Kabaddi: மீண்டும் உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் கபடி அணி - குவியும் வாழ்த்து...
எத்தியோப்பியா எரிமலை வெடிப்பு; வட இந்தியாவை நோக்கி நகரும் புகை மண்டலம் - விமான சேவைகள் பாதிப்பு
எத்தியோப்பியாவில் நிகழ்ந்த மாபெரும் எரிமலை வெடிப்பால், கண்ணூரில் இருந்து அபுதாபிக்குப் புறப்பட்ட இண்டிகோ விமானம் 6E 1433, திங்கள்கிழமை அன்று குஜராத்தின் அஹமதாபாத் நகருக்குத் திருப்பி விடப்பட்டுள்ளது.
இது வடகிழக்கு ஆப்பிரிக்காவில் பதிவுசெய்யப்பட்ட மிகவும் அசாதாரணமான வெடிப்புகளில் ஒன்று என அறிவியலாளர்கள் கருதுகின்றனர். இதனால் விமானப் போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளது. பல்வேறு ஏர்லைன்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அஹமதாபாத்தில் தரையிறங்கிய பயணிகளை கண்ணூருக்குத் திரும்ப அழைத்துச் செல்ல மாற்று விமான சேவையை இண்டிகோ நிறுவனம் இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
விமான நிறுவனங்கள் அலர்ட்!
சுமார் 10,000 ஆண்டுகளில் முதல் முறையாக, எத்தியோப்பியாவின் ஹெய்லி குப்பி (Hayli Gubbi) எரிமலை ஞாயிற்றுக்கிழமை (நவ. 23) அன்று வெடித்ததில் ஏற்பட்ட சாம்பல் புகை மண்டலம் வட இந்தியாவை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. இது அப்பகுதி வழியாகச் செல்லும் விமானப் பாதைகளுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது.
இந்திய விமானப் போக்குவரத்து அதிகாரிகளும் விமான நிறுவனங்களும் இன்று மாலை முதல் விமானப் போக்குவரத்தில் ஏற்படக்கூடிய தாக்கத்தை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். சில விமானங்கள் ஏற்கெனவே சாம்பல் புகையைத் தவிர்க்க தங்கள் வழித்தடங்களை மாற்றியுள்ளன.
Here we observe the ash plume from the first recorded volcanic eruption from Hayli Gubbi Volcano in Ethiopia in 10,000+ years! This is the northern end of the East African Rift Valley, a geologic spreading center driven by the Great African Superplume. pic.twitter.com/wksMnbfEI4
— Stefan Burns (@StefanBurnsGeo) November 23, 2025
அகாசா ஏர் நிறுவனம் (Akasa Air) ஒரு ஆலோசனையில், சர்வதேச விமானப் போக்குவரத்து நெறிமுறைகளின் படி எரிமலை செயல்பாட்டை கூர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது. மேலும், பயணிகளின் பாதுகாப்புதான் தங்களின் 'முதன்மையான முன்னுரிமை' என்றும் அது கூறியுள்ளது.
ஓரிரு ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் வெடிப்பு!
எத்தியோப்பியாவின் எர்டா அலெ மலைத்தொடரில் அமைந்துள்ள ஹெய்லி குப்பி எரிமலை, ஞாயிற்றுக்கிழமை காலை வானத்தில் உயரமாகச் சாம்பல் மற்றும் சல்பர் டை ஆக்சைடு வாயுவின் தூண்களைக் கக்கியுள்ளது.
துலூஸ் எரிமலை சாம்பல் ஆலோசனை மையம் (Toulouse Volcanic Ash Advisory Centre) செயற்கைக்கோள் மூலம் நடத்திய மதிப்பீடுகளில், இந்த சாம்பல் புகை 10 கி.மீ முதல் 15 கி.மீ உயரம் வரை எழுந்து செங்கடலைக் கடந்து கிழக்கு நோக்கிச் செல்வதாக தெரியவந்துள்ளது.
இந்தச் சாம்பல் மேகம் ஏற்கனவே ஓமன் மற்றும் எமான் பிராந்தியங்களைப் பாதித்துள்ளது; மேலும், சுற்றுச்சூழல் மற்றும் விமானப் போக்குவரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
'கலீஜ் டைம்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ள தகவலின்படி, ஓமன் சுற்றுச்சூழல் ஆணையம் (Oman’s Environment Authority) எரிமலை வாயு மற்றும் சாம்பலால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து எச்சரித்துள்ளது.
எரிமலையின் இருப்பிடம் வெகு தொலைவில் இருந்தாலும், வலுவான வெடிப்பினால் சாம்பல் புகை வணிக விமானங்கள் பயணிக்கும் உயரத்தை எட்டியுள்ளது. ஏமன் மற்றும் ஓமன் முழுவதும் பரவி மேலும் கிழக்கு நோக்கிச் செல்வதால், இந்தியாவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


















