ஜனநாயகன்: சென்சார் சர்டிபிகேட் சிக்கல்; விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம் - விரிவா...
சித்த மருத்துவத்தில் உற்பத்தி, விநியோகம்; 13 கிளை - `நல்வழி' மருந்தகத்தின் கதை | StartUp சாகசம் 52
இந்தியாவின் 'ஆயுஷ்' (AYUSH) சந்தை மிகவேகமாக வளர்ந்து வருகிறது. 2024-25 நிதியாண்டில், இந்திய பாரம்பரிய மருத்துவத்தின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு சுமார் 416 மில்லியன் டாலராக (சுமார் ₹3,400 கோடி) மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2030-ஆம் ஆண்டிற்குள் 707 மில்லியன் டாலரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, சித்த மருத்துவம் தென் இந்தியாவில், அதிலும் தமிழகத்தில் மிக வலுவான சந்தையைக் கொண்டுள்ளது.
2024-25-ல் ஆயுஷ் மருந்துகளின் ஏற்றுமதி 6.11% எட்டியுள்ளது. மலேசியா, இலங்கை மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகள் சித்த மருந்துகளுக்குப் வரவேற்பு இருக்கின்றது.
ஆயுஷ் அமைச்சகம் சில ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது ஆராய்ச்சி மற்றும் புதிய தொழில்முனைவோருக்கான வாய்ப்புகளை அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டினர் நமது இயற்கை மற்றும் பாரம்பரிய சிகிச்சைக்காக இந்தியா வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது, இது சித்த மருத்துவமனைகளுக்குப் பெரிய வாய்ப்பாகும்.
சித்த மருத்துவம் தற்போது வெறும் சிகிச்சை முறையாக மட்டுமல்லாமல், நவீன அறிவியல் தொழில்நுட்பங்களுடன் இணைந்து 'ஹெர்பல் காஸ்மெட்டிக்ஸ்' (Herbal Cosmetics) மற்றும் ஆரோக்கிய பானங்கள் துறையிலும் மிகப்பெரிய வணிக வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது.
சித்த மருத்துவத் துறையில் தரம் மற்றும் அறிவியல் ரீதியான தரவுகளை மேம்படுத்தினால், உலகளாவிய சந்தையில் தமிழர்களின் இந்தத் தனித்துவமான மருத்துவம் பெரும் உச்சத்தை அடையும்.
தமிழ்நாட்டில் இருந்து ஒரு நிறுவனம் தனது முயற்சிகளால் சித்த மருத்துவ மருந்தங்களை ஆரம்பித்து இதுவரை 13 கிளைகள் அமைத்து சித்த மருந்துங்களை விற்பனை செய்துவருகிறது, சித்த மருத்துவம் சார்ந்த பெரிய நிறுவனங்கள் ஆதிக்கம் செய்துவரும் நிலையில் அவர்களுக்கு இணையாக `நல்வழி மருந்தகம்' எனும் இந்நிறுவனமும் ஒரு நல்ல செயல்பாட்டைக் கொண்டுவருகிறது, நல்வழி மருந்தகத்தின் நிறுவனம் திரு.கரிகாலன் அவர்களுடன் அவர் வளரும் சாகசக்கதையை கேட்போம்
``நல்வழி மருந்தகம் எனும் கடை அமைக்க எப்படி ஆர்வம் பிறந்தது? "
``என் தந்தை ஒரு ஓமியோபதி மருத்துவர். அதன் தாக்கத்தால், 1991-ல் என் அண்ணன் ‘தென்றல் மருந்தகம்’ என்ற பெயரில் ஒரு ஓமியோ, சித்த, ஆயுர்வேத மருந்தகத்தை ஆரம்பித்தார். நான் படித்து முடித்த பின் அவருடன் இணைந்து பணியாற்றினேன். எனக்கு மொத்த விற்பனையில் (Wholesale) அதிக ஈடுபாடு இருந்ததால், 1997-ல் ஊற்றங்கரையில் ‘நல்வழி மருந்தகம்’ என்ற பெயரில் தனியாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கினேன்.
