ஈரோடு: செல்போன் பார்ப்பதைக் கண்டித்த பெற்றோர், விபரீத முடிவெடுத்த பிளஸ் டூ மாணவி...
Road Doctor : சொந்தப் பணத்தில் சாலைப் பள்ளங்களை மூடும் இந்த கங்காதர திலக் கட்னம் யார்?
"இந்த உலகில் நம்மால் என்ன பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியும்?" என்ற சோர்வான கேள்வி பலருக்கும் எழுவதுண்டு. அந்தக் கேள்விக்கான ஆகச்சிறந்த பதிலும், உத்வேகமும்தான் கங்காதர திலக் கட்னம் (Gangadhara Tilak Katnam) அவர்களின் வாழ்க்கை.
"யாரோ வருவார்கள், ஏதாவது செய்வார்கள்" என்று காத்திருக்காமல், தன்னால் முடிந்த செயலைத் தொடங்கி இன்று இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு சாதாரண மனிதரின் அசாதாரண கதை இது.

கங்காதர திலக் கட்னம் 1953-ம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார். கல்விப் படிப்பை முடித்த அவர், தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் ஒரு நேர்மையான அதிகாரியாக சுமார் 35 ஆண்டுகள் பணியாற்றினார். அக்டோபர் 2008-ல் தனது ரயில்வே பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
ஓய்வுக்குப் பிறகு, தனது மகனுடன் இருப்பதற்காக ஹைதராபாத் நகருக்குக் குடிபெயர்ந்தார். அமைதியான ஓய்வுக்காலத்தை கழிக்க வேண்டிய அவருடைய வாழ்க்கையில், சில சம்பவங்கள் மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்தின.
ஒருமுறை அவர் காரில் செல்லும்போது, சேறும் சகதியுமாக இருந்த ஒரு பள்ளத்தில் கார் சக்கரம் இறங்கி, அருகில் நடந்து சென்ற பள்ளி மாணவர்கள் மீது சகதி வாரி இறைக்கப்பட்டது. இதனால் குற்ற உணர்ச்சி அடைந்த அவர், உடனடியாக அதிகாரிகளைத் தொடர்புகொண்டு அந்தப் பள்ளத்தை மூடச் செய்தார்.
சில நாள்கள் கழித்து, அதே போன்றதொரு பள்ளத்தில் ஆட்டோ ஒன்று சிக்கி விபத்துக்குள்ளாவதை நேரில் கண்டார். இன்னொருநாள், இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் சாலைப் பள்ளத்தில் தடுமாறி விழ, பின்னால் வந்த அரசுப் பேருந்து அவர் மீது ஏறிச் சென்றது. அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த மரணம் கங்காதர திலக் அவர்களை உறங்க விடாமல் செய்தது. "அரசாங்கம் செய்யும், அதிகாரிகள் செய்வார்கள் என இனி காத்திருப்பதில் அர்த்தமில்லை; நாமே களத்தில் இறங்க வேண்டும்’’ என முடிவெடுத்தார்.
ஜனவரி 2011-ல், திலக் தனது ஓய்வூதியப் பணத்தை முழுவதுமாக இதற்காகச் செலவிடத் தொடங்கினார். தனது காரின் பின்பகுதியில் காலி சாக்குப்பைகள், தார், ஜல்லிக் கற்கள், மண்வெட்டி, கடப்பாரை ஆகியவற்றை நிரப்பிக் கொண்டு ஹைதராபாத் வீதிகளில் சுற்றத் தொடங்கினார்.
எங்கெல்லாம் சாலைகளில் பள்ளம் இருக்கிறதோ, அங்கெல்லாம் காரை ஓரம்கட்டிவிட்டு, தானே சொந்தமாக அந்தப் பள்ளங்களை மூடத் தொடங்கினார். வெயில், மழை என எதையும் பொருட்படுத்தாமல் ஒரு தொழிலாளியைப் போல சாலையில் இறங்கி வேலை செய்தார். இவருடைய இந்த சேவையைப் பார்த்த மக்கள் இவரை `ஹைதராபாத்தின் சாலை மருத்துவர்’ (Road Doctor of Hyderabad) என்று அன்போடு அழைக்கத் தொடங்கினர்.
ஓய்வு பெற்ற பிறகு கணவர் இப்படி சாலையில் இறங்கி வேலை செய்வதைப் பார்த்த அவரது மனைவி ஆரம்பத்தில் மிகவும் அதிர்ச்சியடைந்தார். தன் கணவரின் மனநலம் பாதிக்கப்பட்டுவிட்டதோ என எண்ணி, அமெரிக்காவில் இருந்த தனது மகன் ரவிக்குத் தகவல் கொடுத்தார்.

தந்தையைத் தடுத்து நிறுத்துவதற்காகவே ரவி அமெரிக்காவில் இருந்து ஹைதராபாத் வந்தார். ஆனால், தனது தந்தை செய்யும் காரியத்தின் மகத்துவத்தையும், அவர் அடைத்த பள்ளங்களால் எத்தனை உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன என்பதையும் உணர்ந்து கொண்டார். தந்தைக்கு உதவுவதற்காக, ரவி ஒரு செயலியை உருவாக்கி, 'ஷ்ரமதான்' (Shramadaan - Voluntary Contribution of Labor) என்ற தன்னார்வ அமைப்பைத் தொடங்கினார். இதன் மூலம் பல இளைஞர்களும் திலக்குடன் கை கோத்தனர்.
1,100 பள்ளங்கள் எனத் தொடங்கிய இவரது பயணம், இன்று 2,000-க்கும் மேற்பட்ட அபாயகரமான பள்ளங்களை அடைத்து பல ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியுள்ளது. தன்னுடைய சொந்த ஓய்வூதியப் பணத்தில் இருந்து லட்சக்கணக்கான ரூபாய்களை இந்த சாலை சீரமைப்புப் பணிக்காகவே செலவிட்டுள்ளார்.
இவருடைய தன்னலமற்ற சேவையைப் பார்த்த ஹைதராபாத் மாநகராட்சி (GHMC), இவருக்குத் தேவையான தார், கட்டுமானப் பொருள்களை இலவசமாக வழங்க முன்வந்தது. இவருடைய சேவையைப் பாராட்டி பல்வேறு தேசிய விருதுகளும், சமூகச் சேவைக்கான அங்கீகாரங்களும் தேடி வந்தன.

கங்காதர திலக் கட்னமின் வாழ்க்கை நமக்குச் சொல்லும் பாடம் மிகவும் எளிமையானது, "ஒரு பிரச்னையைக் கண்டு பரிதாபப்படுவதை விட, அதைத் தீர்ப்பதற்கான சிறு முயற்சியை எடுப்பதே மேலானது."
வயது, பணம், அதிகாரம் என எதுவுமே ஒரு நல்ல காரியத்தைச் செய்வதற்குத் தடையல்ல. இன்று நாம் தொடங்கும் ஒரு சிறிய நேர்மறையான செயல், நாளைய சமூகத்தின் பெரும் மாற்றத்திற்கு வித்திடலாம். இன்றைய தினத்தை, நம்மால் முடிந்த ஒரு சிறு நற்செயலுடன் தொடங்குவோம்!



















