'லட்சக்கணக்கில் முறைகேடு அம்பலம்? கிராமசபை கூட்டத்தில் கேள்விகளால் துளைத்த மக்கள...
நினைவுச் சுவடுகள் 03: `திமுக வசனங்கள் டு காப்பி எடுத்த அதிமுக' - மறக்கமுடியாத தேர்தல் பிரசாரங்கள்!
இன்று தொடுதிரையில் கணநேரத்தில் நாட்டு நடப்புகளை அறிகிறோம். தலைவர்கள் சமுக வலைதளம் மூலம் உடனுக்குடன் மக்களிடம் பேசுகிறார்கள். அனால் நாம் கடந்து வந்த தேர்தல் பாதை இத்தனை எளிதானதன்று! திண்ணை பிரசாரம், தெருமுனை கூட்டங்கள், ரேடியோ, தொலைக்காட்சி, சமுக வலைதளம் என கடந்து வந்த பாதையும், கட்சிகள் அவற்றை திறம்பட கையாண்ட விதமும் இன்றும் ஆச்சரியமானவை! அந்த ஆச்சரிய காலங்களுக்கு அழைத்துச் செல்கிறார் பா. முகிலன், தமிழக தேர்தல்களின் நினைவுச் சுவடுகள் தொடர் மூலம்!
ஒரு மாநிலத்தின் அரசியல் பயணம், தேர்தல் முடிவுகளால் மட்டுமே அளவிடப்படுவதில்லை. மக்களின் கோபம், நம்பிக்கை, எதிர்பார்ப்பு ஆகியவை எப்படி அரசியல் பிரசாரங்களில் வெளிப்பட்டன என்பதில்தான் அதன் உண்மை வரலாறு பதிந்துள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் நடைபெற்ற சில தேர்தல் பிரசாரங்கள், காலத்தைப் பேசும் அரசியல் தருணங்களாக மாறி, இன்று வரை நினைவில் நிலைத்திருக்கின்றன
சுதந்திரத்துக்குப் பிந்தைய தொடக்க ஆண்டுகளிலிருந்து, தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் பிரசாரங்கள் வந்த தற்போதைய காலம் வரை, சில தேர்தல் பிரசாரங்கள் மறக்க முடியாதவையாக இருந்து வருகின்றன. அந்தக் காலகட்டங்களில் நடந்த சமூக மாற்றங்கள், தலைமை மாற்றங்கள், வாக்காளர்களின் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை அந்தப் பிரசாரங்கள் நேரடியாக வெளிப்படுத்தின. இந்தத் தேர்தல் பிரசாரங்கள் மக்களின் வாழ்க்கைக்கு நெருக்கமாகத் தொடர்ந்ததால், அவர்களின் நினைவில் ஆழமாகப் பதிந்தவையாகவும் அமைந்தன.

1952 ஜனவரி முதல் பிப்ரவரி வரை நடைபெற்ற மெட்ராஸ் மாநிலத்தின் முதல் சட்டமன்றத் தேர்தல், தமிழ்நாட்டின் தேர்தல் அரசியலுக்கான அடித்தளத்தை அமைத்தது. அந்த காலத்தில் பிரசாரம் என்பது பொதுக்கூட்டங்கள், பிரசுரங்கள், செய்தித்தாள்கள் மற்றும் வானொலி அறிவிப்புகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டிருந்தது. அரசியல் தலைவர்கள் சாலை மற்றும் ரயில் வழியாகப் பயணம் மேற்கொண்டு, நகரங்களிலும் கிராமங்களிலும் மக்களிடம் உரையாற்றினர்.
இந்தத் தேர்தலின் முக்கியத்துவம், சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக பெருமளவிலான அரசியல் இயக்கத்தை அறிமுகப்படுத்தியதில்தான் இருந்தது. மக்களுக்கு வாக்குப்பதிவு முறைகள் பரிச்சயமாக இல்லை. அதனால், வாக்குரிமை, தேர்தல் சின்னங்கள், ஜனநாயகப் பொறுப்பு போன்ற விஷயங்களை விளக்குவதிலேயே பிரசாரத்தில் கவனம் செலுத்தப்பட்டது. அந்த காலப் பிரசாரங்களின் மொழி அமைதியானதாகவும், விளக்கமானதாகவும், சுதந்திரப் போராட்டத்தின் பாரம்பரியத்தை பிரதிபலிப்பதாகவும் இருந்தது.
