செய்திகள் :

Nicolas Maduro: `கிடாரிஸ்ட், பேருந்து ஓட்டுநர், வெனிசுலா அதிபர்' - யார் இந்த நிக்கோலஸ் மதுரோ?

post image

தென் அமெரிக்க நாடான வெனிசுலா எண்ணெய் வளம் மிகுந்த நாடு. எண்ணெய் மூலம் பெறும் லாபத்தை போதை, தீவிரவாதம், ஆள் கடத்தல், கடத்தல்களுக்கு வெனிசுலா பயன்படுத்துகிறது என்று அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.

அதனால் 2019-ம் ஆண்டில் இருந்தே, வெனிசுலா எண்ணெய்க்குத் தடை விதித்திருந்தது அமெரிக்கா.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையிலான படை வெனிசுலா நாட்டின் மீது பெரிய தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலை வெனிசுலா தேசிய அவசர நிலையாகப் பிரகடனப்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 2020-ம் ஆண்டில் குற்றஞ்சாட்டப்பட்ட வெனிசுலா நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவி சிலியா ஃபுளோரசும் நேற்று சிறைப்பிடிக்கப்பட்டிருக்கின்றனர்.

நிக்கோலஸ் மதுரோ
நிக்கோலஸ் மதுரோ

நிக்கோலஸ் மதுரோ கைவிலங்கிடப்பட்டு, கண்கள் கட்டப்பட்டு அழைத்துச் செல்லப்படும் புகைப்படத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்டிருக்கிறார். தற்போது நிக்கோலஸ் மதுரோ, நியூயார்க்கிற்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறார்.

அங்கே அவர் மீதிருக்கும் போதை மற்றும் ஆயுதக் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை நடைபெறும் என குடியரசுக் கட்சி செனட்டர் மைக் லீ தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில், தற்போது சமூக ஊடகங்களில் வெனிசுலாவின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ யார் என்பது குறித்துத் தேடல் அதிகமாகியிருக்கிறது.

வெனிசுலாவின் தலைநகர் கராகஸில் பிறந்தவர் நிக்கோலஸ் மதுரோ. இவர் தன்னை மார்க்சிஸ்ட் என்று கூறிக்கொள்கிறார். மாணவப் பருவத்திலேயே சோசலிச லீக்கில் இணைந்தவர், இளமைப் பருவத்தில் 'எனிமா' என்ற ராக் இசைக்குழுவில் கிட்டார் வாசிப்பதையும், நடனமாடுவதிலும் வாழ்வாதாரத்தைத் தேடிக்கொண்டார்.

அதற்குப் பிறகு பேருந்து ஓட்டுநராக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் தொழிற்சங்கத் தலைவரானார். அதுவே அவருக்கு அரசியலுக்குள் நுழைய வழிவகுத்தது.

Trump - Nicolas Maduro
ட்ரம்ப் - நிக்கோலஸ் மதுரோ

பிரபலம் அடைந்து வந்த தொழிற்சங்கத் தலைவராக இருந்தபோது ​​நிக்கோலஸ் மதுரோ இளம் வழக்கறிஞரும், 1992 ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி வழக்கில் ஹியூகோ சாவேஸின் சட்டப் பாதுகாவலர்களில் ஒருவராக இருந்த சிலியா ஃபுளோரஸ் என்பவரை சிறையில் சந்தித்தார்.

அந்தச் சந்திப்புக்குப் பிறகு ஹியூகோ சாவேஸால் தொடங்கப்பட்ட சோசலிச-மக்கள் நலவாத அரசியல் சித்தாந்தமான "சாவேசிசத்தை" பின்பற்றத் தொடங்கினார்.

1999-ல் சாவேஸ் அதிபரானபோது, நிக்கோலஸ் மதுரோ, சட்டமன்றத்தில் நுழைந்து அரசியல் பயணத்தை வெற்றிகரமாகத் தொடங்கினார். அவரின் கடின உழைப்பு, தெளிவான சிந்தனை போன்ற குணங்களால் அடுத்தடுத்த பதவிகள் தேடிவந்தன.

சபாநாயகராகப் பணியாற்றிய நிக்கோலஸ் மதுரோ 2006-ல் வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பேற்றார். அதற்குப் பிறகு துணை அதிபரானார்.

சாவேஸுக்குப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்ட பிறகு வெனிசுலாவில் வாரிசுப் போட்டி தொடங்கியது. அப்போது நிக்கோலஸ் மதுரோவுக்கு அதிக ஆதரவாளர்கள் இல்லை.

