'லட்சக்கணக்கில் முறைகேடு அம்பலம்? கிராமசபை கூட்டத்தில் கேள்விகளால் துளைத்த மக்கள...
'லட்சக்கணக்கில் முறைகேடு அம்பலம்? கிராமசபை கூட்டத்தில் கேள்விகளால் துளைத்த மக்கள்!' - நடந்தது என்ன?
திருச்சி மாவட்டம், லால்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மருதூர் ஊராட்சியில் 77 -ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு கடந்த 26 - ம் தேதி கிராமசபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் மணிராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மருதூர் ஊராட்சியில் கடந்த 2022-23 ஆண்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 39.40 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு திட்ட பணி நடைபெற்றதாக பெயர் பலகை வைத்ததால் கிராம சபை கூட்டத்தில் சரமாரியாக கேள்விகளை கிராம மக்கள் எழுப்பினர்.
இதில், மருதூர், மேல தெரு கிராமத்திற்கு சொந்தமான குளத்தை தூர்வாரி சுற்றுசுவர் அமைத்த பணிக்கு ரூ.11,49,000 செலவு செய்ததாக ஊராட்சிமன்ற அலுவலகத்தின் வெளியே திட்டப்பணி போர்டு வைக்கப்பட்டதால் மேலத்தெரு கிராம மக்கள், குளத்தில் எந்த பணியும் செய்யாமல் போர்டில் எழுதப்பட்டதால் வட்டார வளர்ச்சி அலுவலர் வரும் வரை ஊராட்சிமன்ற அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஊராட்சி செயலாளர் மணிராஜ் தெரிவித்தார்.

பின்னர், ஊராட்சி மேற்பார்வையாளர் சைமன்ராஜ் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதற்கு, மருதூர் கிராம மக்கள், 'எங்களுக்கு முடிவு தெரியாமல் நாங்கள் கலைந்து செல்ல மாட்டோம்' என தெரிவித்து காத்திருந்தனர். பின்னர், லால்குடி பி.டி.ஒ-விடம் தொலைபேசியில் மேற்பார்வையாளர் சைமன் தகவல் தெரிவித்து பின்னர் கிராம சபை கூட்டத்தில் அமர்ந்திருந்த ஒருவரிடம் பி.டி.ஓ பேசினார்.
"நான் உடல் நல குறைவால் மெடிக்கல் விடுப்பு எடுத்துள்ளேன். நான் வந்ததற்கு பிறகு அலுவலகத்திற்கு வாருங்கள். எந்தப் பணி திட்டமாக இருந்தாலும் நான் அதற்கு ஆதாரம் காட்டுகிறேன்" என பி.டி.ஓ செல்போனிலேயே உரையாடினார். அதற்கு கொஞ்சமும் அசராத கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அமர்ந்து வெளியே செல்லாமல் இருந்தனர்.
இதனால், சமயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைக்கப்பெற்று சமயபுரம் காவல் நிலைய போலீஸார் மருதூர் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வருகை தந்தனர். போலீஸார், கிராம மக்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து, ஊராட்சி மேற்பார்வையாளர் பி.டி.ஓ-யிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மீண்டும் மறுநாள் காலை 11 மணியளவில் மீண்டும் கிராம சபை கூட்டம் நடத்தப்படும். இதில், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா நேரில் வந்து விளக்கம் மற்றும் ஆவணங்கள் காண்பிப்பதாக தெரிவித்த பின்னர் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
அதனைத் தொடர்ந்து, இரண்டாவது நாளாக கடந்த 27 - ம் தேதி மருதூர் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில், லால்குடி வட்டார வளர்ச்சி கிராம ஊராட்சி அலுவலர் ராஜா, வட்டார ஊராட்சி அலுவலர் பாபு அண்ணாதுரை, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ் மற்றும் முன்னாள் ஊராட்சி செயலாளர் மகாலிங்கம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து, மருதூர் மேல தெரு மக்களுக்கு சொந்தமான குளத்தில் சுற்று சுவர் படித்துறை கட்டாமல் கட்டியதாக ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த விளம்பர போர்டில் ரூ 11,49,000 செய்யப்பட்டதாக தகவல் இடம்பெற்றுள்ளது. இதில், 2 - ம் நாள் நடைபெற்ற கூட்டத்தில் அதிகாரிகளிடம் கிராம மக்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, அங்கு இருந்த ஊராட்சி செயலாளர் மகாலிங்கத்திடம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் அந்த ஆவணத்தை பீரோவில் இருந்து எடுக்கச் சொன்னார். ஆனால், முன்னாள் ஊராட்சி செயலாளர் மகாலிங்கம் நீண்ட நேரமாக தேடியும் மருதூர் மேலத்தெரு குளம் சுற்று சுவர் அமைக்கப்பட்டிருந்ததற்கான ஆவணங்கள் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.
அதன் பிறகு, அந்த குளத்திற்கு சுற்று சுவர் அமைக்கும் திட்ட பணிக்காக வந்த தொகை மீண்டும் மாவட்ட ஆட்சியரிடமே அனுப்பி வைக்கப்பட்டதாக வட்டார வளர்ச்சி அதிகாரிகள் கிராம மக்களிடம் தெரிவித்து அதற்குப் பதிலாக இரண்டு தார் சாலை அமைத்ததாக தெரிவித்தனர்.
