செய்திகள் :

திமுக மூத்த நிர்வாகி எல்.கணேசன் மறைவு: ”இன்னும் உயரம் தொட்டிருக்க வேண்டியவர்” - சோகத்தில் கட்சியினர்

post image

திமுக மூத்த நிர்வாகிகளில் ஒருவர் எல்லோராலும் எல்.ஜி என அன்பாக அழைக்கப்பட்ட எல்.கணேசன் (92) வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.

ஒரத்தநாடு, கண்ணந்தங்குடி கீழையூரைச் சேர்ந்த எல்.கணேசன் தஞ்சாவூர் பாலாஜி நகரில் வசித்து வந்தார். இவரது மனைவி கமலா தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

இன்ஜீனியரான முதல் மகன் எல்.ஜி.அண்ணா திமுக-வில் தஞ்சை மத்திய மாவட்டப் பொருளாளராக இருக்கிறார். வரும் சட்டமன்றத் தேர்தலில் தஞ்சாவூர் அல்லது ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட சீட்டுக் கேட்டு வருகிறார். எல்.ஜி.மாதவி, எல்.ஜி.கோவிந்தன் இருவரும் டாக்டர்கள்.

கருணாநிதியுடன் எல்.கணேசன்
கருணாநிதியுடன் எல்.கணேசன்

கடந்த ஒரு வருடமாகவே எல்.ஜி உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் வெளியில் செல்லாமல் பெரும்பாலும் வீட்டிலேயே இருந்தார். சமீபத்தில் தஞ்சாவூர் வந்த முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, எல்.ஜி வீட்டுக்குச் சென்று நலம் விசாரித்துவிட்டு சென்றனர்.

அப்போது ஸ்டாலின் எல்.ஜியின் கைகளைப் பற்றிக்கொண்டு தன் அன்பை வெளிப்படுத்தி தைரியம் கொடுத்தாராம். என்னை முதன் முதலில் இளந்தலைவர் என அழைத்தவர் எல்.ஜி அண்ணன்தான். இதை நான் பல மேடைகளில் பேசியிருக்கிறேன். தன் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசக்கூடியவர் என்றாராம் ஸ்டாலின்.

திமுக-வில் உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினராகப் பதவி வகித்தார். இந்நிலையில் எல்.கணேசன் வயது மூப்பு மற்றும் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது உடல் மருத்துவக்கல்லூரி சாலை, பாலாஜி நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

திமுகவினர் மட்டுமின்றி பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். எல்.ஜியின் மறைவு திமுகவினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எல்.ஜி குறித்து திமுக தரப்பைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.

''கண்ணந்தங்குடியில் விவசாயத்தைப் பின்னணியாகக் கொண்ட எளிய குடும்பத்தில் பிறந்தவர் எல்.கணேசன். சென்னையில் தங்கிப் படித்தபோது இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு தீவிரமாகச் செயல்பட்டார்.

மறைந்த எல்.கணேசன்
மறைந்த எல்.கணேசன்

ஏராளமான மாணவர்களை ஒருங்கிணைத்து இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கெடுக்க செய்தார். திமுகவில் மாணவரணி செயலாளராக இருந்தார். இந்தி எதிர்ப்பை வலுவாகப் பின்பற்றி, தொடர் போராட்டத்தை முன்னெடுத்தது, மொழிப்போர் தியாகி என்ற பெயர் கிடைக்க காரணமானது.

அந்தச் சமயத்தில், அண்ணாவிடம் இந்தி எதிர்ப்பு குறித்து கேட்டபோது, 'என் கையில் எதுவும் இல்லை, எல்லாம் எல்.ஜியிடம் உள்ளது' என்றாராம். 1967 சட்டமன்றத் தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் எல்.கணேசன் போட்டியிடுகிறார். சென்னையிலேயே வலம் வந்த எல்.ஜியை மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி சொந்த ஊரில் போட்டியிடச் சொல்லி அனுப்பினார்.

அப்போது, மதுக்கூர் ஒரத்தநாடு தொகுதியில் இருந்தது. காங்கிரஸ் கட்சியில் செல்வந்தரான தண்டாயுதபாணி போட்டியிட்டார். எளியவரான எல்.ஜி அவரை எதிர்த்து போட்டியிட்டார். எல்.ஜியிடம் தேர்தல் செலவிற்குப் பணம் இல்லை.

இதையறிந்த கருணாநிதி, மதுக்கூரில் காகிதப்பூ நாடகம் போட்டு அதில் வசூல் ஆன ரூ.4,000 பணத்தை எல்.ஜி கையில் கொடுத்து பிரசாரம் செய்ததுடன், ஜெயிச்சுட்டு வாய்யானு சொல்லிட்டு போனாராம். எல்.ஜியும், எம்.ஜி.ஆர், மாதவனுக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எல்.ஜியின் வளர்ச்சியில் கருணாநிதி தனி கவனம் செலுத்தினார்.

