செய்திகள் :

BB Tamil 9 Day 91: பாரு இல்லாத ஷோ; விக்ரம் சறுக்கிய அந்த இடம்! - 91வது நாளில் நடந்தது என்ன?

post image

ஓரளவிற்கு நன்றாக ஆடிக் கொண்டிருந்த சுபிக்ஷா வெளியேற்றப்பட்டிருக்கிறார். ஆனால்  சான்ட்ரா இன்னமும் உள்ளே இருக்கிறார். 

எவிக்ஷன் பின்னணியில் உள்ள மர்மமும் அநீதியும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 

BB TAMIL 9 DAY 91
BB TAMIL 9 DAY 91

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 91

“போன சீசன்கள்ல இந்தச் சமயத்துல ஃபயரா இருக்கும். ஆனா இந்த சீசன்ல யார் டைட்டில் அடிக்கப் போறீங்கன்ற ஆர்வமோ பரபரப்போ ஒண்ணுமே இல்ல. உங்க ஈகோ சண்டையே இன்னமும் முடியலை. என்னதிது” என்று விசே அலுத்துக் கொண்டது உண்மை. 

போட்டியாளர்களில் யாருக்குமே வந்த நோக்கமோ, கோப்பையின் மீதான ஆர்வமோ, வெறியோ இருப்பது போல் தெரியவில்லை. கோயில் பிரசாதம் போல கெடச்சா கிடைக்கட்டும் என்பது போல் இருக்கிறார்கள்.

அவர்கள் இப்படி இருக்கட்டும்.  ‘யார் டைட்டில் அடிக்க சிறந்தவர்’ என்பதைப் பார்வையாளர்களால் கூட தீர்மானமாக சொல்ல முடியவில்லை. அத்தனை மந்தமான போட்டியாளர்கள். 

டாப் 5-ல் சுபிக்ஷா வருவார் என்று யூகித்து வைத்திருந்தேன். மற்ற போட்டியாளர்கள் அவரவர்களின் சண்டைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது ‘நான் டைட்டில் வின்னர் ஆவேன்’ என்கிற நம்பிக்கையுடன் செயல்பட்டவர் சுபிக்ஷா. டாஸ்க்குகளில் சிறப்பாகப் பங்கேற்றார். அநாவசியமான சண்டைகளுக்குச் சென்றதில்லை. போலவே தன்னிடம் வந்த பிரச்சினைகளையும் இயன்றவரை துணிச்சலாக எதிர்கொண்டார். 

ஆனால் சுபிக்ஷாவின் வீழ்ச்சிக்கு என்ன காரணமாக இருக்க முடியும்? யெஸ். அதேதான். விக்ரமின் நிழலாக இருந்தது. ஆரம்பத்தில் யாருடைய உதவியுடன் சமாளிப்பது சரி. ஆனால் ஒருவரின் பின்னணியிலேயே தொடர்ந்து இருப்பது பலவீனத்தை தரும். ‘இனிமே தனியா ஆடப் போறேன்’ என்று ஒரு கட்டத்தில் முடிவெடுத்த சுபிக்ஷா அதை செயல்படுத்தியது போல் தெரியவில்லை. 

தான் சார்ந்திருக்கும் சமூகம் பற்றிய விழிப்புணர்வை பொதுவெளியில் ஒருவர் வெளிப்படுத்திக் கொண்டேயிருப்பதில் தவறில்லை. ஆனால் பிக் பாஸ் போன்ற ஷோவில் போட்டியாளரின் தனித்திறனும் வெளிப்பட வேண்டும்.

BB TAMIL 9 DAY 91
BB TAMIL 9 DAY 91

சமூக விழிப்புணர்வையே பிடித்து தொங்கிக் கொண்டிருந்தால், தனி நபர் அடையாளம் என்கிற விஷயம் காணாமல் போய் விடும். ‘சுபிக்ஷா’ என்கிற நபர் யார் என்பது போட்டியாளர்களுக்கு அறியப்படவில்லை. 

“இந்த பீட் பாக்சிங்கை இப்பவே விட்டுடு” என்று தம்பி தலைதலையாக அடித்துக் கொண்டால் கூட பிடிவாதமாக அதை விடாமல் ‘டுப்புசிக் டுப்புசிக்’ என்று இம்சை தந்து கொண்டிருந்தார். 