1967 பிப்ரவரியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல், தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான ஒன்றாக இன்று வரை நினைவுகூரப்படுகிறது. இந்தத் தேர்தல், மாநிலத்தில் நீண்ட காலமாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கத்திற்கு முடிவுகட்டி, திராவிட அரசியல் அதிகாரத்திற்கு வர வழிவகுத்தது. அதாவது அண்ணா தலைமையிலான திமுக ஆட்சிக்கு வர வழிவகுத்தது.
இந்தக் காலகட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரம் மிகத் தீவிரமாகவும், கருத்தியல் அடிப்படையுடனும் அமைந்திருந்தது. பொதுக்கூட்டங்களில் பெருமளவு மக்கள் திரண்டனர். மொழி உரிமை, மாநில சுயாட்சி, விலைவாசி உயர்வு, சமூக நீதி என பல முக்கிய விஷயங்கள் மற்றும் பிரச்னைகள் குறித்த திமுக தலைவர்களின் உரைகளில் முன்னிலைப்படுத்தப்பட்டன. பொருளாதார சுமைகள் மற்றும் மத்திய அரசின் ஆதிக்கம் குறித்து மக்களிடையே உருவான அதிருப்தி, இந்தப் பிரசாரங்களில் தெளிவாக வெளிப்பட்டது.
மேலும், மக்களைக் கவரக்கூடிய வகையிலான எளிமையான கருத்துகள், தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முழக்கங்கள், திமுகவின் அடித்தள அமைப்புகள் ஆகியவற்றை திறம்படப் பயன்படுத்திய தேர்தலாகவும் இது அமைந்தது. இந்தத் தேர்தல் முடிவுகள், தமிழ்நாட்டு அரசியலின் போக்கையே நிரந்தரமாக மாற்றி, பிராந்திய அடையாளத்தை மையமாகக் கொண்ட புதிய அரசியல் பண்பாட்டை உருவாக்கின.

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், 1967 வரை தமிழகத்தை ஆண்டுகொண்டிருந்த காங்கிரஸ் ஆட்சியில் அரிசி கிடைப்பதில் ஏற்பட்ட தட்டுப்பாடும், அது தொடர்பான பஞ்சமும் மக்களை காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராகத் திருப்பின. கூடவே மொழிப் பிரச்னையைச் சரியாகக் கையாளத் தவறியது அப்போதைய பக்தவத்சலம் தலைமையிலான காங்கிரஸ் அரசு. இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம், அவர்கள் மீது ஏவிவிடப்பட்ட காவல்துறையின் அடக்குமுறைகள் போன்றவை மக்களை காங்கிரஸ் அரசின் இதர நல்ல அம்சங்களை மறக்கடிக்கச் செய்தன.
அன்றைய தமிழக அரசியலில் விஸ்வரூப வளர்ச்சியை எட்டிப் பிடித்துக்கொண்டிருந்த அண்ணா தலைமையிலான திமுக, 1967-ல் சட்டமன்றத் தேர்தலில், இந்த இரண்டு பிரச்னைகளையும் தங்களுடைய தேர்தல் ஆயுதங்களாக எடுத்துக்கொண்டு, மக்களிடம் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டது. அதிலும் குறிப்பாக, `நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு ரூபாய்க்கு மூன்று படி லட்சியம்; ஒரு படி நிச்சயம்’ என்று தேர்தல் முழக்கத்தை வெளியிட்டவுடன், மக்களின் ஒட்டுமொத்த ஆதரவும் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி, அப்படியே திமுக பக்கம் சென்றது.
கூடவே, விலைவாசி உயர்வையொட்டி திமுக வைத்த முழக்கங்கள் மக்களிடையே இன்னும் வேகமாகச் சென்றடைந்தன.
