`2029-ல் அமித் ஷா காலியாகிவிடுவார்' - சொல்கிறார் அமைச்சர் ஐ.பெரியசாமி
'தர்மயுத்தம் - 100, Audio Release யாத்திரை, குட்டிக் கதைப் பயணம்' - தமிழகத் தலைவர்களின் நடைபயணங்கள்!
ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ திருச்சியில் இருந்து மதுரை வரை மேற்கொள்ளும் சமத்துவ நடைபயணத்தை திருச்சியில் தொடங்கினார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து நடைபயணத்தைத் தொடங்கிவைத்தார். இதுபோல் நமது எல்லாத் தலைவர்களும் என்னென்ன நடைபயணத்தை, எங்கிருந்து, என்ன காரணத்துக்காகத் தொடங்கலாம் என்று காரில் வாக்கிங் சென்றபடி யோசித்தோம்...
மு.க. ஸ்டாலின்
பயணத்தின் பெயர்: ஊழல் இல்லா திராவிட மாடல் நடைபயணம்
பாதை: சென்னை சட்டமன்றத்திலிருந்து அவரோட வீடு வரை.
நோக்கம்: தி.மு.க-வின் பொற்கால ஆட்சியில் தமிழகம் போதையில்லாத மாநிலமாக மாறக் காரணங்கள் என்ன, காணாமல் போன வாக்குறுதிகளை எப்படித் தேடுவது என யோசித்துக்கொண்டே போகலாம்.

எடப்பாடி பழனிசாமி (EPS)
பயணத்தின் பெயர்: எங்கே நிம்மதி... எங்கே நிம்மதி... தேடல் நடைபயணம்
பாதை: சேலத்திலிருந்து பனையூர் வழியாக சென்னை கமலாலயம் வரை.
நோக்கம்: வழியெங்கும் யாராவது "ஒற்றைத் தலைமை" பற்றி பேசுகிறார்களா அல்லது ஓபிஎஸ் டீம் ஆட்கள் எட்டிப் பார்க்கிறார்களா என்று 'டெலஸ்கோப்' வைத்துப் பார்த்துக் கொண்டே நடக்கலாம். அல்லது கூட்டணி மாற்றங்களுக்கு ஏத்த மாதிரி யூ-டர்ன் போட்டுக்கொண்டே போகலாம்.

ஓ.பன்னீர்செல்வம் (OPS)
பயணத்தின் பெயர்: தர்மயுத்தம் - பார்ட் 100: தர்மம் எப்போ வெல்லும்?
பாதை: மெரினா தியான மண்டபத்திலிருந்து டெல்லி வரை.
நோக்கம்: டெல்லியில் யாராவது அப்பாயிண்ட்மெண்ட் கொடுப்பார்களா என்று வழிநெடுக தியானம் செய்து கொண்டே நடப்பார். இடையில் பனையூர்க்காரர்கள் யாராவது கையைப் பிடித்து இழுத்தால், அங்கேயே ஒரு 'தர்மயுத்தம்' ஸ்டார்ட் செய்யலாம்.

அண்ணாமலை
பயணத்தின் பெயர்: ஏற்கெனவே `என் மண், என் மக்கள்' யாத்திரையை முடித்திருந்தாலும், தற்போதைய சூழலுக்கு ஏற்ப `ஆடியோ ரிலீஸ் யாத்திரை’ அல்லது `எக்ஸெல் சீட் விழிப்புணர்வு பயணம்’
பாதை: கோயம்புத்தூரிலிருந்து கமலாலயம் வரை.
நோக்கம்: கையில் புகழ்பெற்ற அந்த 'வாட்ச்' மற்றும் ஒரு 'பென் டிரைவ்' (Pen drive) உடன் நடப்பார். ஒவ்வொரு 10 கிலோமீட்டருக்கும் ஒரு தற்காலிக மேடை அமைத்து, "இதோ அடுத்த ஃபைல், அடுத்த ஆடியோ" என்று கூறி ஒரு 'சஸ்பென்ஸ்' வைத்துக்கொண்டே நடப்பார். வழியில் நடக்கும் ஒவ்வொரு பிரஸ் மீட்டிலும், "உங்ககிட்ட அந்தப் பழைய ஆடியோ இருக்கா?" என்று கேட்டுக்கொண்டே நடக்கலாம்.

