புதுச்சேரி பட்ஜெட்: `ரூ.14,300 கோடியில், வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ.2,200 கோடித...
தூத்துக்குடி: இடிக்கப்பட்ட ரயிலடி விநாயகர் கோயில் - பின்னணியில் கிறிஸ்தவ மதபோதகரா? | முழுப் பின்னணி
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூரில் ’இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சபை’யை கிறிஸ்தவ மதபோதகர் மோகன். சி.லாசரஸ் நடத்தி வருகிறார். குரும்பூர் ரயில் நிலையம் எதிரில் இந்த சபை இயங்கி வருகிறது. இந்த சபைக்கு அருகில் ரயிலடி அருள்மிகு ஆனந்த விநாயகர் கோயில் உள்ளது. அப்பகுதி மக்கள் அங்கு வழிபட்டு வந்தனர். இந்தக் கோயில், தென்னக ரயில்வேயின் மதுரை கோட்ட நிர்வாகத்தின் எல்கைக்குள், ரயில்வே நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகத்தால், சென்னை உயர் நீதமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில், 'குரும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள 9.61 சதுர மீட்டர் ரயில்வே நிலத்தை உள்ளுர் மக்கள் ஆக்கிரமித்து, விநாயகர் கோயில் என்ற பெயரில் ஒரு வழிபாட்டுத் தலத்தை கட்டியுள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக உள்ளதாக ரயில்வே நிர்வாகம் கூறியதன் அடிப்படையில், அந்த ஆக்கிரமிப்பினை அகற்றிட வேண்டும். ஆக்கிரமிப்பினை அகற்றிட ரயில்வேக்கு காவல்துறை பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்து வழங்கிடுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்படுகிறது' என கடந்த 03.08.2026 அன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இதனையடுத்து, ஏரல் தாலுகா அதிகாரிகள் மற்றும் குரும்பூர் காவல் நிலைய போலீஸார், ஆக்கிரமிப்பினை அகற்ற முயன்றனர். ஆனால், இந்து முன்னணி அமைப்பினர் மற்றும் உள்ளுர் மக்கள் திரண்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது. இதனால், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், பின்னர் 20.08.2026 அன்று அதிகாலை 3 மணி அளவில் ஜே.சி.பி இயந்திரம் மூலம் கோயில் இடித்து அகற்றப்பட்டது. விநாயகர் சிலை, ஏரல் தாசில்தார் செல்வகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டு, தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியைச் சேர்ந்த 19 பேர் கைது செய்யப்பட்டனர். விநாயகர் கோயில் அகற்றப்பட்ட விவகாரம் காட்டுத் தீயாக பரவ, ரயில் நிலையம் முன்பு ஊர் மக்கள் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து ரயில்வே நிர்வாகம் மற்றும் மோகன் சி.லாசரஸை கண்டித்து இந்து முன்னணி அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இதுகுறித்து இந்து முன்னணியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் அருணாச்சலத்திடம் பேசினோம்.
“குரும்பூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் நெல், வாழை விவசாயம்தான் பிரதானத் தொழில். சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு குரும்பூரைச் சுற்றியுள்ள மக்கள், இந்த விநாயகர் சிலையை ரயில் நிலையம் அருகில் வைத்து வழிபட்டு வந்துள்ளனர். ரயில் நிலைய விரிவாக்கத்தின்போது, ரயில்வே ஊழியர்கள் அங்குள்ள அரச மரத்தடியில் வைத்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு ஊர் மக்களால் முன்பு சிறிய செட் அமைக்கப்பட்டது. திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள், சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள், குலசேகரன்பட்டினத்திற்கு செல்லும் பக்தர்கள், இந்த கோயிலில் வழிபட்டு பஜனைப் பாடல்கள் பாடி உணவு சமைத்து ஓய்வெடுத்துவிட்டுச் செல்வது வழக்கம். தற்போது வரை இந்த நிலையே நீடித்து வருகிறது.
இந்த ரயில் நிலையத்தின் அருகில் மோகன் சி.லாசரஸின் ‘வானத்தின் வாசல்’ என்ற பிரமாண்ட ஜெபக்கூடம் உள்ளது.

