பழைய Actorகிட்ட இருக்கிற dedication புதுசா வர்றவங்ககிட்ட...! - Actress Egavalli ...
`தொகுதி மாறும் நயினார்’ முதல் `மறுக்கும் தினகரன்; கிளம்பும் முடிவில் சீனியர்கள்’ வரை! | கழுகார்
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதியில், கடந்த 1989-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், தி.மு.க சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனவர் தாயகம் குருநாதன். பின்னர் ம.தி.மு.க-வில் இணைந்த அவர், கடந்த 2024-ல் ம.தி.மு.க-விலிருந்து விலகி, அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.க-வில் சேர்ந்தார். அக்கட்சியில் இணைந்து ஒன்றரை ஆண்டுகள்கூட ஆகாத நிலையில், கடந்த நவம்பர் 26-ம் தேதி பா.ஜ.க-விலிருந்து விலகி வைகோ முன்னிலையில் மீண்டும் ம.தி.மு.க-வில் இணைந்தார் குருநாதன். அது குறித்த அறிவிப்பும் ம.தி.மு.க சார்பில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், கடந்த நவம்பர் 28-ம் தேதி, பா.ஜ.க-வின் புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியானது. அதில் ம.தி.மு.க-வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ குருநாதனுக்கு, பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளராகப் பதவி வழங்கி அறிவிக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த பா.ஜ.க-வினர், ‘ம.தி.மு.க-வில் இணைந்துவிட்ட குருநாதனுக்கு பா.ஜ.க-வில் பதவி வழங்கியது எப்படி... அதுவும், தனது சொந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர் எந்தக் கட்சியில் இருக்கிறார் என்பதே தெரியாமல், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எப்படி பதவி வழங்கினார்..?’ என்று கொந்தளிக்கிறார்கள்!
பல ஆண்டுகளாக நீடித்துவரும் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில், தற்போது ஏக்கப்பட்ட குழப்பங்கள் நிகழ்ந்துவருகின்றன. ‘தி.மு.க உடனான கூட்டணியை முறிக்க வேண்டும்’ என்று தமிழக காங்கிரஸில் உருவாகியிருக்கும் புரட்சிப் படைக்கு, விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர்தான் தளபதியாக வழிநடத்துகிறாராம். இந்நிலையில், மதுரையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அரசு நிகழ்ச்சியில், எம்.பி என்ற முறையில் மாணிக்கம் தாகூரும் பங்கேற்றிருந்தார். அவரைப் பார்த்ததும் கடுப்பான மதுரை தி.மு.க-வினர், ‘காங்கிரஸ் வெற்றிக்காக நாம் கடுமையாக உழைக்கிறோம்.

குறிப்பாக, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், விருதுநகர் தொகுதியின் கீழ் வரும் திருப்பரங்குன்றம், திருமங்கலம் தொகுதிகளில் இரவு பகல் பாராமால் மாணிக்கத்துக்காக வேலை பார்த்தோம். அந்த நன்றியில்லாமல், தி.மு.க கூட்டணியைவிட்டு வெளியேறத் துடிக்கிறார்கள்...அவர்களை இப்படி மேடை ஏற்றுவது நியாயமா...’ என்று கொதித்திருக்கிறார்கள். சில சீனியர் நிர்வாகிகள், மாணிக்கத்தைச் சாடைமாடையாகவும் விமர்சனம் செய்தார்களாம். இதனால் கடுப்பான மாணிக்கம் தாகூர், விழா முடிந்த அடுத்த நொடி மின்னலாகக் கிளப்பிவிட்டாராம்!
நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பில், ஈழ உணர்வும் நிர்வாகத் திறமையும் கொண்டவர்களை நியமித்து வந்தார் சீமான். மறைந்த தடா சந்திரசேகர், தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது ஆகியோர் அப்பொறுப்பில் இருந்து, சீமானைக் கண்டிக்கும் அளவுக்கு அதிகாரம் பெற்றவர்களாக இருந்தனர். அவர்கள் இருவரது மறைவிற்குப் பிறகு, சீமானின் மனைவி கயல்விழியைப் பொதுச்செயலாளராக்கும் முயற்சிகளும் நடந்தன. ஆனால், அதற்கு உட்கட்சிக்குள்ளாகவே கடுமையான எதிர்ப்பு கிளம்பவே, 2024 ஜனவரியில் நடந்த பொதுக்குழுவில், மருத்துவர் திருமால்செல்வன் என்பவரைப் பொதுச்செயலாளராகத் தேர்வுசெய்தார் சீமான்.

