செய்திகள் :

சென்னை: டி.பி.யில் துணை முதல்வர் படம்! கிளாம்பாக்கம் பஸ் நிலைய கடைகளை காண்பித்து லட்சங்களில் மோசடி

post image

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஏழுமலை என்பவர், சென்னை வடக்கு இணை கமிஷனரிடம் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, ``நான் பைஃனான்ஸ் தொழில் செய்து வந்தேன். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் அந்தத் தொழிலை நிறுத்தி விட்டேன். இந்தச் சமயத்தில் என்னுடைய நண்பர் பாண்டியராஜன் மூலம் திருவான்மியூரைச் சேர்ந்த தரணிகுமார் என்பவர் எனக்கு அறிமுகமானார்.

அவர் துணை முதல்வரின் போட்டோவை தன்னுடைய செல்போனின் டி.பி-யாக வைத்திருந்தார். அதை என்னிடம் காண்பித்த தரணிக்குமார், துணை முதல்வர் தனக்கு நண்பர் என்றும் அவரின் பெர்சனல் போன் நம்பர் தன்னிடம் இருப்பதாகவும் கூறினார். அதை உண்மையென நான் நம்பினேன். இந்தச் சமயத்தில் நான் வேறு பிசினஸ் செய்யும் மனநிலையிலிருந்த தகவலை தரணிகுமாரிடம் கூறியதும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கடைகளை எடுத்துத் தருவதாக அவர் என்னிடம் கூறினார்.

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம்

மேலும் அவர், ஒரு கடைக்கு ஆறு லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும். முதலில் அட்வான்ஸாக மூன்று லட்சமும், கடை கைக்கு வந்த பிறகு மீதமுள்ள மூன்று லட்சம் தர வேண்டும் என தரணிகுமார் தெரிவித்தார். அதற்கு சம்மதித்த நான் மூன்று லட்சம் ரூபாயை தரணிகுமாரிடம் கொடுத்த போது அந்தப் பணத்தை நான் கையால் தொட மாட்டேன் என்று தெரிவித்த அவர், இந்தப் பணத்தில் அதிகாரிகளுக்கு பங்கு கொடுக்க வேண்டும் என்றார்.

அதோடு பணத்தை தரணிகுமார், தன்னுடைய வங்கி கணக்குக்கு அனுப்பும்படி தெரிவித்தார். என்னைப் போல வண்ணாரப்பேட்டையில் கோழிக்கறிக்கடை நடத்தும் வெங்கடேஷ் என்பவரும் தரணிகுமாரிடம் கிளாம்பாக்கத்தில் கடை கேட்டிருந்தார். அதனால் இருவரும் சேர்ந்து 30.1.2024-ல் தரணிகுமாரின் வங்கி கணக்குக்கு 3 லட்சம் ரூபாயை அனுப்பி வைத்தோம். பணத்தைப் பெற்றுக் கொண்ட தரணிகுமார், ஒரு மாதத்தில் கடைக்கான ஒதுக்கீடு ஆர்டர் கிடைத்துவிடும் என்று கூறினார். அதற்காக ஆதார் கார்டு, இரண்டு போட்டோவையும் தரணிகுமார் என்னிடம் வாங்கிக் கொண்டார்.

பின்னர் தரணிகுமாரை என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரின் திருவான்மியூர் வீடும் பூட்டியிருந்தது. கிளாம்பாக்கத்தில் கடை ஒதுக்கீடு செய்வதாகக் கூறி என்னை ஏமாற்றிய தரணிகுமார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

ஏழுமலையை தொடர்ந்து வெங்கடேஷ், பாண்டியராஜன் என சிலர் தரணிகுமாரிடம் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய கடைக்காக சில லட்சங்களைக் கொடுத்து ஏமாந்திருக்கிறார்கள். அவர்களும் இணை கமிஷனரிடம் புகார்களை தனித்தனியாக கொடுத்திருக்கிறார்கள்.

மோசடி
மோசடி

புகார் கொடுக்க வந்த பாண்டியராஜனிடம் பேசினோம். ``நான் பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறேன். 2023-ம் ஆண்டு என்னுடைய கடைக்கு சாப்பிட வந்த தரணிகுமாருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர், என்னை நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று அடிக்கடி சொல்வார். 2024-ம் ஆண்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கடைகளை ஒதுக்கீடு செய்யும் அதிகாரிகள் தனக்குத் தெரியும் என தரணிகுமார் என்னிடம் கூறினார்.