நிக்கோலஸ் மதுரோ
நிக்கோலஸ் மதுரோ

இந்த நிலையில், டிசம்பர் 2012-ல் சிகிச்சைக்காக கியூபா புறப்பட்ட சாவேஸ், ``எனக்கு ஏதேனும் எதிர்பாராத சூழ்நிலை ஏற்பட்டால், நீங்கள் நிக்கோலஸ் மதுரோவை அடுத்த அதிபராகத் தேர்ந்தெடுக்க வேண்டும்" என அறிக்கை வெளியிட்டார்.

சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் வெனிசுலா வந்த சாவேஸ், 2013-ல் மரணமடைந்தார்.

சாவேஸ் மரணத்துக்குப் பிறகு வெனிசுலாவின் அதிபராக நிக்கோலஸ் மதுரோ தேர்வு செய்யப்பட்டார். சாவேஸின் இந்தத் தேர்வுக்கு, நிக்கோலஸ் மதுரோ கியூபாவுடன் வலுவான உறவைப் பேணியதும், ஃபிடல் மற்றும் ரவுல் காஸ்ட்ரோவுடன் உறவுகளை வளர்த்துக் கொண்டதும் முக்கியக் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

2013 முதல் நிக்கோலஸ் மதுரோ போட்டியிட்ட ஒவ்வொரு தேர்தலும் சர்ச்சைகளால் களங்கப்படுத்தப்பட்டன. வெனிசுலா எதிர்க்கட்சியினர் மட்டுமல்லாமல், சர்வதேச அமைப்புகள் மற்றும் நட்பு நாடுகளாலும் கூட கேள்விகள் எழுப்பப்பட்டன.

வெனிசுலா
வெனிசுலா

2018-ல் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஆளில்லா விமானம் மூலம் இவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தத் தாக்குதல் தோல்வியுற்றாலும் பல வீரர்கள் காயமடைந்தனர்.

2018-ல் மீண்டும் அதிபராக நிக்கோலஸ் மதுரோ தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அதை 10-க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கீகரிக்கவில்லை. அதனால் பல தடைகள் விதிக்கப்பட்டன.

ஆனால், அத்தனைத் தடைகளையும் வெற்றிகரமாக எதிர்கொண்டார். நீதித்துறை, சட்டமன்றம், ராணுவம் மற்றும் அரசு நிறுவனங்கள் மீது அதீத கட்டுப்பாட்டை வைத்திருந்தார் என அமெரிக்கா குற்றம்சாட்டுகிறது.

நிக்கோலஸ் மதுரோவின் சீனா, ரஷ்யா உள்ளிட்ட பிற சர்வதேச சக்திகளுடனான நெருங்கிய அரசியல் மற்றும் பொருளாதார உறவுகள் வெனிசுலா அரசுக்கு அடிக்கடி உதவின. இந்த உறவுகளால்தான் அந்த நாடு பல இன்னல்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து இயங்குகிறது.

அதே நேரம் தன் அரசியல் கொள்கையான சாவேஸின் அமெரிக்க எதிர்ப்பு கோட்பாடுகளைத் தீவிரமாகப் பரப்புரை செய்துவந்தார். தன்னைக் கொல்ல அமெரிக்கா சதி செய்வதாகக் குற்றம் சாட்டினார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

இந்த நிலையில் கடந்த ஜனவரியிலிருந்துதான் அமெரிக்கா வெனிசுலா மீது அழுத்தத்தை அதிகரித்து வருகிறது. சட்டவிரோதமாக வெனிசுலா மக்களை அமெரிக்காவிற்குக் குடியேற்றியதாக நிக்கோலஸ் மதுரோ மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.

ஜூலை மாதம், அதிபர் ட்ரம்ப் நிர்வாகம், வெனிசுலா அதிபரின் தலைக்கு 50 மில்லியன் டாலர் சன்மானம் அறிவித்து, அவரை ஒரு போதைப்பொருள் கடத்தல்காரர் என்று குற்றம் சாட்டியது.

மேலும் வெனிசுலாவைச் சேர்ந்த இரண்டு குற்றவியல் குழுக்களான ட்ரென் டி அராகுவா, கார்டெல் டி லாஸ் சோல்ஸ் ஆகியவற்றை வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்த ட்ரம்ப், கார்டெல் டி லாஸ் குழுவுக்கு நிக்கோலஸ் மதுரோவே தலைமை தாங்குவதாகவும் குற்றம் சாட்டினார்.

கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் படகுகளையும் அமெரிக்கா தாக்கத் தொடங்கியது. ட்ரம்ப் நிர்வாகம் வெனிசுலா எண்ணெய்க் கப்பல்களைக் கைப்பற்றியதுடன், தென் அமெரிக்க நாட்டிற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் தனது ராணுவ இருப்பையும் உருவாக்கத் தொடங்கியது.

வெனிசுலா அமெரிக்கா
வெனிசுலா அமெரிக்கா

நவம்பர் மாத இறுதியில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ``நிக்கோலஸ் மதுரோ தன் நாட்டிலிருந்து பாதுகாப்பாக வெளியேற கடைசி வாய்ப்பு வழங்கப்படுகிறது" என அறிவித்தார்.

வெனிசுலாவில் கூடியிருந்த மக்களிடையே உரையாற்றிய நிக்கோல்ஸ் மதுரோ, ``நான் பிறந்த மண்ணை விட்டு எங்கும் செல்லப்போவதில்லை. இங்குதான் இருப்பேன்" எனத் தெரிவித்தார்.

அதன் பிறகு அமெரிக்காவின் அழுத்தம் அதிகரிக்கத் தொடங்கியது. ட்ரம்ப் ராணுவ நடவடிக்கைகளை நிலப்பரப்பிற்கும் விரிவுபடுத்துவதாக எச்சரித்தார். அப்போதே சிஐஏ வெனிசுலா மண்ணில் ஒரு ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியது.

அதன் உச்சகட்டமாகத்தான் சனிக்கிழமை (ஜனவரி 3) அதிகாலையில், அமெரிக்கா தாக்குதல் நடத்தி, வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும், அவரின் மனைவியையும் கைது செய்திருக்கிறது.

`2029-ல் அமித் ஷா காலியாகிவிடுவார்' - சொல்கிறார் அமைச்சர் ஐ.பெரியசாமி

திண்டுக்கல் மாவட்டத்துக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 7-ம் தேதி வருகை தர உள்ளார். இதற்காக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மைதானத்தில் மேடைக... மேலும் பார்க்க

'திமுக, அதிமுக, தவெக' - யாருடன் கூட்டணி? பெட்டி வைத்து வாக்கெடுப்பு நடத்திய பிரேமலதா!

சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் இன்னமும் கூட்டணி முடிவை எடுக்காமல் இருக்கிறது தேமுதிக. திமுக, அதிமுக என இரண்டு தரப்பும் தேமுதிகவுக்கு வலை விரிக்கிறது.தேமுதிக மா.செக்கள் கூட்டம்9 ஆம் தேதி கடலூரி... மேலும் பார்க்க

India - America:``என்னை மகிழ்ச்சிப்படுத்துவது முக்கியம்"- பிரதமர் மோடிக்கு 'செக்' வைக்கும் ட்ரம்ப்!

உக்ரைன் மீதான தாக்குதலைக் கண்டித்து, ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது அமெரிக்கா. அதன்பிறகும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ததாகக் கூறி இந்திய பொருட்களுக்கு 50 சதவிகித வரி விதி... மேலும் பார்க்க

"அதிகாரப் பகிர்வு குறித்து விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" - காங். எம்.பி மாணிக்கம் தாகூர்

"அதிகாரம் மட்டும் அல்ல – அதிகாரப் பகிர்வையும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதுதானே" என்று காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருப்பது மீண்டும் பேசுபொருளாகி இருக்கி... மேலும் பார்க்க

வெனிசுலா: ``உலகின் காவலராக எந்த நாடும் செயல்பட முடியாது" - சீனாவின் விமர்சனமும் புதிய சிக்கலும்!

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, கடந்த 3-ம் தேதி அவரை அமெரிக்க அரசு சிறைப்பிடித்தது. அதைத் தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகள் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எதிராக க... மேலும் பார்க்க

"ஒட்டுமொத்த பாரதத்தில் மிகப்பெரிய ஊழல் கட்சி, ஆட்சி என்றால் அது திமுக-தான்!" - அமித் ஷா

ஊழல் நிறைந்த கட்சி, ஆட்சிபுதுக்கோட்டை தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரனின் 'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' யாத்திரை நிறைவு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச... மேலும் பார்க்க