அப்போதும் விடாத மக்கள், அந்த தார் சாலை எங்கே இருக்கிறது என வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் கேட்டனர். அப்போது மருதூர் நேரு நகர் பகுதியில் 3 சாலை அமைக்கப்பட்டதாக தெரிவித்தனர். அதற்கு கிராம மக்கள், 'அந்த சாலையை எங்களிடம் காட்டுங்கள்' என கேட்டதற்கு, 'பிறகு வட்டார வளர்ச்சி அதிகாரி, ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்கள் என எல்லோரும் சென்று நேரு நகரில் உள்ள சாலையை பார்வையிட்டனர். அப்போது, ஏற்கனவே 14 -வது மத்திய நிதி குழு மானிய நிதிகள் அமைக்கப்பட்ட இரண்டு காங்கிரீட் சாலை ரூ. 3,67,000 மதிப்பீட்டில் போடப்பட்டது. ஆனால், சாலையை தமிழக அரசு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சாலை அமைக்கப்பட்டதாக கணக்கு காண்பித்திருக்கிறார்கள்.
ரூ. 5,30,000 செலவில் காங்கிரீட் சாலை அமைக்கப்பட்டதாக நிதியை கையாடல் செய்திருக்கிறார்கள் என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். அதனை தொடர்ந்து, மருதூர் மேலத்தெரு பகுதியில் உள்ள குளத்தை வட்டார வழங்கல் அதிகாரிகள் பார்வையிட்டனர். அப்போது, அப்பகுதியில் உள்ள கிராம மக்கள், 'எங்கள் பகுதியில் சாக்கடை கால்வாய் கட்டி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், மழைக்காலம் மற்றும் சாக்கடை கால்வாயில் தண்ணீர் வெளியே செல்ல முடியாமல் வீட்டிற்குள் வருவதாக வட்டார வளங்கள் அதிகாரி முன்னாள் கிராம மக்கள் குற்றம்சாட்டினர்.
மேலும், ஊராட்சிமன்ற அலுவலகத்தில் இறுதியாக பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கிராம மக்கள் வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம், குளத்தில் சுற்று சுவர் அமைப்பதற்கு ஒதுக்கிய நிதி மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்ததில் உண்மை நிலை குறித்து கடிதம் ஆக எழுதி கொடுக்க சொன்னதின் பேரில் வந்திருந்த வட்டார வளங்கள் அதிகாரிகள் 10 நாட்களுக்குள் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி ஆவணங்களை அறிக்கையாக தயார் செய்து மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்படும். மேலும், இதில் முறைகேடு இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்" என வட்டார வளங்கள் அதிகாரிகள் பொதுமக்களிடம் தெரிவித்தனர்.

அதனைத்தொடர்ந்து, நடந்தவை குறித்து பேசிய மருதூர் கிராம மக்கள் சிலர்,
"வட்டார வளர்ச்சி அலுவலர், மருதூர் ஊராட்சி மேலத் தெருவில் செய்யப்படாத குளத்தை ஆழப்படுத்தி படித்துறை மற்றும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளதே என்று கேட்டதற்கு அதற்கு அதிகாரிகள் அந்த நிதியாண்டில் குளத்தில் தண்ணீர் இருந்ததாகவும் அதனால் மாற்றுப் பணி செய்யப்பட்டதாகவும் விளக்கினர். ஆனால், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகளின் இயக்குனர் வழிகாட்டுதலின்படி ஒரு பணியை நிறுத்த வேண்டும் என்று சொன்னால் பிளாக் கமிட்டி மற்றும் கிராம சபையில் ஒப்புதல் பெற வேண்டும் மற்றும் மாற்றுப் பணி செய்வதற்கும் ஒப்புதல் பெற வேண்டும். அதற்கு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற விதிமுறையை அதிகாரிகள் மீறி செயல்பட்டு உள்ளனர்.
மேலும், பொதுமக்கள் அப்படி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட கிராம சபை புத்தகத்தை எங்களுக்கு எடுத்து காமியுங்கள் என்று சொன்னால் ஊராட்சி செயலாளர் அந்த புத்தகத்தை தேடிக்கொண்டே இருக்கிறார். அதிகாரிகளும் தேடிக் கொண்டே இருக்கின்றார்கள். ஆக எந்த ஒரு தீர்மானமும் நிறைவேற்றாமல் கிராம சபையில் ஒப்புதல் பெறாமல் ஒரு பணியை நிறுத்தி மாற்றுப் பணியை செய்வதற்கு அதிகாரிகளும் உடந்தையாக இருந்திருக்கிறார்கள்.
மாவட்ட ஆட்சியரின் உத்தரவு இல்லாமல் மோசடியாக இந்த வேலைகளை செய்துள்ளனர். மேலும், மாற்றுப் பணி செய்ததாக நேரு நகரில் ரூ.5,30,000 மதிப்பீட்டுக்கு சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டதாக சொன்னதின் பேரில் அதிகாரிகள் நேரடியாக கள ஆய்வு செய்ததின் பேரில் நேரு நகரில் ஏற்கனவே இரண்டு சாலைகள் மத்திய நிதி குழு மானிய நிதியில் போடப்பட்டிருந்தது. அதில் ஒரு சாலை 3,66,174 ரூபாய்க்கு போடப்பட்ட சாலையையே மீண்டும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 5,30,000 ரூபாய்க்கு போடப்பட்டதாக பொய்யாக கணக்கு எழுதி முறைகேடு செய்திருப்பது உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும், மீதி பணத்தை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியதாக அதிகாரிகள் சொன்னதின் பேரில். பொதுமக்கள் அப்படி எந்த ரூபாயும் அனுப்புவதற்கு உங்களுக்கு அதிகாரம் இல்லை. மாற்றுப் பணி செய்வதற்கு நீங்கள் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று வேறு பணிகளை செய்யலாம் என்று அதுதானே வழிகாட்டு நெறிமுறைகள் என்று சொன்னதற்கு அதிகாரிகள் மழுப்பி பேசினார்கள்" என்றார்கள்.