பின்னர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு அழைத்துச் சென்று எந்தகடை வேண்டும் என காண்பித்தார். அதனால் அவர் மீது எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து எனக்கு தெரிந்த சிலரை தரணிகுமாருக்கு அறிமுகம் செய்து வைத்தேன். நாங்கள் அனைவரும் சேர்ந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கடையை பெற 9 லட்சம் ரூபாய் வரை தரணிகுமாரிடம் கொடுத்து ஏமாந்து நிற்கிறோம். தரணிகுமார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து எங்களின் பணத்தை மீட்டு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, ``புகார் கொடுத்தவர்கள் வங்கி மூலமாகவும் ரொக்கமாகவும் தரணிகுமாரிடம் பணத்தைக் கொடுத்திருக்கிறார்கள். அதுதொடர்பாக தரணிகுமாரிடம் விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

தரணிகுமாரின் பின்னணி குறித்து விசாரித்தபோது அவர், ஏற்கெனவே அ.தி.மு.கவில் முதல்வராக இருந்த ஒருவரின் மகன், எம்.பி-யாக இருந்தபோது அவரின் பெயரைச் சொல்லி ஏமாற்றும் வேலையில் ஈடுபட்டு வந்திருக்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரிடம் 8 லட்சம் ரூபாயை ஏமாற்றிய குற்றச்சாட்டில் சிக்கினார். இதுதவிர வி.வி.ஐ.பி-க்களுக்கு சில சட்ட விரோத செயல்களிலும் தரணிகுமார் ஈடுபட்டு வருகிறார். தற்போது சென்னையில் உள்ள மூத்த அமைச்சர் ஒருவரின் விசுவாசி என்று தன்னை அடையாளம் காட்டிக் கொடுத்து மோசடியில் ஈடுபட்டு வருகிறார். அதனால்தான் போலீஸார், எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்ற தகவலும் கிடைக்கிறது. இந்த முறையாவது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது மட்டுமே கேள்வி?

கோவை: கை, கால்கள் கட்டிப் போட்டு மூதாட்டி கொலை... நகைகள் திருட்டு; நேபாள பணிப்பெண்ணுக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம், திருச்சி சாலை நஞ்சுண்டாபுரம் பகுதியில் பார்சன் குடியிருப்பு உள்ளது. அங்கு கேரளாவைப் பூர்வீகமாக கொண்ட ராம்குமார் குட்டி என்கிற ஆயுர்வேத மருத்துவர், தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ... மேலும் பார்க்க

`கொடநாடு வழக்கை இன்னும் முடிக்காமல் இருப்பது ஏன்?'- சி.பி.சி.ஐ.டி‌-யிடம் கேள்வியெழுப்பிய நீதிமன்றம்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரின் தோழி சசிகலா ஆகியோருக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் 2017- ம் ஆண்டு ஏப்ரல் 23- ம் தேதி நள்ளிரவு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அது தொடர்பான ... மேலும் பார்க்க

தருமபுரி: பெற்ற குழந்தையை குப்பையில் வீசிய கல்லூரி மாணவி; விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்

பிறந்து சிலமணி நேரமே ஆன பெண் சிசுவை குப்பையில் வீசிச்சென்ற கல்லூரி மாணவியின் செயல், தருமபுரியில் அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில் தற்போது அந்த மாணவி மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறை விசாரித்து வருகி... மேலும் பார்க்க

`மானாமதுரை சம்பவம் சாதிய மோதலா?' - விளக்கமளித்த சிவகங்கை எஸ்.பி!

நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் நடந்த கொடூரத்தின் ஈரம் இன்னும் காயவில்லை. அதற்குள், அதே பாணியில் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூர் என்ற கிராமத்தில் ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறியிர... மேலும் பார்க்க

Holi: பாட்டி மீது கலர் தண்ணீரை அடித்த பேரன்; கோபமான பாட்டியால் விபரீதத்தில் முடிந்த ஹோலி விளையாட்டு

ஹோலி பண்டிகையின்போது ஒருவர் மீது ஒருவர் கலர் பொடியைத் தூவுவது வழக்கம். அவ்வாறு கலர் பொடியைத் தூவுவது சில நேரங்களில் சண்டையில் முடிந்துவிடும். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகில் உள்ள கொராடி என்ற இடத்... மேலும் பார்க்க

சேலம்: "தாழ்த்தப்பட்ட உன்னைத் திருமணம் செய்ய முடியாது" - காதலனின் சாதி ஆணவத்தால் மாணவி தற்கொலை

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியைச் சேர்ந்த சக்திவேலின் மகன் கார்த்திகேயன். மாற்று சாதியைச் சேர்ந்த கார்த்திகேயன், சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு தமிழ் இலக்கியம் பயின்ற... மேலும் பார்க்க