புதுச்சேரி: நிருபரை அடிக்கப் பாய்ந்த சீமான்; சுற்றி வளைத்து தாக்கிய தொண்டர்கள்! ...
காரைக்குடி: போராட்டத்தால் பூட்டப்பட்ட மதுக்கடை - மீண்டும் திறக்கப்படலாமென மக்கள் அச்சம்!
கடந்த 14 ஆம் தேதி காரைக்குடியில் துணை முதல்வர் உதயநிதி கலந்துகொண்ட அரசு விழாவில் 'டாஸ்மாக் கடையால் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் துயரம் அடைகிறார்கள்' என்று பள்ளி மாணவி பேசியது பரபரப்பை ஏற்படுத்த, துணை முதல்வரோ அம்மாணவியை பாராட்டி பரிசளித்தார்.

இந்த நிலையில், கடந்த 17 ஆம் தேதி காரைக்குடி பர்மா காலனி பகுதியில் புதிதாக மதுக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டில் படிப்படியாக மதுக்கடைகளை குறைத்து வருவதாக அரசு கூறினாலும் இன்னொருபுறம் புதிதாக மதுக்கடைகளைத் திறந்து கொண்டிருக்கிறார்கள். மதுக்கடை அமைப்பதற்கான விதிகளும் பல இடங்களில் மீறப்படுகிறது.
கல்வியிலும், கலாசாரத்திலும் சிறந்து விளங்கும் காரைக்குடியில், சமீபகாலமாக குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதற்கு நகரில் அதிகரித்து வரும் மதுக்கடைகள்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் மக்கள் அடர்த்தியாக வாழும் பர்மா காலனிப் பகுதியில் கடந்த 17 ஆம் தேதி புதிய மதுக்கடை திறக்கப்பட்டதை பார்த்து பொதுமக்கள் பொங்கி எழுந்தனர். அவர்களுடன் திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் சேர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.

வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனை, கல்விக்கூடங்கள், குடியிருப்புகள் அதிகமுள்ள அப்பகுதியில் மதுக்கடையை திறக்கக் கூடாது என்று பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அங்கு வந்த அதிகாரிகள் கடையை மூட உத்தரவிட்டனர். ஆனால் அதை மதிக்காமல் அன்று மாலையே கடைக்காரர் மது விற்பனை செய்ய ஆரம்பித்தார். அது மட்டுமன்றி இலவசமாகவும் மது விநியோகம் செய்தார். இதனால் கோபமான மக்கள் மூன்று நாட்கள் தொடர் போராட்டம் நடத்தி, ரேசன் அட்டை, வாக்காளர் அட்டையை ஒப்படைப்போம் என்று அறிவித்தார்கள்.
இதைத் தொடர்ந்து சப் கலெக்டர், டி.எஸ்.பி ஆகியோர் வந்து நிலைமையை புரிந்துகொண்டு மதுக்கடைக்கு பூட்டு போட்டுவிட்டு சென்றனர். இதில் நம்பிக்கை இல்லாத மக்கள் தங்கள் பங்குக்கு ஒரு பூட்டை போட்டுள்ளனர். நிரந்தரமாக மதுக்கடையை அங்கிருந்து அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிடாததாலும், கடை உரிமையாளர் ஆளுங்கட்சி முக்கியப்புள்ளிகளுடன் செல்வாக்குள்ள நபர் என்பதாலும் எப்போதும் வேண்டுமானலும் மதுக்கடை திறக்கப்படலாம் என்பதால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் இருக்கிறார்கள்.


















