புதுச்சேரி: நிருபரை அடிக்கப் பாய்ந்த சீமான்; சுற்றி வளைத்து தாக்கிய தொண்டர்கள்! ...
புதுச்சேரி: நிருபரை அடிக்கப் பாய்ந்த சீமான்; சுற்றி வளைத்து தாக்கிய தொண்டர்கள்! - என்ன நடந்தது ?
தமிழகம், புதுச்சேரியில் எதிர்வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் கலந்தாய்வுக் கூட்டம், வில்லியனூர் தனியார் திருமண நிலையத்தில் இன்று மதியம் நடைபெற்றது. அங்கு செய்தியாளர்களை சந்தித்த சீமான், அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர், கோவை, மதுரை மெட்ரோ திட்ட அறிக்கையை மத்திய அரசு ரத்து செய்ததை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சீமான், `அந்த திட்டமே சரியில்லாத திட்டம். சாலைகளை சீரமைத்தாலே பயனுள்ளதாக இருக்கும்’ என்றார்.

தொடர்ந்து, `அது வளர்ச்சித் திட்டம்தானே…’ என்று நிருபர் கேள்வி எழுப்பியதற்கு, `உனக்கு அந்த வளர்ச்சி வேண்டும் என்றால் நீ போய் போராடி வாங்கிக்க…’ என்று ஒருமையில் பேச ஆரம்பித்தார் சீமான். அதையடுத்து SIR குறித்து மற்றொரு நிருபர் எழுப்பிய கேள்விக்கு, `SIR-ஐ மம்தா எதிர்க்கிறார். ஆர்ப்பாட்டம் செய்கிறார்.
ஆனால் தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது ? SIR-ஐ செயல்படுத்தும் கட்சி எது ? அங்கன்வாடியில் வேலை செய்பவர்களையும், சத்துணவுக் கூடத்தில் வேலை செய்பவர்களையும் BLO-வாக நியமித்தது கணக்கெடுக்க அனுப்பியது யார்... தி.மு.க தானே…?’ என்றார் சீமான்.
அப்போது அந்த தனியார் தொலைக்காட்சி நிருபர், `தேர்தல் ஆணையம் சொல்வதைத்தானே அரசு செய்கிறது? அதேசமயம் தி.மு.க SIR-ஐ எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறதே?’ என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு, `அரசு சொல்வதை தேர்தல் ஆணையம் கேட்க வேண்டுமா ? தேர்தல் ஆணையம் சொல்வதை அரசு கேட்க வேண்டுமா ?’ என்று கேட்டுக் கொண்டே இருக்கையை விட்டு எழுந்த சீமான், அந்த செய்தியாளரை ஒருமையிலும், அருவருக்கத்தக்க தகாத வார்த்தையிலும் திட்ட ஆரம்பித்தார். தொடர்ந்து, `ஒரு மைக்கையும், கேமராவையும் எடுத்துட்டு வந்துட்டா நீ வெங்காயமா ?’ என்று கேட்டவாரே அந்த செய்தியாளரை அடிக்கப் பாய்கிறார்.

அதையடுத்து அங்கிருந்து வெளியேறிய அந்த நிருபரை சூழ்ந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள், அவரை சரமாரியாக தாக்கி கீழே தள்ளினார்கள். அத்துடன், `எங்கள் தலைவரிடம் இப்படியான கேள்விகளைக் கேட்டால் தீர்த்துக் கட்டிவிடுவோம்’ என்று கொலை மிரட்டல் விடுத்தனர்.
அதையடுத்து தாக்குதலுக்குள்ளான அந்த நிருபர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து, நிருபர் மீது தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்த நபர்களை கைது செய்ய வேண்டும் என்று, பத்திரிகையாளர் சங்கம் சார்பில் வில்லியனூர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டிருக்கிறது.














