கரூர் துயர சம்பவம்: த.வெ.க முக்கிய நிர்வாகிகள் சி.பி.ஐ விசாரணைக்கு ஆஜர்
திருவாரூர்: கோயிலுக்குள் புகுந்த மழை நீர்; குளமாக மாறிய வயல்வெளி - விவசாயிகள் கவலை
திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில் திருத்துறைப்பூண்டியில் 11 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகியது.

திருத்துறைப்பூண்டியில் பிறவி மருந்தீஸ்வரர் கோயில் பிரசித்தி பெற்றது. தொடர் மழையால் இக்கோயிலுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இதையடுத்து, நகராட்சி சார்பில் கோயிலில் புகுந்த மழை நீரை மோட்டார் மூலம் வெளியேற்றினர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மழை பெய்வதுடன் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. ஆபத்தை உணராமல் பலர் ஜாலியாக கடற்கரையில் கரையில் குளித்தனர்.
நாகை மாவட்டத்தில் விவசாயிகள் சுமார் 1,62,000 ஏக்கர் பரப்பளவில் சம்பா, தாளடி நெற்பயிர் நடவு செய்திருந்தனர். தொடர் கன மழையில், நாகை, நாகூர், பாலையூர், திருமருகல் உள்ளிட்ட பகுதிகளில் இளம் சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
குறிப்பாக கடந்த 3 நாட்களாக வயலில் மழை நீர் வடியாமல் தேங்கி நின்றதால் நெற்பயிர் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மன்னார்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை நீரில் நெற்பயிர் மூழ்கியுள்ளன. டெல்டாவில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெற்பயிர் மழை நீரில் மூழ்கியிருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.















