திருச்சி: கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; வீட்டின் முன் குவிந்த த...
திருச்சி: கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; வீட்டின் முன் குவிந்த திமுகவினர்
தி.மு.க முதன்மை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு கடந்த தி.மு.க ஆட்சியில் நகராட்சி நிர்வாக துறையைக் கவனித்து வந்தார்.
அந்தத் துறையில் பணி நியமனம் செய்ய லஞ்சம் பெற்றதாக அவர் மீது அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. அந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்தது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் முன்னால் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
அந்த வழக்கின் அடிப்படையில், இன்று காலை திருச்சி தில்லை நகரில் உள்ள கே.என்.நேரு வீட்டிற்கு வந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி மணிகண்டன் தலைமையிலான சுமார் 20-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அவர் வீட்டில் சோதனை செய்து வருகின்றனர்.

இந்த தகவலறிந்த தி.மு.க-வினர் அவர் வீட்டின் முன்பு குவிந்தனர். அந்தப் பகுதியில் போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய உருவ சிலைக்கு கே.என்.நேரு மாலை அணிவிக்க செல்ல விருந்தார்.
இந்த நிலையில் அவரை மாலை அணிவிக்க செல்ல விடாமல் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது. தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறையினர் அதிரடி சோதனை நடத்தி வருவது, திருச்சி மாவட்ட தி.மு.க-வில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.




















