"மதுரை வடக்கு காங்கிரஸுக்கு.. திருப்பி அடிக்கவும் தெரியும்!" - தளபதியை சீண்டும் ...
StartUp சாகசம் 55: `கூகுள் மாதிரி ஒரு நிறுவனம் நெல்லையிலிருந்துகூட வரலாம்!' - `திலிக்கான்வேலி' கதை
உலகளாவிய தொழில்நுட்ப வரைபடத்தில் பெங்களூரு, சென்னை போன்ற பெருநகரங்களே ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், தென் தமிழகத்தில் முன்னெடுக்கப்படும் வென்ச்சர் பில்டர் என்னும் வணிக மாதிரி ஒரு மிகப்பெரிய பொருளாதார மாற்றத்தை உருவாக்கும் வல்லமை கொண்டது.
வென்ச்சர் பில்டர் என்பது வெறுமனே முதலீடு செய்யும் நிறுவனம் மட்டுமல்ல; இது நிறுவனங்களை உருவாக்கும் ஒரு தொழிற்சாலையாகும். உதாரணமாக, ஒரு புதிய ஐடியாவை கையில் எடுப்பது, அதற்குத் தேவையான தொழில்நுட்பம், மனிதவளம், சட்ட ஆலோசனைகள் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகிய அனைத்தையும் ஒரே கூரையின் கீழ் வழங்குவது, பின்னர் அந்த ஐடியாவை ஒரு முழுமையான நிறுவனமாக மாற்றி இயக்குவது. இதுதான் திலிக்கான் வேலி போன்ற அமைப்புகளின் அடிப்படையாகும். நீங்கள் ஒரு ஐடியாவோடு வந்தால் போதும், அடுத்த 24 மணி நேரத்தில் உங்களுக்கான அலுவலகம் தயார் என்கிற நிலையை உருவாக்குகின்றன. இது உள்ளூர் தொழில் முனைவோருக்குக் கிடைக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.
தென் தமிழகத்திலேயே ஒரு சிலிக்கான் வேலி போன்ற சூழலை உருவாக்கும்போது, பெருநகரங்களை நோக்கிய இடப்பெயர்வு தடுக்கப்படுகிறது. இதனால் பெருநகரங்கள் நெரிசலின்றி மூச்சு விடவும், தென் மாவட்டங்கள் வளம் பெறவும் வழிவகுக்கும்.அங்கே உள்ள அனைவருக்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வேலை கிடைக்கும். இது சீரான பொருளாதாரப் பரவலுக்கும் வழிவகுக்கும்.

திலிக்கான் வேலி போன்ற முன்னெடுப்புகள் வெறும் ரியல் எஸ்டேட் திட்டங்கள் அல்ல, இவை சமூகப் பொருளாதார மாற்றத்திற்கான வினையூக்கிகள். இதன் மூலம், அடுத்தக்கட்ட கூகுளோ அல்லது பேஸ்புக்கோ சிலிக்கான் வேலியில் இருந்து அல்ல, நம் திலிக்கான்வேலியில் இருந்துகூட உருவாகலாம்.
இந்த வார ஸ்டார்ட்-அப் சாகசத்தில், திருநெல்வேலி அம்பாசமுத்திரத்தில் பிறந்து, அமெரிக்காவில் நிறுவனத்தைத் துவக்கி, பின்னர் மீண்டும் தன் சொந்த மண்ணான திருநெல்வேலியில் திலிக்கான்வேலி (Tiliconveli Tech Park) என்ற வென்ச்சர் பில்டர் நிறுவனத்தை உருவாக்கி செயல்படுத்தி வரும், திலிக்கான் வேலி நிறுவனர் திரு. பிரபாகரன் முருகையா அவர்களின் திலிக்கான்வேலி ஆரம்பித்த சாகசக் கதையைக் கேட்போம்.
``அமெரிக்காவில் வெற்றிகரமாக இயங்கி வரும் நீங்கள், உங்கள் சொந்த ஊரான திருநெல்வேலியில் 'திலிக்கான்வேலி' (Tiliconveli Tech Park) என்ற இந்தத் தொழில்நுட்பப் பூங்காவைத் தொடங்குவதற்கான மூலக்கரு அல்லது உந்துதல் எப்படி ஏற்பட்டது?"