மற்றபடி சுபிக்ஷா ஒரு நல்ல ஆட்டக்காரர். அதிலும் சான்ட்ரா, அரோரா, திவ்யா, வினோத் போன்றவர்களோடு ஒப்பிடும் போது இணக்கத்திலும் சகிப்புத்தன்மையில் மேம்பட்டவராக இருந்தார்.

அவர்களே வீட்டினுள் இருக்கும் போது சுபிக்ஷா வெளியேற்றப்பட்டது அநீதி. பிக் பாஸ் டீம் தங்களின் சதுரங்க ஆட்டத்தை எவ்விதக் கூச்சமும் இல்லாமல் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது கனி, சுபிக்ஷா போன்றவர்களின் எவிக்ஷன் மூலம் தெரிகிறது என்று தான் எண்ண வேண்டி உள்ளது. 

தொன்னூறு நாட்களுக்கும் மேல் போராடி விட்டு குறைந்த பட்சம் பணப்பெட்டி கூட இல்லாமல் வெளியே செல்வது சோகம். 

சுபிக்ஷாவிற்கும் பிக் பாஸிற்கும் ஒரு நல்ல நட்பு இருப்பது எவிக்ஷனில் தெரிந்தது. என்றாலும் “நீங்கள் ஒருவேளை வெற்றிக் கோப்பையை கையில் ஏந்தியிருந்தால் அது உங்களின் வெற்றியாக மட்டுமே இருந்திருக்கும். ஆனால் இப்போது ஒரு சமூகத்தின் பிரதிநிதியாக தலைநிமிர்ந்து வெளியெ செல்கிறீர்கள். வெற்றி வெளியே காத்திருக்கிறது” என்று வார்த்தை ஜாலம் காட்டி அல்வா கொடுத்து அனுப்பி விட்டார் பிக் பாஸ். அவருடைய பாணியிலேயே சொல்வதென்றால் ‘சொல்லு…’

BB TAMIL 9 DAY 91
BB TAMIL 9 DAY 91

பாரு இல்லாத ஷோ - நெகட்டிவிட்டிதான் எண்டர்டெயின்மென்ட்டா?

பாரு இல்லாத நிகழ்ச்சி ஒரே நாளில் எத்தனை போரடிக்கிறது பார்த்தீர்களா என்று பாருவின் ரசிகர்கள் ஓவர் டைம் செய்து ஒப்பாரி வைக்கிறார்கள். பாருதான் இந்த சீசனின் கன்டென்ட் வின்னர் என்பதில் சந்தேகமில்லை. 

ஆனால் அந்த கன்டென்ட் எப்படியிருந்தது என்பதுதான் முக்கியம். அக்கம் பக்கத்து வீடுகளில் உக்கிரமான சண்டை நடந்தால், கையில் இருக்கும் வேலையைப் போட்டு விட்டு ஓடிச் சென்று வேடிக்கை பார்ப்பது மனித இயல்பு. ஒவ்வொரு சராசரி மனிதரிடமும் வன்முறையுணர்ச்சி நிரம்பியிருக்கிறது என்பதுதான் உண்மை. சண்டையை வேடிக்கை பார்க்கும் போது அதற்கான தீனியை அளிக்கிறது. வன்முறைக் காட்சிகள் நிறைந்த ஆக்ஷன் சினிமாக்கள் உலகம் முழுவதும் வெற்றியடைவதின் ரகசியம் இதுதான். 

ஆனால் அக்கம் பக்கத்தில் ஒருவர் தினமும் தொடர்ச்சியாக சண்டையே போட்டுக் கொண்டிருந்தால் அதை ரசிப்போமோ? இரண்டே நாட்களில் சலித்து விடும். மாறாக கடும் எரிச்சல் வந்து விடும். ‘எப்போது இந்தச் சண்டை நிற்குமோ?” என்று கோபம் வந்து விடும். அத்தகைய கோபத்தைத்தான் பாரு ஏற்படுத்தினார். ஒவ்வொரு டாஸ்க்கிலும் அடாவடி. ஒவ்வொரு உரையாடலிலும் எரிச்சல். வன்மம், புறணி, வசை என்று முழுக்க முழுக்க நெகட்டிவி்ட்டியின் அடையாளமாக இருந்தார் பாரு. 

