`சுய மரியாதை முக்கியம்; லேட்டாக வந்தாலும், லேட்டஸ்ட்டாக வந்திருக்கிறார் வைத்திலி...
இங்கிலாந்து தப்பிச் செல்லும் முயற்சி தோல்வி: மும்பையில் சிக்கிய மலேசியா கிரிமினல்கள்!
மலேசிய போலீஸாரால் தேடப்படும் கிரிமினல்களான ஸ்ரீதரன் சுப்ரமணியம், பிரதீப் குமார் செல்வராஜ், நவீந்திரன் ராஜ் குமரேசன் ஆகியோர் அங்கிருந்து தப்பித்து மும்பைக்கு வந்தனர். அவர்கள் மும்பையில் இருந்து இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் நகருக்கு விமானத்தில் சென்றனர். விமானம் மான்செஸ்டர் விமான நிலையம் சென்றவுடன் அவர்கள் மூன்று பேரும் மலேசிய அரசால் தேடப்படும் கிரிமினல்கள் என்று இமிகிரேசன் அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அங்கேயே அனுப்பவேண்டும் என்ற விதிப்படி 3 பேரும் மீண்டும் மும்பைக்கே அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்களது விமானம் மீண்டும் மும்பை வந்த பிறகுதான் அவர்களுக்கு தாங்கள் வசமாக சிக்கிக்கொண்டோம் என்று தெரிய வந்தது. அவர்களை பிடிக்க மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் வந்திருந்தனர். அவர்களுடன் மூன்று பேரும் தகராறு செய்து சண்டையிட்டனர்.

இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் தங்களை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து தகராறு செய்தனர். அவர்களை கூடுதல் பாதுகாப்பு படையினர் சேர்ந்து மடக்கி பிடித்து கைது செய்து பலத்த பாதுகாப்புடன் வைத்திருக்கின்றனர்.
அவர்கள் மீண்டும் தப்பிச்செல்லும் அபாயம் இருப்பதால் அவர்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவர்கள் மூன்று பேரும் எப்படி மும்பை வந்தனர் என்ற கேள்வி எழுந்துள்ளது. 3 பேரும் கைது செய்யப்பட்டு இருப்பது குறித்து மும்பை விமான நிலைய நிர்வாகம் மலேசிய போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து மலேசிய போலீஸார் அடுத்த 48 மணி நேரத்தில் மும்பை வந்து அவர்கள் மூன்று பேரையும் தங்களது காவலில் எடுத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
மூன்று பேரும் மலேசியாவில் கொலை, கொள்ளை என பல்வேறு கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். கடந்த ஆண்டு இது போன்ற கிரிமினல்களுக்கு எதிராக மலேசிய அரசு 'ஆப்ரேசன் ஜாக் ஸ்பாரோ' என்ற பெயரில் கிரிமினல்களை கைது செய்ய தொடங்கியது. இதையடுத்து மூன்று கிரிமினல்கள் மலேசிய போலீஸாரிடம் பிடிபடாமல் எப்படியோ மும்பைக்கு வந்துள்ளனர். அவர்கள் இங்கிலாந்து சென்று அங்கு தலைமறைவு வாழ்க்கை வாழலாம் என்று நினைத்தனர். ஆனால் இப்போது மலேசிய சிறையில் வாழவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.




