'கும்பி எரியுது, குளு குளு ஊட்டி ஒரு கேடா’,
'பக்தவத்சலம் அண்ணாச்சி, அரிசி விலை என்னாச்சி’,
'காமராஜர் அண்ணாச்சி, கடலைப்பருப்பு விலை என்னாச்சி?’,
'கூலி உயர்வு கேட்டான் அத்தான், குண்டடிபட்டுச் செத்தான்’ போன்ற முழக்கங்களெல்லாம் அன்றைய தேர்தலில் உச்சம் தொட்ட தேர்தல் கோஷங்கள்.
1975 ஜூன் முதல் 1977 மார்ச் வரை நாட்டில் அமல்படுத்தப்பட்ட அவசரநிலைக்கு எதிரான முழக்கம்தான் , 1977 மே–ஜூன் மாதங்களில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் மையமாக இருந்தது.1976 ஜனவரி 31-ஆம் தேதி, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு, அரசியலமைப்பின் 356-வது பிரிவை பயன்படுத்தி கருணாநிதி தலைமையிலான திமுக அரசை கலைத்திருந்த நிலையில், தேர்தல் பிரசாரத்தில் மாநில உரிமைகள் மற்றும் மத்திய அரசின் ஆதிக்கம் பெரும் விவாதப் பொருளானது.
அவசரநிலை நீக்கப்பட்டிருந்தாலும், அதன் தாக்கங்கள் மக்களின் நினைவில் நீங்காமலேயே இருந்தன. பத்திரிகை தணிக்கை, மிசா சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட கைது நடவடிக்கைகள், பறிக்கப்பட்ட குடிமக்கள் உரிமைகள் போன்றவை தேர்தல் உரைகளில் வெளிப்படையாகப் பேசப்பட்டன.

இந்தச் சூழலில் நடைபெற்ற தேர்தல் பிரசாரம், 1967-ல் போலக் கோஷங்களால் நிரம்பியதாக இல்லாமல், ‘ஜனநாயக பாதுகாப்பு’, ‘அரசியல் நிலைத்தன்மை’, ‘மக்களின் அமைதி’ போன்ற கருத்துகளை மையமாகக் கொண்டு அமைந்தது. இன்னொரு பக்கம் எம்.ஜி.ஆர் அப்போது திமுகவிலிருந்து வெளியேறி தொடங்கிய அதிமுக, தங்களை காங்கிரசுக்கும் திமுகவுக்கும் அப்பாற்பட்ட மாற்றாக முன்வைத்து, ஏழை மக்களுக்கான நலன், அரசியல் குழப்பத்துக்கு முடிவு என்ற முழக்கத்துடன் மக்களிடம் சென்றது. இந்த அணுகுமுறை, அவசரநிலைக்குப் பிறகான அரசியலால் சலிப்படைந்திருந்த மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. கூடவே, எம்.ஜி.ஆருக்கு மக்களிடையே காணப்பட்ட திரைக்கவர்ச்சியும் அதிமுகவுக்கு பெரும்பான்மை வெற்றியை வழங்கி, தமிழ்நாட்டு அரசியலில் இன்னொரு முக்கிய திருப்பத்தை உருவாக்கின.
1989-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல், 1980-களின் அரசியல் குழப்பங்களுக்குப் பிறகு, தமிழக அரசியலை மீண்டும் கருத்தியல் மையத்திற்குக் கொண்டு வந்த தேர்தலாக அமைந்தது. 1987, டிசம்பர் 24-ஆம் தேதி எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, அதிமுக கட்சி உடைந்தது. 1988-ஆம் ஆண்டில் ஜெயலலிதா அணி மற்றும் ஜானகி ராமச்சந்திரன் தலைமையிலான அணி என அதிமுக இரண்டாகப் பிரிந்த அந்த அரசியல் குழப்பம், சட்டசபையில் நடைபெற்ற அடிதடி, 1988 ஜனவரியில் அதிமுக ஆட்சியின் வீழ்ச்சிக்கும், அதன் பின்னர் ஆளுநர் ஆட்சிக்கும் வழிவகுத்தது. அதிமுகவில் ஏற்பட்ட இந்தப் பிளவினால் ஏற்பட்ட களேபரங்கள், நிலையான ஆட்சி இல்லாத சூழல், மத்திய அரசின் தலையீடுகள் ஆகியவை மக்களிடையே அரசியல் அதிருப்தியை அதிகரித்திருந்தன.
