60 நாடுகள், 2,000-க்கும் மேற்பட்ட தமிழர்கள்; ஜன.,11-ல் சென்னையில் அயலகத் தமிழர் ...
கணவர் தர்மேந்திராவிற்காக தனியாக பிரார்த்தனை கூட்டம் நடத்தியது ஏன்? - நடிகை ஹேமாமாலினி விளக்கம்
பாலிவுட் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24-ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு காலமானார். அவர் இறந்தவுடன் ரசிகர்களின் நினைவு அஞ்சலிக்காகக்கூட உடலை வைக்காமல் அவர் மகன்கள் அவசர அவசரமாக இறுதிச்சடங்குகளைச் செய்தனர். நடிகையும், தர்மேந்திராவின் மனைவியுமான ஹேமாமாலினி கூட மயானத்தில் சென்றுதான் தன் கணவர் உடலை கடைசியாகக் காண முடிந்தது. இதே போன்று தர்மேந்திராவிற்கு அவர் மகன்கள் மும்பை நட்சத்திர ஹோட்டலில் பாலிவுட் பிரபலங்களுக்காக பிரார்த்தனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்தக் கூட்டத்தில் ஹேமாமாலினியோ அல்லது அவரின் இரண்டு மகள்களோ பங்கேற்கவில்லை. அதேநாளில் ஹேமாமாலினி தனது வீட்டில் தனிப்பட்ட முறையில் தனது கணவருக்கு பிரார்த்தனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். இதனால் தர்மேந்திராவின் முதல் மனைவி குடும்பத்திற்கும், ஹேமாமாலினி குடும்பத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக செய்தி வெளியானது.

இது குறித்து விளக்கமளித்துள்ள ஹேமாமாலினி, ''கணவருக்கு பிரார்த்தனை கூட்டம் நடத்துவது குறித்து நாங்கள் பேசிக்கொண்டோம். என்னை சார்ந்தவர்கள் வேறுபட்டவர்கள் என்பதால்தான் எனது வீட்டில் தனியாக பிரார்த்தனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தேன். நான் அரசியலில் இருப்பதால் அரசியல் நண்பர்களுக்காக டெல்லியில் பிரார்த்தனை கூட்டம் நடத்தவேண்டியதாக இருந்தது. எனது தொகுதியான மதுராவில் எனது தொகுதி மக்களுக்காக அங்கும் ஒரு பிரார்த்தனை கூட்டம் நடத்தினேன்.
நான் செய்ததில் எனக்கு மகிழ்ச்சியே'' என்றார். புனே அருகில் உள்ள லோனவாலாவில் இருக்கும் தர்மேந்திராவின் பண்ணை வீடு மியூசியமாக மாற்றப்படுமா என்று கேட்டதற்கு, ``சன்னி தியோல் இது தொடர்பான காரியத்தில் ஈடுபட்டுள்ளார். தர்மேந்திராவின் முதல் மனைவி பிரகாஷ் கவுருக்கும் எனக்கும் எந்த வித கருத்து வேறுபாடும் கிடையாது. அனைத்தும் நன்றாக நடக்கிறது. எனவே யாரும் கவலைப்படவேண்டியதில்லை. நாங்கள் நன்றாக இருக்கிறோம். நான் எனது வேலைகளை தொடங்கிவிட்டேன்.
தர்மேந்திராவின் மரணம் எங்களுக்கு ஆற்ற முடியாத அதிர்ச்சியாகும். அவர் மருத்துவமனையில் தங்கியிருந்த காலத்தில் என்ன நடந்தது என்பதை புரிந்து கொள்ள முயற்சி செய்கிறோம். தர்மேந்திராவின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம். அந்த மாதம் 'பயங்கரமானது'. அவரின் 90வது பிறந்தநாளை கொண்டாட நாங்கள் தயாராகிக் கொண்டிருந்தோம். ஆனால் திடீரென அவர் இப்போது எங்களுடன் இல்லை'' என்று தெரிவித்தார்.




