இதன் விரிவாக்கமாக கடந்த சில ஆண்டுக்கு முன்பு ’தேவனுடைய கூடாரம்’ என்ற ஜெபக் கூடமும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய பிரமாண்ட ஜெபக்கூடத்தின் முன்பு விநாயகர் கோயில் இருப்பது ஆரம்பம் முதலே மோகன் சி.லாசரஸுக்கு பிடிக்கவில்லை.
கோயிலை அகற்றச் சொல்லி தன் ஆதரவாளர்கள் மூலம் உள்ளுர் மக்களை தூண்டிவிட்டு பலமுறை முயற்சித்தார். இந்த நிலையில்தான் அவரது ஆதரவு வழக்கறிஞர்கள் மூலம் ரயில்வே நிர்வாகத்தின் இடத்திலுள்ள இந்தக் கோயிலை இடிக்க வேண்டும் எனவும் வழக்கு தொடரப்பட்டது. கோயிலை நிர்வகித்தவர்களும் வழக்கினை எதிர்கொண்டார்கள். வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதற்கிடையில் மதுரை ரயில்வே கோட்டத்தில் உயர் பதவியில் உள்ள இரண்டு அதிகாரிகள் மூலம், மதுரைக் கிளையில் தனி வழக்கு தொடரப்பட்டு கோயிலை இடிக்க ஆணை பெறப்பட்டுள்ளது.

அந்த இரண்டு உயர் அதிகாரிகளுமே வாரந்தோறும் ஜெபக்கூடத்திற்கு ஜெபம் செய்ய வருபவர்கள். தமிழகத்திலுள்ள பல ரயில் நிலைய வளாகங்களில் விநாயகர் கோயில்கள் உள்ளது. பல கோயில்களை அந்தந்த ரயில் நிலைய நிர்வாகமே பராமரித்தும் வருகிறது. பல கோயில்கள் விமானம் எழுப்பப்பட்டு கோபுர கலசகங்களுடனும் காட்சி அளிக்கிறது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் வளாகத்தின் மாதா சொரூபம் உள்ளது. கோவை ரயில் நிலைய வளாகத்தில் பள்ளிவாசல் அமைக்கப்பட்டு தொழுகைகளும் நடந்து வருகிறது. இப்படி பல உதாரணங்களைச் சொல்லலாம்.
ரயில்வேக்கு சொந்தமான நிலங்களில், சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே வழிபாட்டுத்தலங்கள் அமைக்கப்பட்டிருந்தால், அதனை அகற்றக்கூடாது என நீதிமன்ற உத்தரவு இருப்பதாகவும் சொல்கிறார்கள். இந்த நிலையில் சிறிய செட் அமைக்கப்பட்ட இந்த விநாயகர் கோயிலை அகற்ற வேண்டிய அவசியம் என்ன? கிறிஸ்தவ மத போதக கூடாரத்திற்கு முன்பு இந்து மதத்தின் விநாயகர் கோயில் இருக்கக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காகவே அகற்றப்பட்டுள்ளது.

இதன் பின்னணியில் மோகன் சி.லாசரஸ்தான் உள்ளார் என்பதை உறுதியாகச் சொல்கிறோம். மதுரைக்கிளையின் இந்த உத்தரவினை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்ல இருக்கிறோம். மத்திய ரயில்வே அமைச்சரை சந்தித்தும் மனு அளிக்க இருக்கிறோம். அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் விநாயகர் கோயில் அமைப்போம்” என்றார்.
இயேசு விடுவிக்கிறார் அறக்கட்டளையின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சாந்தகுமாரிடம் பேசினோம். “ரயில்வே நிர்வாக எல்கைக்குள் அனுமதி இன்றி அமைக்கப்பட்டதால், விநாயகர் கோயில் அகற்றப்பட்டுள்ளது. இது ரயில்வே நிர்வாகம், நீதிமன்றம் மூலம் எடுக்கப்பட்ட சட்டப்பூர்வ நடவடிக்கை.
அதுமட்டுமில்லாமல், அந்த கோயில் நிர்வாகத்திற்கும் ரயில்வே நிர்வாகத்திற்குமான தனிப்பட்ட நிலப் பிரச்னை. இதில், எங்கள் ஊழிய சபையையும், சகோதரர் மோகன் சி.லாசரஸையும் இணைத்துப் பேசுவது தவறு. பாதயாத்திரையாக நடந்து செல்லும் பக்தர்கள் எங்கள் ஜெபக்கூடம் அருகிலுள்ள மர நிழல்களில் ஓய்வெடுக்கிறார்கள், உணவு சமைக்கிறார்கள். அவர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட வசதிகளை நாங்களே செய்து கொடுத்து வருகிறோம்.

மதத்தைத் தாண்டி ஒற்றுமையாக சகோதரத்துவமாக பழகி வரும் கிராம மக்கள் மத்தியில், மத ரீதியாக இந்து முன்னணி அமைப்பினர்தான் பிளவினை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்” என்றார்.
மதுரை ரயில்வே கோட்டத்தின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோபிநாதாவிடம் பேசினோம். “குரும்பூர் ரயில் நிலையத்திற்குச் சொந்தமான நிலத்தில் ரயில்வேயின் அனுமதியின்றி கோயில் அமைக்கபப்ட்டதாக தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றம் அளிக்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் அகற்றப்பட்டுள்ளது” என்றார்.





