2000-ல் அதன் மொத்த வணிகத்தைத் திருப்பத்தூரில் ஆரம்பித்தோம். 2016-ல் எங்களது 20-வது ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினோம். 29-ஆம் ஆண்டில் 13 கிளைகள், ஓமியோ மற்றும் சித்த ஆயுர்வேத மருந்து உற்பத்தி நிறுவனங்களுடனும் தொடர்கிறோம். தற்பொழுது ஆன்லைன் விற்பனையும் (nalvazhiayush.com) தொடங்கியுள்ளோம்

``சித்த மருத்துவத்தில் உற்பத்தி அல்லது விநியோகம் - இரண்டையும் செய்ய முடியும் என்ற எண்ணம் எப்படி வந்தது?"
``விற்பனைதான் எங்கள் பலம். தமிழ்நாட்டில் சித்த மருந்து மொத்த விற்பனையாளர்களில் முதல் 5 இடங்களுக்குள் நாங்கள் இருக்கிறோம். வாடிக்கையாளர் எண்ணிக்கையில் முதலிடம் என்றுகூடச் சொல்லலாம். உற்பத்தித் துறை நாங்கள் விரும்பித் தேர்ந்தெடுத்ததல்ல; அது எங்களைத் தேடி வந்தது.
“V.J. Rao Pharma” உரிமையாளர் மரு. குருவரப்பிரசாத் DHMS அவர்கள், “என்னால் இந்நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல இயலவில்லை, உங்களால் தான் முடியும்” என்று எங்களிடம் ஒப்படைத்தார். அதேபோல, “குறிஞ்சி பார்மா” உரிமையாளரும் எனது நெருங்கிய நண்பருமான ஈரோடு மரு.கண்ணன் BSMS அவர்கள் மாரடைப்பால் காலமானதைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தை நடத்த அவரது குடும்பத்தினர் தயாராக இல்லாததால், நாங்கள் உற்பத்தியாளர் பணியையும் கையில் எடுக்க வேண்டியதாயிற்று. "
``சந்தையில் சித்த மருத்துவத்திற்கு வரவேற்பு எப்படி இருக்கிறது? அரசின் ஆதரவு மற்றும் திட்டங்களை நீங்கள் பயன்படுத்துகிறீர்களா?"
``சிக்குன்குனியா பாதிப்புக்குப்பிறகு, மக்களிடையே சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வு பெருமளவு அதிகரித்துள்ளது. சிக்குன்குனியா காலத்தில் ‘நிலவேம்புக் குடிநீரும்’, கோவிட் காலத்தில் ‘கபசுரக் குடிநீரும்’ லட்சக்கணக்கான மக்களுக்குப் பயன் அளித்தன. தமிழக அரசும் அந்த நேரத்தில் சித்த மருத்துவத்திற்கு உரிய வாய்ப்பையும், மரியாதையும் வழங்கியது.
கோவிட் முடக்கக் காலத்தில், அன்றைய திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் திரு. சிவனருள் இ.ஆ.ப அவர்களின் உத்தரவுப்படி, சேவை அமைப்புகளின் உதவியுடன் ஒரு வாரத்தில் சுமார் 20 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவசமாகக் கபசுரக் குடிநீர் வழங்கியது மிகுந்த மனநிறைவைத் தந்தது.
இருப்பினும், அரசாங்கம் சித்த மருத்துவத்தை இன்னும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றே கருதுகிறேன். இத்துறையில் ஆய்வுகள் (Research) இன்னும் அதிகரிக்க வேண்டும். குறைந்த செலவில் சிறந்த மருத்துவக் கட்டமைப்பை உருவாக்க சித்த மருத்துவத்தை முன்னிலைப்படுத்துவது அவசியம். இதற்குத் தமிழகம் முன்னோடியாகத் திகழ வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள்."

கிளைகள் அமைக்கும் எண்ணம் எப்படி வந்தது? ஆங்கில மருந்துக்கடைகள் பெருகி வரும் சூழலில் இது லாபகரமானதா?
``எங்களுக்கு தற்போது 13 கிளைகள் உள்ளன. தரமான சித்த மருந்துகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இந்தியாவின் அனைத்து முன்னணி நிறுவனங்களின் தரமான சித்த மருந்துகள் சிற்றூர்களிலும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே கிளைகளைத் தொடங்கினோம். இதனை மேலும் விரிவாக்குவோம்.
