நீங்க ஆட்டோமொபைலை கண்டுபிடிச்சிங்க; நாங்க டிரைவிங்கை கண்டுபிடிச்சோம் - Benzக்கு ...
நீங்க ஆட்டோமொபைலை கண்டுபிடிச்சிங்க; நாங்க டிரைவிங்கை கண்டுபிடிச்சோம் - Benzக்கு வாழ்த்து சொன்ன BMW
1980 மற்றும் 90-களில் ஆட்டோமொபைல் உலகில் ரெண்டு பேருக்கு நடுவுலதான் போட்டியே ஒன்னு பென்ஸ், இன்னொன்னு பிஎம்டபிள்யூ’. இன்றுவரை இந்தப் போட்டி தொடர்கிறது.
80 & 90-களில் இருந்த ஆட்டோமொபைல் பிரியர்களுக்குத் தெரியும் பென்ஸ் AMG கார்களுக்கும், BMW M சீரிஸ் கார்களுக்கும் இடையில் நடந்த போட்டி. BMW M3 Vs Mercedes 190E 2.3-16, பென்ஸ் E55 AMG Vs BMW M5 போன்ற சில கார்களுக்கு இடையில் நடந்த போட்டிகள் அதற்குச் சான்று. ஆனால், இரண்டும் ஒன்றுக்கு ஒன்று சளைத்ததல்ல.

‘எதிரியாகவே இருந்தாலும் மதிக்க வேண்டும்’ எனும் பண்பு BMW-க்குத் தெரியும் போல. கடந்த ஜனவரி 29-ம் நாளோடு 140 ஆண்டுகளை பென்ஸ் நிறுவனம் நிறைவு செய்கிறது. அதற்கு வாழ்த்துக் கூறும் வகையில் பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது இன்ஸ்டா பக்கத்தில் நகைச்சுவை மற்றும் வியாபாரம் இரண்டையும் இணைத்து பென்ஸ் நிறுவனத்துக்கு ஒரு வாழ்த்து தெரிவித்துள்ளது.
1886-ம் ஆண்டு இதே நாளில்தான் கார்ல் பென்ஸ் தனது ‘மோட்டார்வாகன்’ வாகனத்துக்கான காப்புரிமையைப் பெற்றார். இன்றைய நவீன வாகனங்களுக்கான அடித்தளம் இந்த ‘மோட்டார்வாகன்’தான்.

பென்ஸைவிட பிஎம்டபிள்யூவுக்கு 30 வயது குறைவுதான். இரண்டு நிறுவனங்களுமே வெவ்வேறு நோக்கங்களில் தொடங்கப்பட்டு, பின்னர் ஒரே நேர்கோட்டில் இணைந்தவை.
பென்ஸ் புதுமை மற்றும் பொறியியலுக்கு முக்கியத்துவம் கொடுத்தது. ஆனால் பிஎம்டபிள்யூ அதன் இன்ஜின்களுக்கும், ரைடிங்குக்கும் முக்கியத்துவம் கொடுத்தது. இந்த இரண்டையும் குறிப்பிடும் வகையில் பிஎம்டபிள்யூவின் வாழ்த்து உள்ளது.

பிஎம்டபிள்யூ தனது இன்ஸ்டா பதிவில் முதல் படத்தில் கார்ல் பென்ஸின் புகைப்படத்தோடு “அதிர்ஷ்டவசமாக கார்ல் பென்ஸ் ஆட்டோமொபைலைக் கண்டுபிடித்துவிட்டார்.” எனும் வாசகமும், இரண்டாம் படத்தில் ”அதனால் நாங்கள் ஓட்டுநர் இன்பத்தைக் கண்டிபிடித்தோம்” எனும் வாசகமும் உள்ளது.

இதற்கு பென்ஸ் நிறுவனமும் நன்றி தெரிவித்து கமென்ட் செய்துள்ளது.
இன்றைய ஆட்டோமொபைல் உலகம் பென்ஸிடமிருந்துதான் தொடங்கியது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்த போஸ்ட்டுக்கு நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வரவேற்பு, கமென்டுகளையும், லைக்குகளையும் வாரி வழங்குகிறார்கள்.
நம்மூர் ஆட்டக்காரர்கள் இப்படி வாழ்த்தவில்லை என்றாலும் வசைபாடாமல் இருக்கிறார்கள். அதுவரை சந்தோஷம்!




