‘எனக்குள்ளயும் கருணை இருக்கு’ என்று சொல்கிற பாருவால் ஒரு கணம் கூட அதை வெளிப்படுத்த முடியவில்லை. நெகட்டிவிட்டிதான் தன் சர்வலைக்கான காரணம் என்று பாரு புரிந்து கொண்டாரோ என்னமோ ஒவ்வொரு நாளும் அதையே வெளிப்படுத்தினார். தனக்கு உதவி செய்தவர்களையும் அவமானப்படுத்தினார். கம்முவுடனான உறவிலும் அத்தனை சிக்கல். இருவருக்கும் கடுமையான சண்டை நடந்த அடுத்த நாளே ஒன்றாக உரசிக் கொண்டு கடுப்பேற்றினார். 

BB TAMIL 9 DAY 91
BB TAMIL 9 DAY 91

பாரு - கம்மு எவிக்ஷனின் மூலம் தவறான முன்னுதாரணம் அழிக்கப்பட்டது!

‘கேமிற்காக நீ யாரை வேணா மிதிச்சிட்டு போவே’ என்பதற்கான உதாரணமாக பாரு திகழ்ந்தார். இப்படிப்பட்ட நெகட்டிவிட்டியைத்தான் பாருவின் ரசிகர்கள் புளகாங்கிதமடைந்து ரசிக்கிறார்கள் என்றால் அடிப்படையில் அவர்களிடமும் மனச்சிக்கல் இருப்பதாகத் தோன்றுகிறது. குருரத்தை ரசிப்பதற்கு ஒரு தனியான மனப்போக்கு இருந்தாக வேண்டும். அவர்களும் அத்தகைய குரூரர்களாக இருந்தால்தான் முடியும். 

முந்தைய சீசன்களில் ஒன்றில் கோப்பையை வென்ற அசிம், ஏறத்தாழ கம்ருதீனுக்கு இணையானவராக இருந்தார். கோபத்தில் வார்த்தைகளை விடுவது, அடிக்கச் செல்வது, பெண்களை அவமானப்படுத்துவது என்று ஆணாதிக்கத்தின் அடையாளமாக இருந்தார். என்னவொன்று, ‘நான் தமிழன்டா’ என்று வாய்ச்சொல் வீரத்தின் மூலம் பிழைத்தார். அவர் கோப்பையை வென்றது தவறான முன்னுதாரணம். 

அசிமைப் போல முரட்டுத்தனமாகவும் அடாவடியாகவும் நடந்து கொண்டால் வெற்றி கிடைக்கலாம் என்கிற தவறான இன்ஸ்பிரேஷனுடன் பின்னர் சிலர் வந்திருக்கலாம். பாருவையும் கம்ருதீனையும் இத்தகைய உதாரணமாகத்தான் சொல்ல முடிகிறது. இவர்களில் ஒருவர் கோப்பையை வென்றிருந்தால் இதுவொரு மோசமான முன்னுதாரணமாக இன்னமும் அழுத்தமாக நிலை பெற்றிருக்கும். எனில் வருங்கால போட்டியாளர்கள் இன்னமும் மோசமாக செயல்பட்டு காட்டுமிராண்டிகளின் காலத்திற்கே சென்றிருப்பார்கள். 

‘நெகட்டிவிட்டிதான் வெற்றியைத் தேடித் தரும்’ என்கிற தவறான போக்கு, பாரு, கம்ருதீன் எவிக்ஷனின் மூலம் தடுக்கப்பட்டது ஒரு நல்ல விஷயம். 

BB TAMIL 9 DAY 91
BB TAMIL 9 DAY 91

அரோ டிக்கெட் வென்றது மகிழ்ச்சி. ஆனால் டைட்டில் வின்னர்?!

இறுதிப் போட்டியாளருக்கான டிக்கெட்டை அரோரா வென்றிருப்பது மகிழ்ச்சிதான். ஆனால் அவரை விடவும் தகுதியான போட்டியாளர்கள் இருக்கும் போது அவருக்குச் சென்றிருப்பது அவரின் உழைப்போடு அதிர்ஷ்டமும் இணைந்திருப்பதாகத் தோன்றியது. 