``இதற்கு மிக முக்கியமான காரணம் ஒன்று உண்டு. திருநெல்வேலி என்பது அடிப்படையில் விவசாயம் சார்ந்த ஒரு பெரிய பகுதி. இங்குள்ள பெரும்பாலானோர் விவசாயிகள். தனிப்பட்ட முறையில், இங்கு வேலைவாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் தான் என்னைப்போல பலரும் வெளியூர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் செல்ல வேண்டியிருந்தது. அப்படி வெளியே சென்ற பிறகு, வயதான காலத்தில் என் தாய் தந்தையருடன் இருக்க முடியவில்லையே, அடிக்கடி ஊருக்கு வந்து அவர்களுடனும், உறவினர்களுடனும் நேரம் செலவிட முடியவில்லையே என்ற பெரிய வருத்தம் எனக்குள் இருந்துகொண்டே இருந்தது.
அப்போது எனக்குத் தோன்றியது, 'இங்கேயே ஒரு வாய்ப்பை உருவாக்கினால் என்ன?'. அப்படி ஒரு வாய்ப்பு இருந்தால், நிறைய பேர் இங்கேயே தங்கி வேலை பார்க்கத் தயாராக இருப்பார்கள். எனக்கு அப்படி ஒரு வாய்ப்பு அன்று கிடைத்திருந்தால், நானும் இங்கேயேதான் இருந்திருப்பேன்.

ஆனால், நான் உருவாக்க நினைத்த அந்த வாய்ப்பு, ஏதோ ஒரு வேலை என்று சாதாரணமாக இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். ஒருவர் வெளியூர் சென்றால் அவருக்கு என்ன வாய்ப்பு கிடைக்குமோ, அதே அளவு வாய்ப்பு இங்கேயும் கிடைக்க வேண்டும். பணத்தை விட முக்கியமாக, கற்றல் , ஒரு பெரிய பிராண்ட் (Brand), மற்றும் ஒரு நல்ல நிறுவனத்தில் வேலை பார்க்கிறோம் என்ற பெருமிதம் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும். அந்த உணர்வை உருவாக்க, அதற்கு ஈடான உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு அவசியம்.
அந்தக் கட்டிடத்தைப் பார்த்தாலே, 'இது உலகத்தரம் வாய்ந்த ஐடி நிறுவனம்' என்ற உணர்வு வர வேண்டும். சென்னைக்கோ, பெங்களூருக்கோ, ஏன் அமெரிக்காவுக்கோ செல்வதற்கு இணையான ஒரு வாய்ப்பு இங்கேயே கிடைக்கிறது என்று அவர்கள் நினைக்க வேண்டும்.
இதன் மூலம் இரண்டு பக்கமும் ஒரு தீர்வு கிடைக்கிறது. ஒன்று, பிள்ளைகள் நம் கண் முன்னே, நம் பக்கத்திலேயே இருக்கிறார்கள் என்ற சந்தோஷம் பெற்றோருக்குக் கிடைக்கும். நான் பட்ட பிரிவின் துயரத்தை, இனி வரும் தலைமுறைப் பிள்ளைகள் படக்கூடாது என்ற அந்த ஒரு எண்ணம் தான், இந்தத் 'திலிக்கான்வேலி' உருவாக முக்கியக் காரணம்."
`பெருநகரங்களை விட்டுவிட்டு, திருநெல்வேலி போன்ற இரண்டாம் நிலை நகரத்தில் (Tier-2 City) இப்படி ஒரு உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பை உருவாக்கத் தொடங்கியபோது, உங்களுக்கு யாருடைய ஆதரவு கிடைத்தது?"
``இதற்கு முழுமுதற் ஆதரவு தந்தது யார் என்று கேட்டால், அது என் மனைவியும் குழந்தைகளும் தான். நான் அவர்களை சமாதானப்படுத்தவோ, நம்பிக்கையூட்டவோ (Convince) வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த என் குழந்தைகளும், என் மனைவியும் என்னிடம் சொன்னது ஒன்றே ஒன்றுதான்: 'நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம், நீங்கள் எதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதைத் தயங்காமல் செய்யுங்கள்' என்று முழு ஆதரவு கொடுத்தார்கள்.எந் த ஒரு செயலுக்கும் நமது குடும்பத்தினர்தான் முதலில் ஆதரவு தரவேண்டும். எனவே என் குடும்பத்தினர் எனக்கு வழங்கிய ஆதரவு என்னை இன்னமும் ஊக்கத்தோடு செயல்பட உதவியது."

