`2029-ல் அமித் ஷா காலியாகிவிடுவார்' - சொல்கிறார் அமைச்சர் ஐ.பெரியசாமி
பொங்கல் பரிசுத் தொகை: ``திமுக அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறது" - அன்புமணி ராமதாஸ் காட்டம்
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு சார்பில் ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.3000 வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக பா.ம.க தலைவர் அன்புமணி தன் எக்ஸ் பக்கத்தில், ``தமிழர் திருநாளாம் தைப்பொங்கலையொட்டி அரிசி குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் தலா ரூ.3,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
தி.மு.க ஆட்சியில் மக்கள் அனுபவித்து வரும் துயரங்களை ஓரளவாவது தணிக்கும் வகையில், அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட பணத்தில் ஒரு பகுதி அவர்களுக்கு வழங்கப்படுவது சரியானதே.
கடந்த ஆண்டும் இதே காலத்தில் தைப்பொங்கல் கொண்டாடப்பட்டது. ஆனால், மக்களுக்கு ஒரு பைசா கூட பொங்கல் பரிசாக தி.மு.க அரசு வழங்கவில்லை. ஆனால், இப்போது வழங்குகிறது. தி.மு.க ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியம் கோரி போராடி வருகின்றனர்.

ஆனால், அவர்களைத் திரும்பிக் கூட பார்க்காத தி.மு.க அரசு, இப்போது அவர்களை ஏமாற்றும் வகையில் ஒரு மோசடி ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்திருக்கிறது. இன்னும் 50 நாள்களில் அறிவிக்கப்படவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்து விடுவோம் என்று அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கும் தி.மு.க அரசு, அதிலிருந்து தப்புவதற்காகவே இத்தகைய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
ஆனால், தமிழ்நாட்டு மக்கள் தாங்கள் ஏற்கனவே எடுத்த முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை. அவர்கள் நிச்சயமாக வரும் தேர்தலில் தி.மு.க-வை வீழ்த்துவார்கள்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.













