ஆற்காடு பள்ளி மாணவியைக் கர்ப்பமாக்கி கொன்ற வழக்கு - கொடூர இளைஞனுக்கு 10 ஆண்டுகள்...
``தமிழ்நாட்டு மீனவர்கள் என்பதாலா இந்த அப்பட்டமான பாராமுகமும் ஓரவஞ்சனையும்?" - மாணிக்கம் தாகூர்
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த ஜூலை 22-ம் தேதி மீன்பிடிக்க சென்ற அந்தோணி பிரசாத் விசைப்படகையும், அதிலிருந்த மீனவர்கள் 9 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். தொடர்ந்து தலைமன்னார் மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மீனவர்களின் காவல் நேற்று முடிந்ததை அடுத்து மீண்டும் தலைமன்னார் நீதிமன்றத்தில் 4-வது முறையாக ஆஜர்படுத்தினர்.
மீன்வளத்துறை அதிகாரிகள் 9 மீனவர்கள் மீதும் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததன் அடிப்படையில், தலைமன்னார் நீதிமன்ற நீதிபதி, 8 மீனவர்களுக்கு தலா ரூ.72 ஆயிரம் அபராதமும், அதேபோல் இலங்கை கடற்படையால் 2வது முறை சிறைபிடிக்கப்பட்ட மீனவர் செந்தில் என்பவருக்கு ரூ.80 ஆயிரம் (இந்திய பணம்) அபராதமும் விதித்தார்.

அபராதத்தை கட்ட தவறும்பட்சத்தில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் மீனவர்கள் பயன்படுத்திய படகுக்கான வழக்கு ஜனவரி 7-ம் தேதி விசாரிக்கப்படும். அன்றைய தினம் படகின் உரிமையாளர், உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தன் எக்ஸ் பக்கத்தில், ``ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 இந்திய மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் ₹5.76 லட்சம் அபராதம் விதித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
சொந்தக் கடலில் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்கச் செல்லும் நம் தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை அத்துமீறிக் கைது செய்வதும், சிறையில் அடைத்து லட்சக்கணக்கில் அபராதம் விதிப்பதும் தொடர்கதையாகிவிட்டது. கார்ப்பரேட் நண்பர்களின் வியாபார நலனுக்காக மட்டுமே ஓடி ஓடி வெளிநாடுகளுக்குப் பறக்கும் பிரதமர் மோடி, அண்டை நாடான இலங்கையிடம் சென்று நம் மீனவர்களின் உரிமைக்காக ஒரு வார்த்தை கூட பேச மறுப்பது ஏன்? ரஷ்யா - உக்ரைன் போரையே நிறுத்துவதாகப் பேசி நாடகம் ஆடும் மோடி அவர்கள், தன் சொந்த நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை வதைக்கும் போது கைகட்டி வேடிக்கை பார்ப்பது ஏன்?
ஒருவேளை இவர்கள் தமிழ்நாட்டு மீனவர்கள் என்பதாலா இந்த அப்பட்டமான பாராமுகமும் ஓரவஞ்சனையும்? கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பல லட்சம் கோடிகளில் வரி விலக்கு கொடுக்கும் இந்த பாஜக அரசு, ஏழை மீனவர்களின் இந்த அபராதத் தொகையை உடனடியாக ஏற்றுக்கொண்டு அவர்களை விடுவிக்கப் பொறுப்பேற்க வேண்டும். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் இலங்கையின் இந்திய தூதரகமும் உடனடியாகத் தலையிட்டு, இந்த அநியாயக் கைதுகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பதோடு, நமது மீனவர்களையும் அவர்களது படகுகளையும் எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாகத் தாயகம் அழைத்து வர போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.









