`சுய மரியாதை முக்கியம்; லேட்டாக வந்தாலும், லேட்டஸ்ட்டாக வந்திருக்கிறார் வைத்திலி...
`சுய மரியாதை முக்கியம்; லேட்டாக வந்தாலும், லேட்டஸ்ட்டாக வந்திருக்கிறார் வைத்திலிங்கம்' - ஸ்டாலின்
அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னைக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் அணியான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தில் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், கடந்த வாரம் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த வைத்திலிங்கம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இது அரசியல் மட்டத்தில் பேசு பொருளானது. இந்நிலையில் இணைப்பு விழாவிற்கான ஏற்பாட்டை வைத்திலிங்கம் செய்தார்.
தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் இன்று மாலை வெல்லும் தமிழ்ப் பெண்கள் தி.மு.க. டெல்டா மகளிர் மாநாடு நடைபெறுகிறது. அதே பகுதியில் தனியாக பந்தல் அமைத்து இணைப்பு விழாவிற்கான ஏற்பாட்டை செய்தார் வைத்திலிங்கம். சுமார் 12 மணியளவில் மேடையேறினார் முதல்வர் ஸ்டாலின். வைத்திலிங்கம் தலைமையில், ஸ்டாலின் முன்னிலையில் 10,000 மாற்றுக்கட்சியினர் தி.மு.க -வில் இணைந்தனர். இதில் கனிமொழி, நேரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் பேசிய வைத்திலிங்கம், ``நமது முதலமைச்சர் இந்தியாவிற்கே வழிகாட்டுகின்ற அளவிற்கு பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்கள் இன்றைக்கு முதல்வரை மனதார வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல் புதுமைப்பெண் திட்டம், விடியல் பயணம், இப்படிப் பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.

இன்றைக்கு இந்த திராவிடத்தைக் கண்டாலே சிலருக்கு மனவேதனை. யாரும் இந்த திராவிட இயக்கத்தை அழிக்க முடியாது என்பதற்கு, இன்றைக்கு நமது முதல்வர் எதற்கும் துணிந்து, 'என்னுடைய உயிர் திராவிடம்தான்' என்று வாழ்ந்து கொண்டிருக்கின்றார். எப்போதும் நாம் அவருக்குத் துணையாக இந்த திராவிடத்தைக் காக்கப் பாடுபட வேண்டும். சிபி சக்கரவர்த்தி மடியில் விழுந்த புறா போல் இன்றைக்கு அவர் மடியில் நான் விழுந்திருக்கின்றேன்" என்றார்.
இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் பேச ஆரம்பித்தார். அப்போது எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரனிடம் கனிமொழி ஏதோ சொல்லிக் கொண்டிருக்க, கனிமொழி அருகில் அமர்ந்திருத்த கே.என்.நேரு, சைகை மூலம், கனிமொழியிடம் முதல்வர் அமர்ந்திருந்த நாற்காலியை காட்டி அதில் அமரச் சொன்னார்.
மறுத்த கனிமொழியிடம் மீண்டும் சொல்ல முதல்வரை காட்டி அந்த நாற்காலியில் அமர்வதை மறுத்து விட்டார். ஸ்டாலின் பேசியதாவது, "முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரால் இணைக்கப்பட்ட அனைவரையும் மனதார வரவேற்கிறேன். இந்த நிகழ்ச்சிக்கு வரும் வழியில் நான் பேச வேண்டிய அவசியமில்லை என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்த இணைப்பு விழாவில் கூடிய கட்டுக்கடங்காத கூட்டத்தை பார்த்த போது பேசவில்லை என்றால் அது சரியாக இருக்காது. அதனால் அனுமதி வாங்கி பேசுகிறேன்.

இது இணைப்பு விழாவா அல்லது மாநாடா என்று நினைக்கும் அளவிற்கு பிரமாண்டமாக அமைந்துள்ளது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தலைமையில் வைத்திலிங்கம் பணியாற்றி உள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க பிரிந்தது. சட்டமன்றத்தில் கூட வைத்திலிங்கம் கவலையுடன் தான் இருந்தார். இதனை நான் அப்போதே பார்த்தேன். சுய மரியாதை முக்கியம் என உணர்ந்து தற்போது வைத்திலிங்கம் தி.மு.க.வில் லேட்டாக இணைந்துள்ளார். லேட்டாக இணைந்தாலும் லேட்டஸ்டாக இணைந்து விட்டார்.
தேர்தல் நெருங்கி விட்டது. நாம் மிகப்பெரிய வெற்றி பெற போகிறோம். மக்களின் பேராதரவோடு மீண்டும் திராவிட மாடல் ஆட்சி தான். நமது ஆட்சியில் ஏற்கனவே பல சாதனைகளை படைத்து விட்டோம். இனி அந்த சாதனையை மிஞ்சும் அளவிற்கு மேலும் பல சாதனைகளை படைக்க போகிறோம். தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி" என்றார்.














