ஈரான் போர்: `100 நாட்கள், 7000 உயிர்கள், முடிவற்ற அவலம்' - ட்ரம்ப் சொன்ன ‘விரைவா...
தோல்வி நிரந்திரம் அல்ல! ஐஐடியில் இடம் கிடைக்காத மகன், தந்தைக்கு ரூ.55 லட்சம் கார் பரிசளித்த தருணம்!
ஐஐடி நுழைவுத் தேர்வில் தோல்வியடைந்தது, உடல் எடை அதிகரிப்பு, எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை என ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பெரும் மன உளைச்சலில் இருந்த 26 வயது இளைஞர், இன்று தனது விடாமுயற்சியால் வாழ்வில் உச்சம் தொட்டு, தனது தந்தைக்கு ரூ.55 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ காரை பரிசளித்த நெகிழ்ச்சியான நிகழ்வு சமூக வலைதளங்களில் பலருக்கும் உத்வேகம் அளித்துள்ளது. தொழில்முனைவோரும், எழுத்தாளருமான அன்குர் வாரிக்கூ, ஷௌரியா ஷிகர் என்ற அந்த இளைஞரின் பயணத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்ததை அடுத்து இந்த கதை பரவலாக கவனம் பெற்றுள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, ஷௌரியா ஷிகரின் வாழ்க்கை சவால்கள் நிறைந்ததாக இருந்தது. மிகவும் கடினமானதாக கருதப்படும் ஐஐடி-ஜெஇஇ தேர்வில் அவரால் தேர்ச்சி பெற முடியவில்லை. அவரது தந்தையே ஒரு ஐஐடி பட்டதாரி என்பதால், இந்தத் தோல்வி அவருக்கு பெரும் பாரமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து, பிபிஏ பட்டப்படிப்பில் சேர்ந்த அவர், கல்லூரி வாழ்க்கையை வெறுத்ததுடன், 110 கிலோவுக்கு மேல் உடல் எடை அதிகரித்து ஆரோக்கியப் பிரச்சினைகளாலும் அவதிப்பட்டார்.

இதுகுறித்து அன்குர் வாரிக்கூ தனது லிங்க்ட்இன் பதிவில், "அவர் ஐஐடி-ஜேஇஇ தேர்வில் தோல்வியடைந்தார். இது அவரை ஒரு முழுமையான தோல்வியாளராக உணர வைத்தது, குறிப்பாக அவரது தந்தை ஐஐடியைச் சேர்ந்தவர் என்பதால். பொறியியலுக்குப் பதிலாக பிபிஏ படிப்பைத் தேர்ந்தெடுத்தார். 110 கிலோவுக்கு மேல் உடல் எடை, பெற்றோரை ஏமாற்றிவிட்டோமோ என்ற குற்ற உணர்வு, வெறுப்பான கல்லூரி வாழ்க்கை என அவரது எதிர்காலம் கேள்விக்குறியாகவே இருந்தது" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், ஐந்து ஆண்டுகள் கழித்து, ஷௌரியாவின் வாழ்க்கை முற்றிலும் மாறியுள்ளது. இன்று தனது 26வது வயதில், அவர் வெற்றிகரமான ஒரு தொழிலை உருவாக்கி, மாதம் ஏழு இலக்க வருமானம் ஈட்டுகிறார். அதன் அடையாளமாக, ஓய்வுபெறும் தனது தந்தைக்கு ரூ.55 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ காரை பரிசாக வழங்கியுள்ளார். அந்த சொகுசு காருக்கான முன்பணம், ஷௌரியாவின் மொத்த சொத்து மதிப்பில் 5%-க்கும் குறைவு என்றும், மாதாந்திர தவணை (EMI) அவரது மாத வருமானத்தில் 7%-க்கும் குறைவு என்றும் வாரிக்கூ சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிதிநிலை விவரங்கள், அவரது அசாத்தியமான வளர்ச்சியைக் காட்டுகின்றன.
இந்த மாற்றம் அவரது பொருளாதாரத்தில் மட்டுமல்ல, உடல்நலத்திலும் பிரதிபலித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தனது உடற்தகுதியில் கவனம் செலுத்திய ஷௌரியா, இன்று தனது வாழ்வின் மிக ஆரோக்கியமான கட்டத்தில் இருக்கிறார். இந்தக் கதை சொகுசு கார்கள் அல்லது பணத்தைப் பற்றியது அல்ல என்று கூறும் வாரிக்கூ, வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் ஏற்படும் தோல்விகள் ஒருவரின் எதிர்காலத்தை தீர்மானிக்காது என்பதை நினைவூட்டவே இதை பகிர்வதாகக் கூறுகிறார்.

"வாழ்க்கை இறுதியில் சரியாகிவிடும். ஆனால் நீங்கள் தோல்வியடைந்திருக்கும் போது, இதை அறிவது உதவாது. தொடர்ந்து முன்னேறுங்கள்! வாழ்க்கை சரியாகும் என நம்பினால், நாம் செய்யக்கூடிய ஒரே விஷயம் தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருப்பதுதான். ஷௌரியா முன்னேறினார். வாழ்க்கை சரியானது. உங்களுக்கும் அது நடக்கும்," என்று அவர் நம்பிக்கையூட்டுகிறார்.
ஷௌரியாவின் கதை சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கானோரை சென்றடைந்துள்ளது. பெரும் ஏமாற்றங்களுக்குப் பிறகு ஏற்படும் நிச்சயமற்ற தன்மை மற்றும் சுய சந்தேகத்துடன் தங்களை தொடர்புபடுத்தி பலரும் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். "இருண்ட நாட்களில் நம்பிக்கை என்பது போலியாகத் தோன்றும், ஆனால் செயல்பாடு உண்மையானதாக உணர்த்தும்" என்று ஒரு பயனர் குறிப்பிட்டார். மற்றொருவர், "வாழ்க்கையின் மிகப்பெரிய பொறி, இன்றைய சூழ்நிலைகள் நிரந்தரமானவை என்று நம்புவதுதான். வெற்றி பெற்றவர்கள் தொலைந்து போனதாக உணராதவர்கள் அல்ல; நம்பிக்கையை இழந்த பிறகும் தொடர்ந்து முன்னேறுபவர்களே" என்று பதிவிட்டுள்ளார்.
இது, ஒரு தோல்வி என்பது கதையின் ஒரு அத்தியாயம் மட்டுமே, முழு கதையுமல்ல என்பதை மீண்டும் உணர்த்தியுள்ளது.




