ஆனால், அவர் பொதுச்செயலாளராகத் தேர்வுசெய்யப்பட்ட தகவல்கூட பொதுக்குழுவில் அறிவிக்கப்படவில்லை. தற்போது, திருமால்செல்வனை டம்மியாக வைத்திருப்பது, கட்சிக்குள் அனலைக் கிளப்பியிருக்கிறது. ‘திருமால்செல்வனுக்கு எந்த அதிகாரமும் கொடுக்காமல், டம்மியாகவே வைத்திருக்கிறார் அண்ணன். தன்னை எதிர்த்து ஒருவார்த்தைகூட யாரும் பேசிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். பவர் உள்ள பதவியை இப்படியே டம்மியாக்கி வைத்திருந்தால், கட்சி எப்படிதான் வளரும்...’ எனக் குமுறுகிறார்கள் தம்பிகள்!
2001-ம் ஆண்டு முதலே, திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில்தான் போட்டியிட்டு வருகிறார் நயினார் நாகேந்திரன். மொத்தம் நான்கு முறை அ.தி.மு.க சார்பாகவும், ஒருமுறை பா.ஜ.க சார்பிலும் போட்டியிட்ட அவருக்கு, மூன்று முறை வெற்றி கிடைத்திருக்கிறது. தற்போது தமிழக பா.ஜ.க தலைவராக உயர்ந்திருக்கும் நயினார், இம்முறையும் திருநெல்வேலி தொகுதியிலேயே போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திருநெல்வேலி தொகுதியில் அ.தி.மு.க படுமோசமான நிலைக்குச் சென்றிருப்பதால், அங்கு போட்டியிட யோசிக்கிறாராம் நயினார்.

‘திருநெல்வேலியிலுள்ள அ.தி.மு.க வாக்குகள்தான் நயினார் வெற்றியடைய காரணம். தற்போது திருநெல்வேலி மாநகர் அ.தி.மு.க மாவட்டச் செயலாளராக இருக்கும் தச்சை கணேசராஜா, தனக்குக் கீழ் இருக்கும் திருநெல்வேலி தொகுதியில், வெறும் 15 சதவிகித பூத் கமிட்டியைத்தான் முழுமையாக அமைத்திருக்கிறார். அ.தி.மு.க-வை நம்பி நின்றால் தோல்வி உறுதி என்று முடிவெடுத்திருக்கும் நயினார், விருதுநகரிலுள்ள ஒரு தொகுதியில் போட்டியிடத் தீர்மானித்திருக்கிறார்’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்!
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு, டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க கட்சியை மீண்டும் கொண்டுவர தீவிரமாக முயற்சி செய்துவருகிறது பா.ஜ.க. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, என்.டி.ஏ கூட்டணிக்குள் தினகரன் வருவதற்குத் தடையாக இருந்தது எடப்பாடி பழனிசாமிதான். இம்முறை ஆர்.எஸ்.எஸ் முக்கியமான தலைவர்களே நேரடியாக எடப்பாடியிடம் பேசி, தினகரனைக் கூட்டணிக்குள் கொண்டுவர கன்வின்ஸ் செய்திருக்கிறார்கள். ஆனால், டி.டி.வி முறுக்கிக் கொண்டுவிட்டார். ‘எடப்பாடி முதல்வர் வேட்பாளராக இருக்கும் கூட்டணியில் இடம்பெற மாட்டேன்... ஆட்சியில் பங்கு கொடுப்பவர்களுடன்தான் கூட்டணி’ என்று அடம்பிடிக்கிறார். அவரது நிலைப்பாடு, அ.ம.மு.க-வுக்குள் பெருத்த அதிருப்தியை உருவாக்கியிருக்கிறதாம்.

அதாவது, ‘இன்னும் எவ்வளவு நாள்களுக்குத்தான் பதவியே இல்லாமல், செலவு மட்டும் செய்வது. என்.டி.ஏ கூட்டணிக்குள் சென்று வெற்றிபெற்றால்தான், அதிகாரத்தை அடைய முடியும். ஆனால், தனது தனிப்பட்ட ஈகோவால் கட்சியோடு சேர்த்து நம்மையும் சீரழிக்கிறார் தினகரன்... அவரிடம் பேசி எப்படியாவது கூட்டணியில் இணைய வையுங்கள்’ என்று தினகரனுக்கு நெருக்கமான நபர்களிடம் ஆதங்கத்தைக் கொட்டியிருக்கிறார்கள் சில அ.ம.மு.க சீனியர்கள். ஒருவேளை, என்.டி.ஏ கூட்டணியில் இணைவதற்கு தினகரன் முட்டுக்கட்டை போட்டால், கூண்டோடு அ.தி.மு.க பக்கம் சாயவும் தயாராகி வருகிறார்களாம் அந்த சீனியர்கள்!