இந்தச் சூழலில் நடைபெற்ற தேர்தல் பிரசாரம், தமிழ்நாட்டில் நீண்ட காலமாக மங்கிப்போயிருந்த கருத்தியல் அடிப்படையிலான விவாதங்களை மீண்டும் எழுப்பியது. 13 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இல்லாதபோதிலும், திமுகவை உயிர்ப்புடன் வைத்திருந்த கருணாநிதிதான் இந்த முறை ஆட்சியைப் பிடிக்கப்போகிறார் என்பது தேர்தலுக்கு முன்னரே ஊடகங்களால் யூகிக்க முடிந்தது. மக்களிடையேயும் அத்தகைய ஆதரவு போக்கே காணப்பட்ட நிலையில், மாநில உரிமைகள், சமூக நீதி, சட்டமன்ற மரியாதை, ஜனநாயக நடைமுறைகள் போன்ற கருத்தியல்களை முன்னிறுத்தி, திமுக தீவிர பிரசாரத்தை மேற்கொண்டது.

அன்றைய தேர்தல் பிரசாரங்களில், “நிலையான ஆட்சி”, “மத்திய அரசின் தலையீட்டுக்கு எதிர்ப்பு”, “தமிழகத்தின் சுயமரியாதை” போன்ற முழக்கங்கள் முக்கிய இடம் பெற்றன. பொதுக்கூட்டங்களில், அவசரநிலை அனுபவங்கள், 1980-களில் ஏற்பட்ட அரசியல் நிலைகுலைவு, ஆட்சி மாற்றங்களால் ஏற்பட்ட நிர்வாகச் சீர்கேடு ஆகியவை பேசப்பட்டன. இதன் மூலம், மக்கள் மத்தியில் ‘தமிழக அரசியல் மீண்டும் நிலையான மற்றும் ஜனநாயகப் பாதைக்கு வர வேண்டும்’ என்கிற எண்ணம் வலுப்பெற்றது.
அந்த வகையில், 1989 தேர்தல், உணர்ச்சி அரசியலைவிட கருத்தியல் அரசியலுக்கு மீண்டும் முக்கியத்துவம் கொடுத்த தேர்தலாகப் பார்க்கப்பட்டது. தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் அரசியல் உரைகள் நீளமாக இருந்தாலும், மக்கள் கவனத்துடன் கேட்டனர். தேர்தல் முடிவு, திமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வந்ததோடு, தமிழக அரசியலில் அரசியல் நிலைத்தன்மை, கருத்தியல் தெளிவு ஆகியவை மக்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும் தெளிவாக வெளிப்படுத்தியது.
1996 ஏப்ரல்–மே மாதங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல், அதிமுக ஆட்சிக்கு எதிரான மக்களின் கோபம் வெளிப்படையாக வெடித்த தேர்தலாக அமைந்தது. 1991 தேர்தலில், ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தலைமையிலான அரசு, விலைவாசி உயர்வு, நிர்வாகக் குளறுபடி, ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக விரைவிலேயே மக்களின் ஆதரவை இழந்தது. குறிப்பாக, 1995 செப்டம்பரில் நடந்த ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனின் ஆடம்பர திருமணம், மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. அதேபோல், சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கம் குறித்து எழுந்த விமர்சனங்கள், அரசு நிர்வாகம் யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்கிற கேள்விகளை எழுப்பியது.
இவையெல்லாம்,1996 தேர்தல் பிரசாரத்தில் எதிரொலித்தது. இந்தச் சூழலில், நடிகர் ரஜினிகாந்த், “இன்னொரு முறை ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால், அந்த ஆண்டவனால் கூட தமிழ்நாட்டைக் காப்பாற்ற முடியாது" எனத் தனது கருத்துகளை பொதுவெளியில் தெரிவித்தது பெரும் பேசுபொருளானது.