``இது போன்ற பிரம்மாண்டமான உள்கட்டமைப்புத் திட்டத்திற்கு மிகச்சிறந்த முதலீடு தேவைப்படும். கட்டுமானப் பணிகளில் என்ன சவால்களை எதிர்கொண்டீர்கள்?"
``பொதுவாக நம் ஊர் மக்கள் மத்தியில் ஒரு மனநிலை உண்டு. எதைச் செய்வதாக இருந்தாலும், அதை ஏற்கனவே செய்த அனுபவம் உள்ளவர்களையே தேடுவார்கள். பணியாளர் தேர்வாகட்டும், வேறு எந்த வேலையாகட்டும், 'முன்பு செய்த அனுபவம் உள்ளவரே அதை மீண்டும் செய்யச் சிறந்த நபர்' (Best person to do that again) என்பது ஒரு எழுதப்படாத விதி.
ஆனால், நான் அந்த வழியில் செல்லவில்லை. அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் (Silicon Valley) உள்ள ஒரு கட்டிடத்தின் புகைப்படத்தை மட்டும் எடுத்து வந்து காட்டினேன். 'இதே மாதிரி இங்கே கட்ட வேண்டும்', அவ்வளவுதான் நான் சொன்னது.
இதற்காக கோயம்புத்தூரில் இருந்து பொறியாளர்கள் வந்தார்கள். உள் அலங்காரம் (Interior) மற்றும் குளிர்சாதன வசதிகளுக்குச் சென்னையில் இருந்து நிபுணர்களை அழைத்தோம். கூடவே உள்ளூர் மக்களையும் பயன்படுத்திக் கொண்டோம். எல்லோரும் இணைந்து ஒரு குழுவாகச் செயல்பட்டனர். வடிவமைப்பு, கட்டுமானம், பராமரிப்பு என எல்லா நிலைகளிலும் சவால்கள் இருந்தன. ஆனால், அது எதுவும் எனக்குக் கஷ்டமாகத் தெரியவில்லை. தமிழில் பேசியே உலகத்தரம் வாய்ந்த ஒரு விஷயத்தைச் சாதித்துவிட முடியும் என்பதை நாங்கள் நிரூபித்தோம்.

உண்மையைச் சொல்லப்போனால், 'இது ஒரு நல்ல முயற்சி, இதில் நாங்களும் பங்களிக்கிறோம்' என்று உள்ளூர் அரசாங்க அதிகாரிகள் முதல் அனைவரும் எனக்கு 100 மடங்கு இல்லை, 1000 மடங்கு ஆதரவு கொடுத்தார்கள். அமெரிக்காவில் இருந்து கொண்டு இதைச் செய்வது கடினம் என்று நினைத்தேன். ஆனால், ஆச்சரியப்படும் வகையில் உள்ளூரிலேயே நம்பிக்கையான மனிதர்கள் எனக்குக் கிடைத்தார்கள். நாம் ஒரு நல்ல நோக்கத்தை முன்னெடுக்கும்போது, பிரபஞ்சமே அதற்குத் துணை நிற்கும் (Law of Attraction) என்று சொல்வார்களே, அதுபோல நட்சத்திரங்கள் எல்லாம் ஒரே நேர்கோட்டில் அமைந்ததுதான் (Stars are aligned) இதன் வெற்றிக்கு மூலதனம்."
``சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களுடன் ஒப்பிடும்போது, திருநெல்வேலியில் முதலீடு செய்வது சவாலானது. உங்களின் நிதி அணுகுமுறை என்னவாக இருந்தது?"
``முதலீடு நிச்சயம் ஒரு சவாலாகத்தான் இருந்தது. ஆனால், எனக்குள் நான் சொல்லிக்கொண்ட ஒரு விஷயம், 'மனம் இருக்கும்போது பணம் இருக்காது, பணம் இருக்கும்போது அதைச் செய்ய மனம் இருக்காது'. இதுதான் என்னுடைய சிந்தனை ஓட்டம்.
