கரூர் துயர சம்பவம்: த.வெ.க முக்கிய நிர்வாகிகள் சி.பி.ஐ விசாரணைக்கு ஆஜர்
தஞ்சாவூர்: `குளம் போல் மாறிய வயல், நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்' - தொடர் மழையால் விவசாயிகள் வேதனை
டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
கோவில், வயல் உள்ளிட்ட பல இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாக வயல்களில் மழைநீர் தேங்கியதால் குளம் போல மாறி, நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

தஞ்சாவூர் அருகேயுள்ள அம்மாப்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், வயல்களில் மழைநீர் தேங்கியதால் வயல்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தன. விவசாயிகள் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களை நடவு செய்திருந்தனர்.
இந்நிலையில், பெய்த கனமழையால் நடவு செய்யப்பட்டு சுமார் ஒரு மாதம் ஆன நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த செந்தில்குமார் கூறுகையில், “அம்மாப்பேட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்டிருந்தது. கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் வயல்களில் மழைநீர் தேங்கி நின்றது.
கிட்டத்தட்ட இடுப்பளவு தண்ணீர் வயல்களில் தேங்கியுள்ளது. இதில் நெற்பயிர்கள் மூழ்கியதால் தற்போது அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. பாசன வாய்க்கால்கள், வடிகால்கள் முறையாக தூர்வாரப்படவில்லை. வயல்களை ஒட்டியுள்ள வடிகால்கள் தூர்வாரப்படாததால் மழைநீர் வடிவதற்கு வாய்ப்பில்லாமல் போனது. இதுவே மழைநீர் தேங்குவதற்குக் காரணமாகியுள்ளது.
பாசன வாய்க்காலும், வடிகால்களும் முறையாக தூர்வாரப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். அரசு இதனை கவனத்தில் எடுத்துக்கொள்ளாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இடுப்பளவு தண்ணீரில் பயிர்கள் மூழ்கியிருப்பதால், நிச்சயம் பயிர் பாதிப்பு ஏற்பட்டு விவசாயிகள் இழப்பைச் சந்திப்பார்கள்” என்றார்.

இதேபோல் பட்டுக்கோட்டை அருகே உள்ள புதுக்கோட்டை ஊராட்சி எல்லைக்குள் இருக்கும் செல்லிக்குறிச்சி ஏரி 320 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையினால் ஏரி முழுமையாக நிரம்பியது. உபரி நீர் அதிக அளவில் வாய்க்கால் வழியாக வெளியான நிலையில், அதிராம்பட்டினம் மின்வாரிய அலுவலகம் அருகே உடைப்பு ஏற்பட்டது. இதனால் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.















