர் ஈரோட்டில் உள்ள அம்மன் கலைக் கல்லூரியில் படித்து வரும்போதே மாணவர்களை வைத்து அம்மன் கானா மற்றும் கலைக்குழுவை கல்லூரியிலேயே அமைத்து விழிப்புணர்வு வீதி நாடகங்களை, ஈரோடு சுற்றுவட்டாரத்தில் நடத்தி அசத்தி வந்தார். படிப்பு நிறைவடைந்ததும் இவர் சென்னை கூத்துப்பட்டறையில் சேர்ந்து மூன்றாண்டுகள் பயிற்சி பெற்றார். பின்னர் ஈரோடு நாடகக் கொட்டகை என்னும் சிறு குழுவை அமைத்து மாணவர்களுக்கு இலவசமாக நாடகம் கற்றுத் தருகிறார்.

சதிஷ்

இது குறித்து ஈரோடு நாடகக் கொட்டகையில் உள்ள நாடகக் கலைஞர் பிரனேஷ் முருகேசனிடம் நாடகக் கொட்டகையின் செயல்பாடுகள் குறித்து உரையாடினோம்.

"இங்கு மாதம் இரண்டு, மூன்று நாடகங்களை நிகழ்த்துவோம். ஈரோடு, புதுச்சேரி, மதுரை, கோவை, கேரளா, சென்னை போன்ற இடங்களில் நடைபெறும் 'தியேட்டர் ஃபெஸ்டிவல்ஸ்' போன்ற நிகழ்வுகளிலும் மற்றும் பல இடங்களிலும் வீதி நாடகங்கள் நிறைய நிகழ்த்துவோம். மேலும் சதீஷ் அவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் 'தியேட்டர் இன் எஜுகேஷன்' என்ற பெயரில் மாணவர்களுக்கு நாடகக் கலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அரசு நிகழ்ச்சிகளிலும் வீதி நாடகங்களாக நடிப்பதற்கு அழைப்பார்கள். அதற்கும் நாடகங்கள் தயாரித்து நடிப்போம். ஈரோடு நாடகக் கொட்டகையில் நாங்கள் நடத்தும் நாடகங்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு. எழுத்தாளர்கள் மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த பலரும் இங்கு வந்து நாடகங்களைப் பார்த்துச் செல்வார்கள். போன வாரம்கூட மதுரையில் உள்ள 'திகழ் ப்ரோடக்ஷ்ன்' என்னும் நாடகக் குழுவிலிருந்து வந்து நாடகம் நிகழ்த்தினார்கள்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் உள்ள எழுத்தாளர்களின் நாடகங்கள், பத்ம ஶ்ரீ.ந.முத்துசாமி அய்யாவின் நாடகங்கள் என பல்வேறு வகையான நாடகங்களையும் நடித்து வருகிறோம். 'உடல்மொழி நாடகம்' என்ற வகையிலும் நாடகம் நிகழ்த்துகிறோம். ஒரு சில நாடகங்கள் 50 ஷோக்களுக்கும் மேலாகச் சென்றிருக்கிறது. ஈரோடு மட்டுமல்லாமல் மக்கள் வரவேற்பு பெற்ற பல நாடங்களை வெளியூரிலும் நிகழ்த்துகிறோம்.

2021-ல் 'டக்குனு ஒரு கதை' 70 ஷோக்கும் மேலாகச் சென்றிருக்கிறது. சமூக வலைதளங்களில் நாங்கள் எங்கள் செயல்பாடுகளைப் பதிவு செய்வதால் அதன் மூலம் நிறைய பேர் எங்களை அறிந்து நாடகம் போட அழைப்பார்கள். மேலும் சென்னை கலைக்குழு தயாரிப்பில் நடிகை ரோகினியின் 'வனப்பேச்சி' என்னும் நாடகத்தை நாடகவியலாளர் பிரளயன் அவர்கள் இயக்கியிருந்தார். அந்நாடகத்தை ஈரோட்டில் ஒருங்கிணைத்தோம்." என்றார்.

ஈரோடு நாடகக் கொட்டகை நிறுவனர் சதீஷிடம் பேசினோம்,

"முத்துசாமி அய்யா மற்றும் அவரது மகன் நடேஷ் முத்துசாமி அவர்களால் ஈர்க்கப்பட்டு இந்த ஈரோடு நாடகக் கொட்டகையை பத்ம ஶ்ரீ ந.முத்துசாமி நினைவரங்கமாகத் தொடங்கினேன். எனது சொந்த ஊர் வடலூர். ஈரோட்டில் உறவினர் வீட்டில் தங்கி இளங்கலை ஆங்கிலம் படித்தேன். படிக்கும்போதே நிறைய நாடகங்களை எழுதி நடித்தேன். பிறகு சென்னையில் உள்ள கூத்துப் பட்டறையில் மூன்று ஆண்டுகள் நாடகம் கற்றேன்.

ஈரோடு ரயில் நிலையம் பக்கத்தில் எங்கள் நாடகக் கொட்டகை உள்ளது.

இது சிறார்களுக்கான நாடகக் குழுவாக உருவானது. நிறைய பொருளாதார நெருக்கடி இருந்தாலும், எங்கள் அரங்கத்திற்கான வாடகை 10,000 ரூபாயைச் சரியாக வழங்கி விடுவேன். இங்கு கற்க நினைப்பவர்கள் அவர்களே அவர்களின் விருப்பப்படி இங்கு தங்கிக் கொள்கிறார்கள். இது ஒரு தனி வாழ்க்கை. மனிதனை இவ்விடம் மொத்தமாக மாற்றுகிறது. இங்கிருக்கும் வேலைகளையும் மாணவர்களே பிரித்துப் பகிர்ந்து செய்து கொள்கிறார்கள்.