இப்போது நமக்குச் செய்ய வேண்டும் என்ற மனம் இருக்கிறது, எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை இப்போதே செய்துவிடுவோம் என்று முடிவெடுத்தேன். பிற்காலத்தில் நிறுவனத்தை வளர்த்து, விற்று, பணம் வந்த பிறகு, இதே உத்வேகம் (Motivation) இருக்குமா என்று தெரியாது. அதனால் கடன் வாங்கியாவது, நண்பர்களின் உதவியுடனாவது இதைச் செய்துவிட வேண்டும் என்று களமிறங்கினேன்.
இதே முதலீட்டைப் பெங்களூருவிலோ, சென்னையிலோ செய்திருந்தால் அதற்கான வருமானம் நிச்சயம் வேறாக இருந்திருக்கும். திலிக்கான்வேலியைப் பொறுத்தவரை, இதை நான் ஒரு 'லாப நோக்கற்ற முயற்சி' (Not for profit venture) என்றுதான் பார்க்கிறேன். பணத்தை அதிகம் சம்பாதித்து என்ன செய்யப்போகிறோம்? ஒன்று நன்கொடை அளிப்போம், அல்லது பிள்ளைகளுக்குக் கொடுப்போம். ஆனால் நான் என் பிள்ளைகள் தங்கள் சொந்தக் காலில் நிற்கக் கற்றுக்கொடுத்துவிட்டால், நாம் அவர்களுக்குச் சொத்து சேர்க்கத் தேவையில்லை. எனவே, அந்தப் பணத்தை இந்த மண்ணில் முதலீடு செய்வோம் என்று நினைத்தேன்.
முக்கியமாக, நாம் தொழிலில் சுறுசுறுப்பாக இருக்கும்போதே இதைச் செய்தால்தான் சாதிக்க முடியும். ஓய்வு பெற்ற பிறகு, 'எனக்கு வாய்ப்பு கொடுங்கள்' என்று கேட்டால் யாரும் நமக்குச் செவிசாய்க்க மாட்டார்கள், ஏன் Appointment கூட கிடைக்காது. செய்யும் காலத்தில், சரியான நேரத்தில் இதைச் செய்துவிட வேண்டும் என்பதுதான் என் கருத்து."

பிற அலுவலகக் கட்டடங்களிலிருந்து 'திலிக்கான்வேலி' எப்படி மாறுபடுகிறது? இங்கு வரும் நிறுவனங்களுக்கு நீங்கள் வழங்கும் தொழில் சூழல் அமைப்பு (Startup Ecosystem) எத்தகையது?
``திலிக்கான்வேலி என்பது வெறும் கட்டிடமோ அல்லது வேலைவாய்ப்பு மையமோ கிடையாது. இது ஒரு புதிய தொழில் சூழல் அமைப்பின் (Startup Ecosystem) தொடக்கம்.
உதாரணத்திற்கு, நாமக்கல் என்றாலே முட்டை, திருப்பூர் என்றால் பின்னலாடை, சிவகாசி என்றால் பட்டாசு என்று ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தொழில் அடையாளம் உண்டு. அதுபோல, திருநெல்வேலிக்கு 'திலிக்கான்வேலி' மூலம் பல சிலிக்கான் வேலி சூழலைக் கொண்டுவர வேண்டும் என்பதுதான் என் ஆசை.
நாமக்கல்லில் ஒருவர் கோழிப்பண்ணை வைத்தால், அதைப் பார்த்து இன்னும் பலர் வருவார்கள். அவர்களுக்குள் போட்டி இருக்கும், ஆனால் அந்தப் போட்டிதான் தரத்தை உயர்த்தும் (Optimize), விலையைக் குறைக்கும், வளர்ச்சியைத் தரும். இதே கோட்பாடுதான் இங்கும். நாங்கள் ஒரு 1000 பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கினால், அதைப் பார்த்து இன்னும் நான்கு நிறுவனங்கள் வரும். மொத்தமாக 5000 பேர் வேலை செய்யும்போது, அது ஒரு தொழில் கூட்டமைப்பாக (Cluster) மாறும்.