கமல்ஹாசன்
பயணத்தின் பெயர்: `யார் என்று புரிகிறதா? - ஒரு புரிதல் பயணம்’
பாதை: பிக் பாஸ் வீட்டில் இருந்து சென்னை கோட்டை வரை.
நோக்கம்: அரசியல் பாணி மற்றும் தத்துவார்த்தப் பேச்சுகளை மய்யமாக வைத்து இந்தப் பயணம். இவர் தனியாக நடக்கமாட்டார். கையில் ஒரு பெரிய அகராதி புத்தகத்தை ஏந்தி வருவார்.
வழியில் சந்திக்கும் மக்களிடம், `நாளைய தீர்வு, இன்றைய கூர்வில் இருக்கிறது,’ என்பது போன்ற மிகவும் ஆழமான (யாராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியாத) தத்துவங்களை விளக்குவார். கூட்டணியில் இருந்தாலும், "நான் வலதுசாரி அல்ல, இடதுசாரி அல்ல, நான் மய்யவாதி" என்று சொல்லலாம்.

சீமான்
பயணத்தின் பெயர்: குமரிக்கண்டம் தேடும் வீர நடைபயணம்
பாதை: சிவகங்கை காடுகளில் இருந்து கடலுக்குள்ளே (குமரிக்கண்டம் இருக்குமிடத்திற்கு).
நோக்கம்: 2026-ல் ஆட்சிக்கு வந்ததும், ஐ.டி கம்பெனிகளை மூடிவிட்டு, அனைவரையும் ஆடு, மாடு மேய்க்க அரசுப் பணி ஆணை வழங்குவதற்கான முன்னோட்டம். நடக்கும்போது குறுக்கே வரும் ஆமை, உடும்பு போன்றவற்றுடன் தன் முன்னோர்கள் எப்படி வேட்டையாடினார்கள் என்ற கதையை 'தம்பிகளுக்கு' சொல்லிக்கொண்டே செல்லலாம்.
வழியில எல்லா இடங்களுக்கும் தமிழ் பெயர் மாற்றிக்கொண்டே போகலாம். மதுரையில் மது இருப்பதால் மதுவை ஒழித்து `ரை’ என்று பெயர் வைக்கலாம். போகிற வழியில் வரலாற்று ஆசிரியர்களைப் பார்த்தால் அவர்களுக்கு டியூஷன் எடுக்கலாம்.

விஜய்
பயணத்தின் பெயர்: கூட்டணி இல்லா குட்டிக் கதைப் பயணம்
பாதை: பனையூர் அலுவலகத்தில் இருந்து பனையூர் வீடு வரை.
நோக்கம்: விசிலடிக்க வந்த கூட்டத்தை, ஓட்டு போடும் கூட்டமாக மாற்ற முடியுமா என்று ஒரு 'டெஸ்ட் டிரைவ்' பயணம் இது. சாலையில் நடக்காமல் ஒரு மஞ்சள் நிற பேருந்தின் மேலே ஏறி நின்றபடிதான் பயணம் செல்லலாம்.
அரசியல் பேசுவதற்கு முன், "என் நெஞ்சில் குடியிருக்கும்..." என்று தொடங்கி ஒரு 5 நிமிடம் ரசிகர்களின் கூச்சலை ரசிக்கலாம். வழியில் யாராவது எதிர்க்கேள்வி கேட்டால், பதில் சொல்லாமல் ஒரு குட்டிக் கதை சொல்லி, "நீங்களே புரிஞ்சுக்கோங்க நண்பா" என்று முடிக்கலாம். இடையில் செல்ஃபி எடுப்பதற்கென்றே தனி நேரம் ஒதுக்கலாம்.

உதயநிதி ஸ்டாலின்
பயணத்தின் பெயர்: செங்கல் தேடும் நடைபயணம் 2.0
பாதை: மதுரையிலிருந்து எய்ம்ஸ் (AIIMS) வரை.
நோக்கம்: இன்னும் அந்த ஒரே ஒரு செங்கல் அங்கேதான் இருக்கிறதா என்று உறுதி செய்ய இந்த நடைபயணம். போகிற வழியில் ஊரெங்கும் ஸ்போர்ட்ஸ் கிட் கொடுத்துக்கொண்டே செல்லலாம்.

அன்புமணி ராமதாஸ்
பயணத்தின் பெயர்: மஞ்சள் கலர்ல ஒரு பசுமை நடைபயணம்
பாதை: தைலாபுரம் தோட்டத்திலிருந்து ஏதாவது ஒரு ஏரி வரை.
நோக்கம்: வழியில் யாராவது புகைப்பிடித்தாலோ அல்லது பிளாஸ்டிக் கவர் வைத்திருந்தாலோ அவர்களைப் பிடித்து `மாற்றத்தை விரும்புங்கள். ஆகவே மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்று சொல்லுங்கள்’ என்று வம்படியாகச் சொல்ல வைக்கலாம்.