‘இவரையெல்லாம் ஏன் இன்னமும் வெளியேற்றாமல் வைத்திருக்கிறார்கள்’ என்று நினைக்கக்கூடிய போட்டியாளர்களில் ஒருவராக அரோரா இருந்தார். துஷாருடன் ரொமான்ஸ், கம்முவுடன் நட்பு, பாருவுடன் சண்டை என்று அவருக்கான உலகத்தில் மட்டுமே இருந்தார். ஆட்டோக்காரர் மாதிரி ‘இன்னிக்கு மீட்டர் விழுந்தா போதும்’ என்கிற மனநிலையில் அன்றைய வருமானம் மட்டுமே இலக்காக இருந்ததை அவரே சொல்லியிருக்கிறார். 

ஒரு கட்டத்தில் அரேராவின் விழிப்பு நடந்தது. மற்றவர்களிடம் இணக்கமாகப் பழகுதல், தனது தரப்பை தெளிவாக விளக்குதல், டாஸ்க்குகளில் ஆர்வமாகப் பங்கேற்றல் போன்றவை நடந்தது. இதற்காக அவர் பாருவிற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். ஆம், அரோவிடமிருந்து கம்மு என்னும் பொம்மையைப் பறிப்பதற்காக பாரு நிகழ்த்திய டிராமாக்கள், ஒருவகையில் அரோவின் சர்வைவலுக்கு காரணமாக இருந்தது. 

இந்த டிரையாங்கிள் டிராமா கிளைமாக்ஸை எட்டியதும், தன் குறைகளை உணர்ந்து கொண்ட அரோ, ஆட்டத்தில் கவனம் செலுத்தினார். அந்த உழைப்போடு அதிர்ஷ்டமும் இணைந்து கொள்ள முதல் இறுதிப் போட்டியாளராக ஆகியிருக்கிறார். அரோவிற்குள் ஒரு நல்ல ஆன்மா இருப்பது உண்மைதான் என்றாலும் டைட்டில் வின்னர் என்பதெல்லாம் ஓவர். ஏனெனில் அவரை விடவும் சிறந்த போட்டியாளர்கள் தங்களின் பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள். 

BB TAMIL 9 DAY 91
BB TAMIL 9 DAY 91

விக்ரம் திவ்யா  தீராத பிரச்சினை - விக்ரம் சறுக்கிய இடம்

விக்ரமிற்கும் திவ்யாவிற்குமான பிரச்சினை இன்னமும் ஓயவில்லை. “சார்.. நான் எவ்வளவோ முறை பேச அழைச்சேன்.. அவங்க மாற்றுக் கருத்தை ஏற்க தயாராவே இல்ல. என்னோட பேசவே தயாரா இல்ல’ என்று புலம்புகிறார் விக்ரம். “அவரோட எமோஷன்தான் முக்கியமா. என்னோட எமோஷனுக்கு மதிப்பில்லையா?’ என்று எதிர் புலம்பல் வைக்கிறார். 

“நீங்க பேசற வரைக்கும் தினமும் கேட்டுட்டே இருப்பேன் திவ்யா” என்று ஒரு கட்டம் வரைக்கும் அஹிம்சா முறையைக் கூட கடைப்பிடித்தார் விக்ரம். ஆனால் அவருக்குள் இருந்த மிருகம் விழித்துக் கொள்ளவே நாமினேஷன் சமயத்தில் ‘ஃபிராடு, அந்த மேனியா. இந்த மேனியா’ என்று சிக்கலான வார்த்தைகளில் பிளந்து தள்ளி விட்டார். 

“நீங்க ஒரு கருத்து கோணம் வெச்சிருக்கிற மாதிரி.. அவங்களுக்கு ஒரு கோணம் இருக்கலாமில்ல.. அதை ஏன் நீங்க புரிஞ்சுக்க மாட்றீங்க?” என்று விசே சொன்ன போது ‘தப்புதான்’ என்று தலையாட்டிய விக்ரம், பிறகும் கூட வினோத்திடம் புலம்பிக் கொண்டிருந்தார். 