இன்று 12 நிறுவனங்கள் திலிக்கான்வேலியில் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கானோர் இங்கிருந்து பயிற்சி பெற்று, உலகின் பல இடங்களுக்குச் சென்றுள்ளனர். 'பரவாயில்லை, நீங்கள் இங்கே கற்றுக்கொண்டு, பறந்து செல்லுங்கள்' என்றுதான் நான் சொல்கிறேன். முதல் கட்டம் வெற்றி பெற்றுவிட்டது. இன்னும் பல நிறுவனங்கள் இந்தச் சூழலைத் தேடி வந்துகொண்டே இருக்கின்றன".

``கிராமப்புறம் மற்றும் சிறுநகரங்களில் திறமையான ஊழியர்கள் கிடைப்பது சிரமம் என்ற பொதுவான கருத்து உள்ளதே? இதை எப்படி முறியடித்தீர்கள்?"
``இதற்கு நானே முதல் சாட்சி. அமெரிக்காவில் நான் 'TechFetch.com' நிறுவனத்தைத் தொடங்கிய அதே நேரத்தில், அதன் பின்னணிச் செயல்பாடுகளைத் (Back-end operations) திருநெல்வேலியில் தொடங்கினேன். அமெரிக்காவில் நாங்கள் வேலைவாங்கிக் கொடுத்துள்ளோம். ஆனால், அந்தத் தளத்தின் (Platform) அத்தனை தொழில்நுட்ப மேம்பாடுகளும் திருநெல்வேலியில் இருந்துதான் செய்யப்பட்டன.
'திருநெல்வேலி மக்கள், அமெரிக்காவில் 10 லட்சம் பேருக்கு வேலை கிடைக்க உதவினார்கள். நாங்கள் வரலாறு படைத்தோம்' (We created history) - இந்த வரியை நான் முதல் நாளிலேயே எழுதி வைத்துவிட்டேன். அமெரிக்காவில் இருக்கும் அலுவலகத்தைத் தவிர, இந்தியாவில் வேறு எங்கும் எங்களுக்கு கிளை கிடையாது; அனைத்தும் திருநெல்வேலிதான்.
இதைத்தான் நான் மற்ற நிறுவனங்களிடமும் சொல்கிறேன். 'நாங்கள் சாதித்தோம், உங்களால் ஏன் முடியாது?' என்று கேட்டு அவர்களை வரவழைக்கிறேன். அவர்களுக்கு வெறும் இடத்தை மட்டும் கொடுக்காமல், 'Plug and Play' வசதியை அளிக்கிறோம். அதாவது, இன்று வந்தால் நாளையே வேலையைத் தொடங்கலாம். ஆட்களைத் தேர்வு செய்வது முதல், நேர்காணல் நடத்துவது வரை முழு ஆதரவையும் (Full Ecosystem support) வழங்குகிறோம். இங்குள்ள பணியாளர்களின் விசுவாசமும், திறமையும் நிறுவனங்களுக்குப் பெரிய வரப்பிரசாதமாக உள்ளது."
இரண்டாம் நிலை நகரங்களில் தகவல் தொடர்புத் திறன் குறைவாக இருக்கும் என்ற விமர்சனத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
``அது ஒரு எதார்த்தமான உண்மைதான். ஆனால், ஆட்கள் கிடைக்கவில்லை என்ற பிரச்சனை அமெரிக்காவிலயும் இருக்கிறது. அதனால் தான் அவர்கள் இந்தியாவைத் தேடி வருகிறார்கள். சென்னையில் இருப்பவர்கள் யார்? 50-60 சதவீதம் பேர் இரண்டாம் நிலை நகரங்களில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள் தான்.
மூலமே இங்குதான் இருக்கிறது. சென்னையில் செய்வது போல, இங்கும் திறமைகளை உருவாக்க வேண்டும் (Create Talent). அனுபவம் வாய்ந்த மூத்தவர்கள் ஃப்ரெஷர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். 'சகோதரி நகரங்கள்' (Sister Cities) கோட்பாட்டின் படி, பெரிய நகரங்களின் அனுபவத்தைச் சிறிய நகரங்களுக்குக் கொண்டு வர வேண்டும்.
