தாராவியைக் நினைவூட்டும் நெரிசலும் 'ஆவோ, ஆவோ' என்ற எளிய குடும்பத்தின் இன்முகமும்
ஈபிள் கோபுரம் சென்ற சாமியார்கள்: `சமத்துவத்தை விட்டுத்தர முடியாது' - பெண் ஊழியர்கள் போராட்டம்!
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகே 'BAPS' (போச்சசான்வாசி அக்சர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா) அமைப்பின் புதிய கோயில் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. இதையொட்டி, அந்த அமைப்பைச் சேர்ந்த சுமார் 100 பேர் கொண்ட குழுவினர் சனிக்கிழமை ஈபிள் கோபுரத்தைப் பார்வையிடச் சென்றனர்.
அப்போது, அக்குழுவினர் செல்லும் பாதைகளில் பெண் ஊழியர்கள் யாரும் பணியில் இருக்கக் கூடாது என்றும், அவர்களுக்குப் பதிலாக ஆண் ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்றும் ஈபிள் கோபுர நிர்வாகத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில் பெண் ஊழியர்கள் அப்பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டதாகத் தொழிற்சங்கப் பிரதிநிதி டயான் டாவோய்ன் குற்றம்சாட்டியுள்ளார். பாலின பாகுபாட்டை வெளிப்படுத்தும் இந்தச் சம்பவத்திற்குப் பிரான்ஸ் நாட்டின் மூத்த தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பிரெஞ்சு தேசிய சட்டமன்றத் தலைவர் யேல் பிரவுன்-பிவெட் தனது எக்ஸ் பக்கத்தில், ``வெளிநாட்டுப் பார்வையாளர்களின் கோரிக்கைகளுக்காகப் பெண்கள் ஒதுங்கி நிற்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
விருந்தினர்களை வரவேற்பதற்காகப் பிரான்ஸ் நாட்டின் சமத்துவ மதிப்பீடுகளை விட்டுக்கொடுக்க முடியாது" எனக் குறிப்பிட்டுள்ளார். பாரிஸ் துணை மேயர் இம்மானுவேல் கிரிகோயர், ``ஊழியர்களின் கோபம் நியாயமானது. இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.
ஈபிள் கோபுரத்தைச் நிர்வகிக்கும் 'SETE' நிறுவனத்தின் தலைவர் ஆரியல் வேல் மற்றும் நிர்வாகத்தினர் கூறுகையில், ``பார்வையாளர்கள் தரப்பில் பெண்களுடனான தொடர்பைக் குறைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டது உண்மைதான். அத்தகைய நிபந்தனைகளை ஏற்றிருக்கக் கூடாது." எனத் தவறை ஒப்புக்கொண்டு ஊழியர்களிடம் மன்னிப்பு கோரினர்.

இந்த சம்பவம் குறித்து பேசிய BAPS அமைப்பு, ``பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவே ஈபிள் கோபுர நிர்வாகத்துடன் ஆலோசித்து அதிகாலை நேரத்தில் பார்வையிட்டோம். யாருக்கும் அனுமதி மறுக்கப்பட்டதாகத் தங்களுக்குத் தெரியாது. இந்தச் சர்ச்சையால் மனவேதனை அடைந்தவர்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறோம்." என்றனர். இந்தச் சம்பவம் தொடர்பான ஊழியர்களின் போராட்டத்தில், ஈபிள் கோபுரம் திங்கள்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டது.