உலகப் போரையே பேச்சு வார்த்தைகளின் மூலம் பதட்டத்தை தணிக்க முயல்கிறார்கள். ஒரு கட்டத்தில் திவ்யா இறங்கி வந்திருக்கலாம்தான். ஆனால் அதற்காக ஆட்சேபகரமான வார்த்தைகளை விக்ரம் வீசியிருப்பது தவறு. பல சமயங்களில் பொறுமையாக விக்ரம் அபூர்வமாக சறுக்கிய இடங்களில் இதுவும் ஒன்று. ‘கனி போனப்புறம் அவருக்கு டைட்டில் மேல ஆசை போயிடுச்சு’ என்று வெளிப்படும் கருத்துகளும் அவருக்கு பின்னடைவைத் தரும். 

BB TAMIL 9 DAY 91
BB TAMIL 9 DAY 91

இப்போதைய சூழலில் டாப் 5 என்று சபரி, விக்ரம், வினோத், அரோரா, திவ்யா என்கிற பட்டியலை உத்தேசமாக சொல்லாம். சான்ட்ராவை இணைக்கவே முடியாது. ஆனால் பிக் பாஸ் டீம் என்ன முடிவு செய்து வைத்திருக்கிறதோ?!

பணப்பெட்டியை யார் கைப்பற்றுவார் என்பதுதான் இப்போதைய எதிர்பார்ப்பு. ஆனால் அதிலும் சில டிவிஸ்ட்டுகள் இருப்பதாகத் தெரிகிறது. என்ன நடக்கிறதென்று பார்ப்போம். !

சுபிக்ஷா எவிக்ஷன் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

`'பராசக்தி' வெளியாகிற அன்னைக்கு `மஹாசக்தி' ரிலீஸ்.!' - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ரவிச்சந்திரன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் ரெட் ஜெயன்ட் வழங்கும் 'பராசக்தி' ஜனவரி 10-ம் தேதி வெளியாகவிருக்கிறது. அதற்கு முந்தைய நாள் 'ஜனநாயகன்' ரிலீஸ் இருக்கலாம் என்கிறார்கள்.இதில் சில சென்சார் பிரச்னைகளும் உள்ளது அன... மேலும் பார்க்க

BB 9: "என்ன Fraud, கோழைன்னு சொல்லிட்டு மன்னிப்பு கேட்டா, அதை ஏத்துக்கணுமா?"- விக்ரமைச் சாடிய திவ்யா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 93 நாள்களைக் கடந்துவிட்டது.கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில், தற்போது 6 பேர்தான் இருக்கின்றனர்.கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய ... மேலும் பார்க்க

'மகாநதி' சீரியலில் கம்ருதீன் மீண்டும் வர வாய்ப்புள்ளதா? - சீரியல் தரப்பின் பதில் இதுதான்!

'பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்டு மூலம் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து கம்ருதீன் முன்பு நடித்து வந்த 'மகாநதி' சீரியலில் இருந்தும் வெளியேற்றப் பட்டுவிட்டார்'கம்ருதீன் குறித்து இப்படியொரு தகவல் இர... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 93: ஈகோ சண்டை; சாண்ட்ராவை கிண்டலடித்த வியானா - கடைசி வரை நெகட்டிவிட்டிதானா?

முந்தைய சீசன்களில் விருந்தினர்கள் வருகை மகிழ்ச்சிகரமான சந்திப்பாக இருக்கும். சண்டை நடந்தால் கூட அது இயல்பாக நிகழும்.ஆனால் இந்த முறை உள்ளே அனுப்பும் போதே ‘நீங்க பயங்கரமா கொளுத்திப் போடணும்’ என்று சொல்ல... மேலும் பார்க்க

BB Tamil 9: "சாண்ட்ரா, அரோரா, சபரி எப்படி டாப் 6 வந்தீங்க?" - கேள்வி எழுப்பும் பழைய போட்டியாளர்கள்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 93 நாள்களைக் கடந்துவிட்டது.கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில் தற்போது 6 பேர்தான் இருக்கின்றனர்.கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய ந... மேலும் பார்க்க