மகன் அண்ணாவுடன் எல்.கணேசன்
மகன் அண்ணாவுடன் எல்.கணேசன்

1987ல் திமுக ஆட்சி அமைகிறது. எல்.ஜி அமைச்சர் ஆவார் எனப் பரவலாகப் பேசப்பட்டது. ஆளுநரைச் சந்தித்து அமைச்சரவைப் பட்டியலை கொடுக்கச் சென்றபோது, 'நீ சட்டத்துறை அமைச்சர்யா'னு சொல்லிட்டு போனாராம் கருணாநிதி. ஆனால் சில காரணங்களால் அமைச்சர்கள் பட்டியலில் எல்.ஜி பெயர் இடம் பெறவில்லை.

உடனே, காரில் ஊருக்குக் கிளம்பி விட்டார் எல்.ஜி. கார் திண்டிவனத்தைக் கடந்து சென்ற போது போலீஸார் காரை மறைத்து, முதல்வர் உங்களைத் திரும்பி வரச் சொன்னார் என்றுள்ளனர்.

பதைபதைத்து நேரில் சென்ற எல்.ஜியிடம், 'உன்னை முதலமைச்சரின் பேரவை செயலாளராக்கியுள்ளேன்' என்றாராம். தன் மனம் வருந்தக் கூடாது என்பதை உணர்ந்து கருணாநிதி செய்த செயலை எண்ணி கைகளைப் பற்றிக் கொண்டாராம் எல்.ஜி.

கட்சி பொதுக்குழுக்களில் முரசொலி மாறன் சில கருத்துக்களை முன்வைப்பார். முரசொலி மாறன், கருணாநிதியின் எண்ணத்தைப் பேசக்கூடியவர் என்பதால் எதிர் கருத்தை யாரும் முன்வைக்க மாட்டார்கள். ஆனால் எல்.ஜி, முரசொலி மாறன் பேசியதில் உள்ள நிறைகுறைகளை வெளிப்படையாக எடுத்து வைப்பாராம்.

மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசக்கூடியவர். கருணாநிதியுடன் ஏற்பட்ட சில மனக்கசப்பு காரணமாக வைகோவுடன் சென்று மதிமுகவில் இருந்தார். எதிர் அணியில் இருந்தாலும் கருணாநிதி, எல்.ஜி மீது தனிப்பட்ட முறையில் பாசம் காட்டினார்.

பின்னர் மீண்டும் கருணாநிதியின் கைகளைப் பற்றிக் கொண்டவருக்கு உரிய அங்கீகாரம் தந்தார் கருணாநிதி. கல்வி ஆற்றல், பேச்சாற்றல் மிக்க எல்ஜியின் பேச்சை கருணாநிதியே பலமுறை ரசித்து பாராட்டியிருக்கிறார்.

அஞ்சலி செலுத்தும் நேரு
அஞ்சலி செலுத்தும் நேரு

கண்ணந்தகுடி கீழையூர் ஊராட்சியில் தொடர்ந்து அன் அப்போஸ்ட் ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஒரத்தநாட்டில் வீட்டுக்கு ஒரு பட்டதாரி உருவாவதற்குக் காரணமானவர். இவரால் டாக்டர், இன்ஜீனியர், வழக்கறிஞராகப் பலர் உள்ளனர்.

பலர் அரசுப் பணி பெற்றுள்ளனர். பொதுவாழ்வில் மட்டுமல்ல அரசியலிலும் தூய்மையாக இருந்தவர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எல்.ஜி.அண்ணாவுக்கு தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட சீட் கிடைக்கும் என எதிர்பார்த்தார் எல்.ஜி. அது நடக்கவில்லை.

அப்போது, 'தலைவர் ஸ்டாலின் உன்னை கைவிட மாட்டார், வரும் சட்டமன்றத் தேர்தலில் உனக்கு வாய்ப்பு வழங்குவார்'னு பல உதாரணங்களை முன் வைத்து அண்ணாவுக்கு நம்பிக்கையளித்துப் பேசினாராம்.

மூன்று முறை ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ, எம்.எல்.சி, ராஜ்யசபா எம்.பி, திருச்சி மக்களவை எம்.பி உள்ளிட்ட பதவிகள் வகித்துள்ளார். அரசியலில் இன்னும் பல உயரம் தொட்டிருக்க வேண்டியவர், இப்போது எட்டாத உயரத்திற்குச் சென்று விட்டார்' என்றனர்.

"ஒட்டுமொத்த பாரதத்தில் மிகப்பெரிய ஊழல் கட்சி, ஆட்சி என்றால் அது திமுக-தான்!" - அமித் ஷா

ஊழல் நிறைந்த கட்சி, ஆட்சிபுதுக்கோட்டை தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரனின் 'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' யாத்திரை நிறைவு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச... மேலும் பார்க்க

பொங்கள் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு: ``இதுதான் திராவிட மாடல் அரசு" - முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு சார்பில் ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் அ... மேலும் பார்க்க

பொங்கல் பரிசுத் தொகை: ``திமுக அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறது" - அன்புமணி ராமதாஸ் காட்டம்

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு சார்பில் ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஸ்டாலின்இந்நிலையில், தமிழ்நா... மேலும் பார்க்க