நிச்சயமாக, சித்த மருத்துவக் கிளைகள் லாபகரமான தொழில்தான். ஆர்வமுள்ளவர்களுக்குப் பயிற்சி அளிக்க நாங்கள் தயாராக உள்ளோம். அவர்களின் பொருளாதார வசதிக்கு ஏற்ப, சொந்தமாகவோ அல்லது எங்கள் கிளை மேலாளர்களாகவோ அவர்கள் பணியாற்றலாம். யோகா இன்று உலகளவில் புகழ்பெற்று வருவது போல, நம் நாட்டுச் சித்த மருந்துகளும் உலகெங்கும் பரவுவது நிச்சயம் முன்னேற்றத்தைத் தரும்."
``தொடக்கத்திலும் தற்போதும் நீங்கள் சந்திக்கும் சிக்கல்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் என்ன?"
``பிரச்சினைகளை நான் வாய்ப்புகளாகவே பார்க்கிறேன். ஒவ்வொரு சிக்கலும் ஒரு தீர்வைத் தரும்போது, அது வளர்ச்சியாக மாறுகிறது. ஆரம்ப காலத்தில் விழிப்புணர்வு இல்லாததே பெரிய சிக்கலாக இருந்தது. மருந்து நிறுவனங்களுடன் இணைந்து விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தினோம்; அது பெரிய வளர்ச்சியைத் தந்தது.
தற்காலச் சூழலில், விரைவாகப் பணம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கில் சிலர் மருந்தின் தரத்தைக் கோட்டை விட்டுவிடுகின்றனர். நோய்க்குத் தீர்வு கண்டு நோயாளிகளைத் தக்கவைப்பதற்குப் பதிலாக, வந்திருக்கும் நோயாளியிடமே அதிக வருமானம் ஈட்ட நினைப்பது வளர்ச்சியைத் தடுக்கும்.
தன்னம்பிக்கையின்மையும், தங்களைப் புதுப்பித்துக் கொள்ளாததுமே இத்துறையினரின் பலவீனமாக உள்ளது. ஆங்கில மருந்துகளுடன் ஒப்பிடும்போது நாம் இன்னும் 5% வளர்ச்சியைக் கூட எட்டவில்லை. தரத்தையும், அறிவையும், தன்னம்பிக்கையையும் வளர்த்துக்கொண்டால் 50% மேல் வளர முடியும் என்பது எனது நம்பிக்கை."

``மருந்து உற்பத்திக்குத் தேவையான மூலிகைகள் எளிதாகக் கிடைக்கின்றனவா?"
``மூலிகைகள் கிடைப்பது பருவ காலத்தைப் பொறுத்து மாறுபடுகிறது. வட இந்தியாவில் மூலிகைப் பயிரிடுதல் (Herbal Farming) மிக மேம்பட்டுள்ளது. எனவே, உள்ளூரில் தேவைகள் பூர்த்தியாகாத போது மற்ற மாநிலங்களிலிருந்து வாங்கிக் கொள்கிறோம். ஆங்கில மருந்துகளைப் போலச் சித்த மருந்துகளை நினைத்தவுடன் உருவாக்கிவிட முடியாது. மூலப்பொருட்களுக்கு விவசாயத்தையே நம்பி இருப்பதால் மழை, வெயில், பனி போன்ற இயற்கை மாற்றங்களே மூலிகைகளின் வரத்தைத் தீர்மானிக்கின்றன."
தமிழ்நாட்டில் மருந்து உற்பத்தி மற்றும் விற்பனையில் பிற நிறுவனங்களின் பங்களிப்பு எப்படி உள்ளது?
``தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ‘IMPCOPS’ எனும் கூட்டுறவு நிறுவனம் 80 ஆண்டுகளுக்கும் மேலாகச் சித்த, ஆயுர்வேத, யுனானி மருந்துகளை அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு சேர்த்துள்ளது. தற்போது ‘SKM’ நிறுவனம் சிறப்பாகச் செயல்படுகிறது. இந்திய அளவில் ஆயுர்வேதத் துறையில் Dabur, Zandu, Baidyanath, Himalaya, Kottakkal, AVN போன்ற நிறுவனங்கள் நம்பிக்கையுடன் வளர்ந்து வருகின்றன.
