`கழுத்தில் மாட்டிய டிராக்டர் டயர்' - அசௌகரியத்துடன் திரியும் காட்டு யானை; வனத்துறை நடவடிக்கை என்ன?
அசாம் மாநிலம் கோலாகாட் மாவட்டத்தில் உள்ள நுமாலிகர், பொகியல் பகுதியில் தேயிலைத் தோட்டம் இருக்கிறது. இந்தப் பகுதியில், கழுத்தில் டிராக்டர் டயர் மாட்டிக்கொண்ட நிலையில் காட்டு யானை ஒன்று உலா வந்த காட்சி அப்பகுதி மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மொரோங்கி வனப்பகுதியில் உணவு தேடி அலைந்த இந்த யானையைக் கண்ட பொதுமக்கள், வனத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். வனப்பகுதியில் கிடந்த டிராக்டர் டயரை யானை தனது தும்பிக்கையால் ஆர்வம் காரணமாகத் தூக்க முயன்றபோது, அது எதிர்பாராதவிதமாக அதன் கழுத்தில் நழுவி மாட்டிக்கொண்டிருக்கலாம் என்று வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
யானையின் கழுத்தில் டயர் மாட்டியிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த கும்டாய் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மிருணால் சைக்கியா, வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்து, மீட்புக் குழுவை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தார்.
மேலும், "யானை ஏற்கனவே மிகுந்த அசௌகரியத்தில் இருப்பதால், பொதுமக்கள் யாரும் அதை நெருங்கவோ அல்லது தொந்தரவு செய்யவோ வேண்டாம்" எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது வனத்துறை மீட்புக் குழுவினர் அந்த யானையின் நகர்வுகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். யானையின் உடல்நிலையைக் கவனமாக ஆய்வு செய்த பிறகே, ஆபத்தில்லாத வகையில் அதன் கழுத்தில் உள்ள டயரை அகற்றுவதற்கான பாதுகாப்பான வழிமுறைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












