`தமிழக மக்கள் கூட்டணி ஆட்சியை ஏற்க மாட்டார்கள்!' | Sellur Raju Interview
சபரிமலைக் கோயில் தங்கம் திருட்டு: `செல்வம் பெருகும் என்றார்கள்' - விசாரணையில் நடிகர் ஜெயராம்
இந்தியாவிலிருந்து ரூ.10,000 கோடி கடனுடன் தப்பி ஓடிய தொழிலதிபர் விஜய் மல்லையா, 1998-99 காலக்கட்டத்தில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குத் 32 கிலோ தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களைத் தானமாக வழங்கினார். அந்தத் தங்கத்தைப் பயன்படுத்தி கோயிலின் கருவறை கதவுகள், துவார பாலகர் சிலைகளுக்குத் தங்கத் தகடுகள் வேயப்பட்டன.
இந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கோயிலில் ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில் தங்கம் குறைந்திருக்கிறது. அந்த தங்கத்துக்கு பதிலாக செப்புத் தகடுகள் வைத்து மோசடி செய்யப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த கேரள உயர் நீதிமன்றம் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது. அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இந்த மோசடியின் முக்கிய மூளையாக செயல்பட்ட முன்னாள் அர்ச்சகர் உன்னி கிருஷ்ணன், திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டின் முன்னாள் அதிகாரி முராரி பாபு, 2019-ம் ஆண்டின் தேவஸ்தம் போர்டின் தலைவர் ஏ.பத்மகுமார் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என 21 இடங்களில் சோதனை நடத்தியது. இதற்கிடையில், நடிகர் ஜெயராமின் வீட்டில் தங்கத் தகடுகள் காட்சிப்படுத்தப்பட்டு, பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த படங்கள் வெளியாகியிருந்தன. அதைத் தொடர்ந்து, தங்கத் திருட்டு தொடர்பான செய்திகள் வெளியானபோது, அந்தத் தங்கத் தகடுகள் தனது வீட்டிற்குக் கொண்டுவரப்பட்டதை நடிகர் ஜெயராம் உறுதிப்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு நடிகர் ஜெயராமிடம் விசாரணையை தொடங்கியிருக்கின்றனர். சென்னை அசோக் நகரில் இருக்கும் ஜெயராம் இல்லத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் நடிகர் ஜெயராமன் அளித்த வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

அதில், ``கடந்த 40 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் சபரிமலைக்குச் சென்று வருகிறேன். அந்தப் பயணங்களின் மூலமாகவே உன்னிகிருஷ்ணன் போற்றியுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் மூலமாகவே எனக்கு கோவர்தனன் அறிமுகமானார்.
சபரிமலை கருவறைக்காக புதிதாக செய்யப்பட்ட தங்கத் தகடுகளை வீட்டில் வைத்து பூஜை செய்தால் செல்வம் பெருகும் என உன்னிகிருஷ்ணன் பொட்டி கூறினார். அதன் அடிப்படையிலேயே அந்த பூஜை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கோவிலில் நடைபெற்ற பூஜைகளிலும் நான் கலந்துகொண்டேன்." எனக் குறிப்பிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

