இன்னொருபுறம் டெல்லி காங்கிரஸ் மேலிடம், தமிழக காங்கிரஸ் தலைவர்களின் எதிர்ப்புகளைப் புறந்தள்ளிவிட்டு, அதிமுகவுடன் கூட்டணி வைத்ததை எதிர்த்து, ஜி.கே. மூப்பனார் தலைமையில் உருவான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மற்றும் திமுக கூட்டணிக்கு ஆதரவாக ரஜினி வாய்ஸ் கொடுத்ததும் தேர்தல் பிரசாரத்தை மேலும் பரபரப்பாக்கிய நிகழ்வுகளாக அமைந்தன.
இத்தகைய பின்னணியில், திமுக தலைமையிலான கூட்டணி, ஆட்சி எதிர்ப்பு மனநிலையை (anti incumbency)ஒருங்கிணைத்து, 1996 தேர்தலில் அமோக வெற்றி பெற்ற நிலையில், கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சியமைத்தது.
2011 ஏப்ரலில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பிரசாரம், நலத்திட்டங்களை மையமாகக் கொண்டதாக அமைந்தது. தேர்தல் அறிக்கைகளிலும், பொதுக்கூட்ட உரைகளிலும், மானியங்கள், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் போன்ற வாக்குறுதிகள் முக்கியமாக இடம் பெற்றன. கட்சிகளின் தேர்தல் பிரசாரம், பாரம்பரிய பொதுக்கூட்டங்களோடு சேர்ந்து, தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகங்களையும் விரிவாகப் பயன்படுத்தும் வகையில் இருந்தது. இது, பழைய பிரசார முறைகளுக்கும் புதிய ஊடக சூழலுக்கும் இடையிலான மாற்றத்தைப் பிரதிபலித்தது. வாக்காளர்கள், கருத்தியல் அரசியலை விட, நேரடியாக பயன் தரக்கூடிய வாக்குறுதிகளின் அடிப்படையில் கட்சிகளை மதிப்பிட்டனர்.
இந்தத் தேர்தலில், அதிமுகவுக்கு முன்னதாகவே திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில், "இலவச மிக்ஸி, ஃபேன் , திருமண உதவித் திட்டத்துக்கான நிதி உயர்வு, முதியோர் உதவித்தொகை ஆயிரம் ரூபாயில் இருந்து 1,500 ஆக வழங்கப்படும்" என்பது உள்ளிட்ட பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் இடம் பெற்றிருந்தன.

திமுக தேர்தல் அறிக்கை வெளியானதும், அதிமுக அதை அப்படியே காப்பி அடித்தது. திமுக தேர்தல் அறிக்கையில் இலவசமாக மிக்ஸி, மின் விசிறி வழங்குவோம் என்று அறிவிப்பு இடம்பெற்றிருந்த நிலையில், அதிமுகவோ ஒருபடி மேலே போய் மிக்ஸி, மின் விசிறியோடு, கிரைண்டர் மற்றும் ப்ளஸ் டூ மாணவர்களுக்கு லேப்டாப் என்று தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசியது. இதனால், 2011 தேர்தல் பிரசாரமும் அது தொடர்பான விவாதமும் இலவச திட்டங்களை முன்னிறுத்தியே அமைந்தன.
இந்த மறக்க முடியாத தேர்தல் பிரசாரங்கள், தமிழகத்தின் ஜனநாயகப் பயணத்தில் முக்கிய கட்டங்களாக விளங்குகின்றன. தேர்தல் என்பது அதிகாரத்தைப் பெறுவதற்கான போட்டி மட்டும் அல்ல; அதன் நோக்கத்தை மக்களிடம் விளக்கவும், நம்பிக்கையை உருவாக்கவும், எதிர்காலத்தை எப்படி கட்டமைக்கப்போகிறோம் என்பதற்கான ஒரு முக்கிய அரசியல் செயல்முறை என்பதைக் தொடர்ந்து நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றன!














