தஞ்சாவூர்: 'நேருவின் உறவினர் டெண்டரை நடத்த விடாமல் தடுக்கிறாரா?' - பேருந்து நிலை...
புதுச்சேரி: நாட்டை உலுக்கிய போலி மருந்து வழக்கில் `ட்விஸ்ட்’ - லஞ்சம் கேட்ட ஐ.பி.எஸ் அதிகாரி கைது!
இந்தியாவின் பிரபல மருந்து நிறுவனங்களான `சன் ஃபார்மா' மற்றும் `டாக்டர் ரெட்டிஸ்' பெயரில், இந்தியா முழுவதும் போலி மருந்துகளை சப்ளை செய்துவந்த கும்பலை அண்மையில் கண்டறிந்தனர் சி.பி.சி.ஐ.டி போலீஸார்.
தொடர்ந்து போலி மருந்து தொழிற்சாலைகள், அவற்றின் குடோன்களுக்குச் சீல் வைத்ததோடு, முக்கிய குற்றவாளியான `மதுரை' ராஜா (எ) வள்ளியப்பன், ராஜா, ராணா, மெய்யப்பன், விவேக் உள்ளிட்ட 13 பேரை கைது செய்தனர் சி.பி.சி.ஐ.டி போலீஸார்.
அத்துடன் முக்கிய குற்றவாளியான ராஜா நடத்தி வந்த போலி மருந்து தொழிற்சாலைகள், குடோன்களில் சோதனை செய்து, பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள போலி மருந்துகள் மற்றும் இயந்திரங்களை பறிமுதல் செய்தனர். ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய இந்த வழக்கை விசாரிக்க எஸ்.பி நல்லாம்பாபு தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு (S.I.T) அமைக்கப்பட்டது.

அந்தக் குழு ராஜாவின் மனைவி ஞானப்பிரியா, அவர்களின் பங்குதாரரான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மணிகண்டன், விருப்ப ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி சத்தியமூர்த்தி உள்ளிட்ட 13 பேரை கைது செய்தது.
அதன்படி இந்த வழக்கில் 4 பெண்கள் உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதையடுத்து வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களும் வலியுறுத்தினர். அதனால் ஆளுநர் கைலாஷ்நாதனின் பரிந்துரையை ஏற்று வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றியது மத்திய உள்துறை அமைச்சகம்.
தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் புதுச்சேரிக்கு வந்து தங்களுடைய முதல்கட்ட விசாரணையை தொடங்கிய சி.பி.ஐ அதிகாரிகள், அதன்பிறகு அமைதியானார்கள். மேலும், சட்டமன்றத் தேர்தல் காரணமாக தற்காலிகமாக விசாரணையை தள்ளி வைத்திருப்பதாகவும் சி.பி.ஐ தரப்பில் கூறப்பட்டது.
இதற்கிடையில் முக்கிய குற்றவாளியான ராஜா உள்ளிட்ட 26 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர். சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த ராஜா, தன் மீதான சி.பி.ஐ நடவடிக்கையில் இருந்து எப்படியாவது `எஸ்கேப்' ஆகிவிட வேண்டும் என்று திட்டமிட்டார்.
அதன்படி சிவில் விமானப் போக்குவரத்தின் மண்டல இயக்குநரான ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவரை சந்தித்துப் பேசினார் ராஜா. அப்போது அந்த ஐ.பி.எஸ். அதிகாரி 5 கோடி கேட்க, பேரத்தில் இரண்டு கோடியாக இறுதியாகியிருக்கிறது. அதையடுத்து சென்னையைச் சேர்ந்த நாகூரான் என்பவரிடம் ஒரு கோடி ரூபாயைக் கொடுத்த ராஜா, அதை ஹவாலா முறையில் டெல்லியில் கொடுக்குமாறு கூறினார்.
அதன்பிறகு தன்னுடைய நண்பரான அபிஷேகப்பாக்கம் ராஜ்குமார் என்பவரிடம் மேலும் ஒரு கோடி ரூபாயைக் கொடுத்து டெல்லிக்கு அனுப்பினார் ராஜா. டெல்லி வந்த ராஜ்குமார் ஹவாலா முறையில் மாற்றப்பட்ட ஒரு கோடி ரூபாயை பெற்றுக் கொண்டார்.

அதன்பிறகு மொத்தம் இரண்டு கோடி ரூபாயை, டெல்லி கிரைம் இன்ஸ்பெக்டர் பிரதீப் சிங்கிடம் கொடுத்தார். அப்போது இருவரையும் கையும் களவுமாக வளைத்து கைது செய்தது சி.பி.ஐ. அதன் தொடர்ச்சியாக கடந்த ஜூன் மாதம் புதுச்சேரிக்கு வந்த சி.பி.ஐ அதிகாரிகள், முக்கிய குற்றவாளியான ராஜாவை மீண்டும் கைது செய்து டெல்லிக்கு அழைத்துச் சென்றனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், சிவில் விமானப் போக்குவரத்தின் மண்டல இயக்குநர் தீபக் கஹ்லாவத் என்பவரை அழைத்து விசாரணை செய்தனர் சி.பி.ஐ அதிகாரிகள். அதில் போலி மருந்து மோசடிக் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காக இரண்டு கோடி லஞ்சம் கேட்டதை ஒப்புக் கொண்டார் தீபக் கஹ்லாவத்.
அதனடிப்படையில் ஹரியானாவைச் சேர்ந்த அவரை நேற்று கைது செய்திருக்கின்றனர். போலி மருந்து வழக்கில் காவல்துறை அதிகாரிகள் அடுத்தடுத்து சிக்கி வருவதால் அச்சத்தில் உறைந்திருக்கின்றனர் மக்கள்.


















