Gold Rate: 'மிஸ் பண்ணிடாதீங்க' - தங்கம் வாங்க சூப்பர் நேரம் இது! காரணம் தெரியுமா...
நாமக்கல்: சொத்து வரி மாற்றத்திற்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம்; வருவாய் அலுவலர் வசமாகச் சிக்கியது எப்படி?
நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல். விவசாயியான இவரது பெயரில் உள்ள நான்கு வீடுகளை அவரது மகன் பெயருக்கு மாற்றி, சொத்து வரி விதிக்கக் கோரி, நாமக்கல் மாநகராட்சியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் விண்ணப்பித்திருந்தார்.
அந்த விண்ணப்பத்தை ஆய்வு செய்த வருவாய் உதவியாளர் சங்கர் (58). சொத்து வரி மாற்றம் செய்ய ஒரு வீட்டுக்குத் தலா ரூ. 5,000 வீதம் நான்கு வீடுகளுக்கு மொத்தம் ரூ. 20 ஆயிரம் லஞ்சமாகக் கேட்டுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத விவசாயி கதிர்வேல் இதுகுறித்து நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்தார்.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீஸார் அறிவுறுத்தல்படி, மாநகராட்சி அலுவலகத்திற்கு எதிரே உள்ள தேநீர்க் கடைக்குச் சென்ற கதிர்வேல், அங்கிருந்த வருவாய் உதவியாளர் சங்கரிடம் ரூ. 20 ஆயிரத்தை லஞ்சமாகக் கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக்கொண்ட சங்கர் தனது அலுவலகத்துக்குச் சென்றுள்ளார்.
பின்தொடர்ந்து சென்ற லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் பிரபு தலைமையிலான போலீஸார், சங்கரைப் பிடித்து கைது செய்ததுடன், பணம் ரூ. 20 ஆயிரத்தைப் பறிமுதல் செய்தனர். சொத்துவரி மாற்றத்துக்கு வருவாய் உதவியாளர் ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற விவகாரம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



















