'மெரினா, விஜய், ஆளுநர்..' கடும் வாக்குவாதத்தில் முடிந்த பாலன் இல்ல போராட்டம்? - ...
உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: வென்று சாதனை படைத்த அனஹத் சிங்! - யார் இவர்?
கனடாவின் நயாகரா ஆன் தி லேக் நகரில் சனிக்கிழமையன்று 2026 உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில்,எகிப்து வீராங்கனையான ருகையா சேலமை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி, இந்தியாவின் முதல் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியனாக "அனஹத் சிங்" உருவெடுத்துள்ளார்.
முதல் நிலை வீராங்கனையான அனஹத் சிங் தனது அசாத்திய ஆட்டத்தின் மூலம் இரண்டாம் நிலை வீராங்கனையான ருகையா சேலமை 3-0(11-3,11-7,11-9)என்ற கணக்கில் தோற்கடித்து, எகிப்தின் 13 ஆண்டுக்கால தொடர் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
2005 ஆம் ஆண்டில் "ஜோஷ்னா சின்னப்பா" ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் இறுதிவரை சென்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். அதன் பிறகு 21 ஆண்டுகள் கழித்து தற்போது அனஹத் சிங் அவரின் சாதனையை விட ஒரு படி மேலேறி பட்டம் வென்று இந்த உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
பட்டத்தை வென்றே ஆக வேண்டும் என்ற நோக்கில் இந்த தொடர் முழுவதும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அனஹத் சிங், விளையாடிய ஆறு ஆட்டங்களில் இரண்டு ஆட்டங்களை மட்டுமே இழந்தார். மேலும் தனது முதல் முன்று ஆட்டங்களில் ஒரு கேமை கூட இழக்காமல் வெற்றி பெற்றார்.

மூத்தோர் பிரிவு PSA பயணத்தில் உலகத் தரவரிசையில் 20 ஆவது இடத்தில் உள்ள இவர், ஆஸ்திரேலியாவின் லில்லி வில்சனை 3-0 என்ற கணக்கில் தோற்கடித்து முதல் வெற்றியை பதிவு செய்தார். பின்னர் சீனாவின் புய் யின் குளோ லோ(Pui yin Chloe lo) மற்றும் மலேசியாவின் டாய்ஸ் யே சான் லீ(Doyce ye san lee)ஆகியோரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
மேலும் ஹபிபா ரிஸ்க்கை (3-1) என்ற கணக்கிலும், அரையிறுதியில் பார்ப் சமேஹை(3-1) என்ற கணக்கிலும் வீழ்த்திய அவர் இறுதியாக சேலமை தோற்கடித்தார்.இவர் தொடர்ந்து மூன்று எகிப்திய வீராங்கனைகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பல ஆண்டுகளாக எகிப்திய வீராங்கனைகளே பட்டத்தை வென்றிருந்தனர். அனஹத் சிங்-ன் வெற்றி, பெண்கள் ஒற்றையர் பிரிவில் எகிப்து கொண்டிருந்த ஆதிக்கத்தை அறுத்தெரிந்தது. 2010-இல் அமண்டா சோபிக்குப் பிறகு, உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்ற எகிப்து நாட்டைச் சாராத முதல் வீராங்கனை என்ற பெருமையையும் அனஹத் பெற்றார்.

கடந்த ஆண்டு கெய்ரோவில் நடைபெற்ற ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். மேலும் 2019 இல் பிரிட்டிஷ் ஜூனியர் ஓபனில் U11 பட்டத்தை வென்ற பிறகு சிங் முதன்முதலில் புகழ் பெற்றார். 2021 இல், எகிப்தைச் சேர்ந்த ஜெய்தா மரேயை தோற்கடித்து அமெரிக்க ஜூனியர் ஓபன் பட்டத்தை வென்றார். அடுத்த ஆண்டு, அவர் ஜெர்மன் ஜூனியர் ஓபன், டச்சு ஜூனியர் ஓபன் மற்றும் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் U15 பட்டத்தை வென்றார்.14 வயதில், 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய இளையவர் ஆனார்.
தற்போது தனிநபர் பிரிவில் பதக்கம் வெல்ல இந்தியா 15 ஆண்டுகளாகக் காத்திருந்த நிலையை முடிவுக்குக் கொண்டுவந்தார். இந்த ஆண்டு, இந்தியாவின் முதல் ஜூனியர் உலக சாம்பியனாக உருவெடுத்து அவர் பெண்களுக்கு ஒரு உத்வேகத்தையும், ஸ்குவாஷ் போட்டியின் சாராம்சத்தையும் இந்த வெற்றியின் மூலம் முன்னெடுத்துள்ளார்.


















