Union Budget 2026: 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிறுக்கிழமையில்.! - 9வது முறையாக தா...
தேசியவாத காங்கிரஸ் இணைப்பு பற்றி விவாதிக்க சரத் பவார் கூட்டிய கூட்டம் - புறக்கணித்த சுனேத்ரா பவார்!
மகாராஷ்டிராவில் கடந்த 2023-ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டாக உடைந்தது. மறைந்த துணை முதல்வர் அஜித் பவார் தலைமையில் ஒரு அணியும், முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார் தலைமையில் ஒரு அணியும் இயங்கி வந்தது. சமீபத்தில் அஜித் பவார் விமான விபத்தில் காலமானார். அவர் இறப்பதற்கு முன்பே தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டையும் ஒன்றாக இணைப்பது குறித்து சரத் பவாரிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.
ஆனால் அவர் அதற்குள் அகால மரணமடைந்துவிட்டார். இதையடுத்து அஜித் பவாரின் அஸ்தி கரைக்கப்பட்ட பிறகு சரத் பவாரின் இல்லத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சந்தித்து பேச சரத் பவார் ஏற்பாடு செய்து இருந்தார்.
இந்த கூட்டத்தில் இரு கட்சிகளையும் ஒன்றாக இணைப்பது மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இந்த கூட்டத்திற்கு சுனேத்ரா பவாரோ அல்லது அஜித் பவார் குடும்பத்தினரோ வரவில்லை. சுனேத்ரா பவார் தனது ஒரு மகனை அழைத்துக்கொண்டு மும்பை சென்றுவிட்டதாக சுனேத்ரா பவாருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

அதுவும் சரத் பவாரிடம் துணை முதல்வராக பதவியேற்பது குறித்து கலந்து ஆலோசிக்காமல், அவரிடம் சொல்லாமல் அவசர அவசரமாக சுனேத்ரா பவார் புறப்பட்டு சென்று விட்டார். இது சரத் பவாருக்கு கடும் அதிருப்தியை கொடுத்து இருக்கிறது.
துணை முதல்வர் பதவி அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டது கிடையாது. எனவே, அஜித் பவார் மறைந்த நான்காவது நாளில் பதவியேற்பு விழாவை அவசரமாக ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியமில்லை. எனவே அஜித் பவாரின் மறைவுக்கு 12 அல்லது 13 ம் நாள் துக்கம் அனுசரித்த பிறகு இது போன்ற நிகழ்வுகளை வைத்திருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து அஜித் பவாருக்கு மிகவும் நெருக்கமான மாநில அமைச்சர் நர்ஹரி ஜரிவால் கூறுகையில்,' அண்ணி அமைச்சரவையில் துணை முதல்வராக இருக்கவேண்டும். சரத் பவார் கட்சிக்கு பாதுகாவலராக இருந்து இரு அணிகளும் இணைய முக்கிய பங்காற்ற வேண்டும்.
இரண்டு அணிகளும் ஏறக்குறைய மீண்டும் ஒன்றிணைந்துவிட்டன. அவை உள்ளாட்சி தேர்தலில் இணைந்து போட்டியிடுகின்றன. இரு அணிகளின் இணைப்பு என்பது ஒரு சம்பிரதாயம் மட்டுமே. அது நடக்க வேண்டும் என்று அஜித் தாதா விரும்பினார். ஆனால் இப்போது பவார் சாஹேப் தலைமை ஏற்று அஜித் பவாரின் முடிக்கப்படாத கனவை நிறைவேற்ற வேண்டும்" என்று கூறினார்.
இது குறித்து தேசியவாத காங்கிரஸ்(பவார்) மாநில தலைவர் சசிகாந்த் ஷிண்டே கூறுகையில், ''இரு அணிகளும் மீண்டும் இணைவது குறித்து பவார் குடும்பத்தினர் முடிவு எடுக்க வேண்டும். சோகம் நடந்தபோது விவாதங்கள் இறுதிக் கட்டத்தில் இருந்தன. இப்போது, பவார் குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து இணைப்பு குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். அவர்களின் முடிவை நாங்கள் மதிப்போம்.

இந்த இணைப்பு இரு பிரிவினருக்கும் பயனளிக்கும். நாங்கள் முன்பு அஜித் பவாரை சந்தித்தபோது, இரு கட்சிகளும் ஒன்றாக வர வேண்டும் என்று அவர் தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார். அவர் அதைப் பற்றி பலமுறை பேசியிருந்தார். அஜித் பவாருடன் இரு அணிகளின் இணைப்பு குறித்துபல முறை பேசியிருக்கிறேன். ஜில்லா பரிஷத் தேர்தல்களுக்கு பிறகு இது குறித்து முடிவு எடுக்கப்படும் அவர் கூறி இருந்தார்''என்றார்.
ஆனால் இந்த இணைப்பு நடந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் சுனேத்ரா பவாருக்கு அவசரமாக துணை முதல்வர் பதவியை பா.ஜ.க கொடுக்க முன்வந்ததாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.