சமையலும் அவர்களே சேர்ந்து செய்து கொள்கிறார்கள். இந்த கொட்டகை குழந்தைகளுக்கான ஓர் அரங்கமாக இருப்பதால் ஆரோக்கியமான உணவு, நல்ல பழக்கவழக்கங்கள் இவையனைத்தும் மாணவர்களை மாற்றுகிறது. பிழைப்பு நோக்கிச் செல்லும் இச்சமூகத்தில் நாடகம் அவர்களை மாற்றுகிறது."

இலவசமாக மாணவர்களுக்கு எப்படி ஈரோடு நாடகக் கொட்டகையை நடத்துகிறீர்கள்...?

"ஈரோடு நாடகக் கொட்டகையில் தங்கும் மாணவர்களுக்குச் சாப்பாடு, அரங்கம் வாடகை அனைத்தும் நாங்கள் விழிப்புணர்வுக்காக வெளியே சென்று வீதி நாடகம் நிகழ்த்தி, அதில் கிடைக்கும் சிறு தொகையை வைத்தே சமாளித்து வருகிறோம். இந்தச் சிறு வருமானமும் தொடர்ச்சியாக வருமா என்றால் இல்லை... கடவுளிடம் வேண்டி நிற்பதுபோல் காத்து நிற்க வேண்டும். மேலும் ஒரு சில கலை ஆர்வலர்கள் சில உதவிகளைச் செய்வார்கள்.

அதை வைத்தே இந்த நாடகக் கொட்டகையை நடத்தி வருகிறோம். அரங்கத்தை 'Black Box Format'-ல் அமைத்திருக்கிறோம். வெளிநாடுகளில் இப்படி நிகழ்த்தினால் அடுத்து 'Party Time' என்று நடத்துவார்கள். ஆனால் எங்கள் கொட்டகையில் அப்படி கிடையாது. இங்கு தற்போது 12 மாணவர்கள் இருக்கிறார்கள். அதில் 8 மாணவர்கள் பள்ளி மாணவர்கள். ஹேமநாதன் என்கிற எட்டாம் வகுப்பு மாணவன் பெங்களூரில் வெளியிடப்பட்ட 'The Tablet' என்ற படத்தில் நடித்திருக்கிறார். மேலும் சிறார்கள் ஒரு சில நல்ல கதையாக சினிமாத்துறையிலிருந்து இயக்குநர்கள் அழைத்தால் பெற்றோரின் ஒத்துழைப்போடு சென்று நடிப்பார்கள்."

நாடகம் ஒருவரது வாழ்வில் என்ன செய்யும்?

"மனிதனை மனிதனாக மாற்றுவதே நாடகம். பல்வேறுதரப்பட்ட கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் ஒருவர் தனக்குள் பொதித்து கலை அரங்கிற்குள் ஒரு கலை அமைப்பைக் கொண்டு வருகிறார். இவ்வாறு நிகழ, தன்னையே கவனிக்கும் திறன் பிறகு உருவாகிறது. நாடகத் துறைக்குள் ஒருவன் நுழையும்போது தனக்குள் நிகழும் மாற்றத்தைக் காண்கிறான். என்னையும் மாற்றியது நாடகத் துறையே.

தற்போது ஈரோடு நாடகக் கொட்டகை தயாரிப்பில் எழுத்தாளர் கௌதம சித்தார்தன் அவர்கள் 40 ஆண்டுகளுக்கு முன்பாக எழுதிய "தம்பி"என்ற சிறுகதையை நாடகமாக வடிவமைத்து நிகழ்த்திவருகிறோம்.

இயற்கை எனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை நான் சரியாக நடிக்க விரும்புகிறேன். முத்துசாமி ஐயாவின் மகன் நடேஷ் சாரும் எனக்கு மிகச் சிறந்த ஊக்குவிப்பாளராக இருந்தார். என்னை கண்டுபிடித்து உருவாக்கியது அவர் தான். அவரின் மூலமாகவே நாடகத் துறையில் இன்னும் முழு வீச்சோடு ஈடுபடத் துவங்கினேன். இலக்கில்லாத வாழ்க்கையாகவே என் வாழ்க்கை தற்போது நகர்கிறது. எனக்கு இது பிடித்திருக்கிறது, திருப்தியோடு இருக்கிறேன்." என்று மன நிறைவுடன் தெரிவித்தார்.

இரண்டு முறை சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் புவியரசு, கோவையில் காலமானார்!

கோவை மாவட்டம், பெரியநாய்க்கன்பாளையம் அருகேயுள்ள பிரஸ் காலனியைச் சேர்ந்தவர் கவிஞர் புவியரசு (95). கலை இலக்கிய செயல்பாடுகளில் ஆளுமையாக இருந்த இவர் கவிதை, மொழிபெயர்ப்பு, நாடகம் சார்ந்த 100-க்கும் மேற்பட்... மேலும் பார்க்க

Mimesis: மனித அனுபவங்களின் டிஜிட்டல் பிரதிபலிப்பு: சிந்திக்க வைக்கும் ‘மிமிசிஸ்’ ஆர்ட்!

இன்று நாம் எடுக்கும் புகைப்படங்கள், பகிரும் தகவல்கள், சமூக ஊடகப் பதிவுகள் என அன்றாட வாழ்க்கையின் பெரும்பாலான தருணங்கள் டிஜிட்டல் வடிவில் பதிவு செய்யப்பட்டு சேமிக்கப்படுகின்றன.காலப்போக்கில் இந்தப் பதிவ... மேலும் பார்க்க