இவை தவிர அரவிந்த் ஹெர்பல், சோலமலை, ராஜா சித்தா, ஜெம் ட்ரீஸ், சத்யாஸ் ட்ரக்ஸ், அன்னை அரவிந்த், மெடிசித், குறிஞ்சி பார்மா, அகத்தியர் ஹெர்பல் போன்ற பல நிறுவனங்கள் பல்லாண்டுகளாகச் சேவையாற்றி வருகின்றன. ஆண்மைக் குறைவு, மூட்டுவலி, தோல் நோய்கள், சுவாசக் கோளாறுகள், கல்லீரல் நோய்கள் போன்றவற்றுக்குச் சித்த மருத்துவமே பக்கவிளைவற்ற தீர்வைத் தரும் என்று மக்கள் நம்புகின்றனர். இதனை மேலும் அறிவியல் பூர்வமாக விரிவுபடுத்தச் சித்த மருத்துவர்கள் ஒன்றிணைய வேண்டும். அவ்வாறு செய்தால், மூலிகை விவசாயம் பெருகும், காடுகள் பாதுகாக்கப்படும், இயற்கை போற்றப்படும்."

``சாதாரணத் தலைவலி மற்றும் காய்ச்சலுக்குச் சித்த மருத்துவம் எதைப் பரிந்துரைக்கிறது?"
``சளி, இருமல், காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி போன்ற தீவிர பாதிப்புகளுக்கு (Acute diseases) சித்த மருந்துகள் மெதுவாகத்தான் வேலை செய்யும் என்பது தவறான கருத்து. இம்மாதிரியான நோய்களுக்குச் சித்த மருத்துவத்தில் உடனடி பலன் தரும் மருந்துகள் உள்ளன. ‘ஆடாதோடை மணப்பாகு’, ‘சுவாசக் குடோரி’, ‘நீர்க்கோவை மாத்திரை’, ‘தாளிசாதி வடகம்’ என நூற்றுக்கணக்கான மருந்துகள் உள்ளன. மருத்துவரின் ஆலோசனையோடு எடுத்தால் உடனடி நிவாரணம் பெறலாம்."
``வெளிநாடுகளில் சித்த மருந்துகளை விற்பனை செய்வதற்கான வாய்ப்புகள் மற்றும் சவால்கள் என்ன?"
``உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் இடங்களில் சித்த மருத்துவத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆயுர்வேத நிறுவனங்கள் பெரிய அளவில் முதலீடு செய்து வெளிநாட்டு மருந்து கட்டுப்பாட்டுத் துறைகளின் அனுமதியைப் பெறுகின்றன. அந்த அளவிற்குச் சித்த மருந்து நிறுவனங்களுக்கு இன்னும் பலமில்லை. இதற்கு அரசாங்கம் உதவ வேண்டும். இந்த உதவி கிடைத்தால், சித்த மருத்துவம் மூலம் பெரும் அந்நியச் செலாவணியை ஈட்ட முடியும். தற்போது இந்தியாவிற்குள்ளேயே விற்பனையை விரிவுபடுத்த முயன்று வருகிறோம். எதிர்காலத்தில் நிச்சயம் ஏற்றுமதியிலும் கவனம் செலுத்துவோம்."

``புதிதாகத் தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன?"
``மருத்துவராக இருந்தாலும், மருந்துக்கடை வைக்க விரும்புபவராக இருந்தாலும் முதலில் முறையான பயிற்சி எடுங்கள். உங்களின் தரத்தை உயர்த்திக் கொள்ளுங்கள். சித்த மருத்துவத்திற்குப் மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது. எங்கள் கிளைகளில் மருத்துவர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்களுக்குப் பயிற்சி அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். தன்னம்பிக்கை, நேர்மை மற்றும் சேவை மனப்பான்மையுடன் தொழில் தொடங்கினால் வெற்றி நிச்சயம்.
தமிழகம் முழுவதும் கிளைகளைப் பரப்புவதே எங்கள் நோக்கம். நாள்தோறும் ஒரு லட்சம் வாடிக்கையாளர்கள் ‘நல்வழி’யை நாட வேண்டும் என்பதே எங்களின் இலக்கு."
(சாகசங்கள் தொடரும்..!)
