20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் 30,000 ஐடி ஊழியர்கள் கூட இல்லை. இன்று 30 லட்சம் பேர் இருக்கிறார்கள் என்றால், அது திறமையை உருவாக்கியதால் வந்ததுதான். அதில் 20 லட்சம் பேர் இது போன்ற சிறிய நகரங்களில் இருந்து வந்தவர்கள் தான். எனவே, தொடர்புத் திறன் குறைவாக இருக்கும் என்பதால் ஆட்கள் கிடைக்கவில்லை என்பது இரண்டாம் நிலை நகரங்களைப் புறக்கணிப்பதற்கான ஒரு காரணமாக இருக்கக்கூடாது."
திலிக்கான்வேலியின் அடுத்தக்கட்ட இலக்கு என்ன? 2030-க்குள் என்ன சாதிக்கத் திட்டமிட்டுள்ளீர்கள்?
``திலிக்கான்வேலி என்பது இன்று ஒரு அங்கீகரிக்கப்பட்ட பிராண்டாக மாறியுள்ளது. இங்கு அலுவலகம் இருக்கிறது என்று சொன்னாலே, அது ஒரு நல்ல நிறுவனம் என்ற நற்பெயர் கிடைக்கிறது. எங்களின் அடுத்த இலக்கு, 2030-ம் ஆண்டிற்குள் 10,000 தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை உருவாக்குவது (10,000 IT Jobs Creation).
நாங்கள் இங்கு வாய்ப்புகளை உருவாக்குகிறோம். நான் ஏற்கனவே சொன்னது போல, 'இந்தப் பறவைகள் சிறகடித்துப் பறக்கட்டும், கடல் கடந்து செல்லட்டும்'. என்றாவது ஒருநாள் அவர்கள் திரும்பி வந்து, இங்கே புதிய நிறுவனங்களைத் தொடங்குவார்கள். முதல் 1000 வேலைகளை உருவாக்க 10 ஆண்டுகள் ஆனது. ஆனால், எங்களிடம் உள்ள அனுபவம் மற்றும் திட்டங்களைக் கொண்டு, அடுத்த 5 ஆண்டுகளில் 10 மடங்கு வளர்ச்சியை எட்ட முடியும் என்று நம்புகிறோம்."

``செயற்கை நுண்ணறிவு (AI) இரண்டாம் நிலை நகரங்களில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்? உங்களின் '4-4-4-4' கோட்பாடு பற்றிச் சொல்லுங்கள்."
"செயற்கை நுண்ணறிவு (AI) எதிர்கால வேலைவாய்ப்பில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும். அதை நான் '4-4-4-4' என்று வரையறுக்கிறேன்.
4 நாள் வேலை (4 Days a week)
நாள் ஒன்றுக்கு 4 மணி நேரம் (4 Hours a day)
4 ஷிப்டுகள் (4 Shifts) -
4 டாலர் செலவு (4 Dollars per hour) - AI Agentt.
எதிர்காலத்தில் மனிதர்களுக்கு ஒரு ' AI Agent' உதவியாக இருக்கும். நாம் வேலை செய்யாத நேரத்திலும் அது நமக்காக வேலை செய்யும். இதனால், மக்கள் வாரத்திற்கு 16 மணி நேரம் மட்டுமே வேலை செய்வார்கள். மீதமுள்ள நேரத்தில் தங்களுக்குப் பிடித்தமான விஷயங்களை, அதாவது இயற்கை விவசாயம் செய்வதையோ, பயணம் செய்வதையோ மேற்கொள்வார்கள்.
இது இரண்டாம் நிலை நகரங்களுக்கு 100 மடங்கு வாய்ப்புகளை உருவாக்கும். 'படித்ததற்கான வேலை, பிடித்ததற்கான தொழில்' - இதுதான் இனி தாரக மந்திரம். நகர நெரிசலில் சிக்காமல், குறைந்த மன அழுத்தத்துடன், தரமான வாழ்க்கையை (Quality of Life) வாழ்வதற்கான சூழல் இரண்டாம் நிலை நகரங்களில்தான் கிடைக்கும். அதற்கான AI பயிற்சிகளை நாங்கள் இப்போதே தொடங்கிவிட்டோம்."

















