கரூர் துயர சம்பவம்: த.வெ.க முக்கிய நிர்வாகிகள் சி.பி.ஐ விசாரணைக்கு ஆஜர்
IND vs SA: பலவீனமான பேட்டிங் வரிசை; பூடகமாக விரக்தியை வெளிப்படுத்தும் கருண் நாயர்!
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கும் சூழலில், அணியில் இடம்பெறாத இந்திய பேட்ஸ்மேன் கருண் நாயர் சமூக வலைத்தளத்தில் தனது விரக்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.
கருண் நாயர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்றார். ஆனால் அதன்பிறகு அணியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் தனது எக்ஸ் வலைத்தளத்தில், "சில கண்டிஷன்கள் (மைதான சூழல்) உங்களுக்கு நன்றாக தெரிந்த உணர்வைக் கொடுக்கும் - ஆனால் அங்கு இல்லாததன் மௌனம் வலியை ஏற்படுத்தும்" எனப் பதிவிட்டுள்ளார்.
Some conditions carry a feel you know by heart — and the silence of not being out there adds its own sting.
— Karun Nair (@karun126) November 24, 2025
இதனை அவர் அணியில் எடுக்கப்படாததன் விரக்தியை வெளிப்படுத்தும் பதிவாக கருதுகின்றனர்.
இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு ரஞ்சி டிராபியில் கலக்கி வருகிறார் கருண். கர்நாடகா அணிக்காக அவர் ஆடிய 5 போட்டிகளில், 100-க்கும் அதிகமான சராசரியுடன் 600 ரன்களுக்கு மேல் குவித்து அசத்தியுள்ளார். ஆனாலும், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடருக்கு அவர் தேர்வுக்குழுவால் பரிசீலிக்கப்படவில்லை.
மாறாக, கொல்கத்தாவில் நடந்த டெஸ்டில் வாஷிங்டன் சுந்தர் 3-வது இடத்தில் பேட்டிங் இறங்கி சோதிக்கப்பட்டார். கவுகாத்தி போட்டியில் சாய் சுதர்ஷனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

கழுத்து வலி காரணமாக கில் விலகியதால் இந்திய பேட்டிங் ஆர்டர் நிலைத்தன்மையற்று பலவீனமாக உள்ளது. சாய் சுதர்சன் மூன்றாவது இடத்திலும், துருவ் ஜுரேல் நான்காவது இடத்திலும் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.
கடைசியாக இங்கிலாந்துக்கு எதிராகத்தான் 2016-ஆம் ஆண்டு, முதல் இன்னிங்ஸில் 400-க்கும் அதிகமான ரன்களை விட்டுக் கொடுத்தப் பிறகு இந்தியா வெற்றி பெற்றது. சென்னையில் நடந்த அந்தப் போட்டியில் முச்சதம் அடித்து சாதனை படைத்தவர் இளம் கருண் நாயர்!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இங்கிலாந்து தொடரில் நாயருக்குக் குறுகிய காலமே வாய்ப்பளிக்கப்பட்டது. அந்தத் தொடரில், பேட்டிங் வரிசையில் அவர் மூன்றாவது இடம் மற்றும் ஆறாவது இடத்திற்கு மாற்றப்பட்டுக்கொண்டே இருந்தார்.
முன்னதாக, மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்கான இந்திய அணியில் இருந்து கருண் நாயர் நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து பிசிசிஐ-யின் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கரிடம் கேட்கப்பட்டபோது, அனுபவம் வாய்ந்த அவரிடம் இருந்து இன்னும் அதிகமாக எதிர்பார்த்ததாக ஒப்புக்கொண்டார்.

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்கத் தவறியிருக்கும் இந்தச் சூழலில், சாய் சுதர்சன், துருவ் ஜுரேல் போன்ற இளம் வீரர்களைப் பயன்படுத்தாமல், இந்தத் தொடரில் இந்தியாவின் நிலையைப் பொறுத்து, கருண் நாயர் போன்ற அனுபவம் வாய்ந்த ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்திருந்தால், அது இந்திய அணிக்குச் சிறப்பாக இருந்திருக்குமோ? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்புகின்றனர்.
ஏனெனில், தற்போது சொந்த மண்ணில் இரண்டாவது முறையாக ‘ஒயிட்வாஷ்’ ஆகும் அபாயத்தை இந்தியா எதிர்கொள்வதோடு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குச் செல்லும் வாய்ப்பையும் இழக்கும் நிலையில் உள்ளது.

















