கன்னியாகுமரி: விசாரணைக்கு சென்ற போலீஸை நாயை ஏவி கடிக்கவைத்த தம்பதி - மோசடி புகார...
"பைத்தியம் மாதிரி டிராமா போட்டேன்; அடை மழையில் அம்மாவின் கண்ணீர்!" - பாரதிராஜா சினிமாவுக்கு வந்த கதை
இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று காலமானார். ஸ்டுடியோக்களில் அடைபட்டிருந்த சினிமாவை கிராமங்களுக்கு அழைத்துச் சென்ற பெருமை இவருக்கு உண்டு. நடிகராக வேண்டும் என்கிற கனவோடுதான் சொந்த ஊரிலிருந்து மெட்ராஸுக்குக் கிளம்பி வந்திருக்கிறார்.
ஆனால், இங்கு நடந்த விஷயங்கள் அவரை வேறு திசைக்குக் கூட்டிச் சென்றிருக்கின்றன.
சினிமா ஆசை பற்றியும், நடிகர் ஆசை எப்படி டைரக்ஷன் பக்கம் சென்றது என்பது பற்றியும் 2018-ல் விகடன் தடம் இதழுக்கு அளித்த பேட்டியில் அவர் பேசியிருக்கிறார்.

அந்தப் பேட்டியில் அவர், “சுகாதாரத் துறை வேலையை விட்டுட்டேன். சினிமா கனவு பிடிச்சு ஆட்டுது; உள்ளுணர்வு, ‘இதுதான் உன் நேரம்’னு சொல்லுது. மெட்ராஸ் கிளம்பியே ஆகணும்னு வீட்டுல அடம்பிடிக்கிறேன். ‘நல்ல வேலையை விட்டுட்டு இப்படி மெட்ராஸ் கெளம்பணும்ங்கிறானே, பொறுப்பில்லாம இருக்கிறானே’னு அப்பாவுக்கு என் மேல கோபம்.
என் நாடகங்களும் என் நடிப்பும் அப்பாவுக்குப் பிடிக்கும். ஆனா, ‘எல்லாத்துக்கும் ஒரு காலநேரம் இருக்கு, இப்பிடி அவசரப்படுறானே’னு கோபமா இருந்தார். அம்மா ரொம்ப நல்ல மனுஷி. என் மேல அவ்வளவு பாசம். என்னை சமாதானப்படுத்திக்கிட்டே இருக்கும்.
இதுக்கு மேல பொறுமையா இருக்கக் கூடாது. ஒரு நாடகத்தப் போட வேண்டியதுதான்னு முடிவு பண்ணேன். கொஞ்சம் கொஞ்சமா மனநலம் பாதிக்கப்பட்டுக்கிட்டே வர்ற மாதிரி வீட்ல நடிச்சேன்.
வீட்டுக்குள்ளிருந்து பவுடர் டப்பாவை, சீப்பைத் தூக்கித் தெருவுக்கு வீசுவேன். வீட்டுக்குள்ள கதவைப் பூட்டிக்கிட்டு ஏதாவது சினிமா வசனத்தைச் சத்தமாப் பேசுவேன்.
பையன் எங்க புத்திசுவாதீனம் இல்லாமப்போயிருவானோனு அம்மாவுக்கு பயம். ‘என்னய்யா வேணும்’னுச்சு, ‘மெட்ராஸுக்குப் போகணும்’னேன். 300 ரூபா கடன் வாங்கித் தந்துச்சு. ஒரு டிரங்குப் பெட்டி, அதுல நாலு சட்டை, நாலு பேன்ட், நாலு சிஸர் சிகரெட் பாக்கெட். ஒரு லாரி புரோக்கர்கிட்ட பேசி, ஏத்திவிட்டாங்க. சினிமா காட்சிகள்ல வர்ற மாதிரி ச்சோனு மழை கொட்டுது; அம்மாவும் சித்தியும் கண்ணீரும் கேவலுமா கை காட்டுறாங்க.
அப்பழுக்கில்லாத ரெண்டு மனுஷிங்க... அவங்க கண்ணீர்தான் என்னை வழிநடத்துச்சு. வலுத்து மழை பெய்யும்போதெல்லாம் அந்த ரெண்டு மனுஷிகளோட நம்பிக்கையும் கையசைப்பும் நினைவில் வந்துபோகும், இப்பவும். தொடக்கத்துல நடிகனாகத்தான் முயற்சி பண்ணேன்.
ஒரு சீனுக்கு ரெண்டு சீனுக்குக் கூப்பிடுவாங்க. ‘டாக்டரா வர்றியா’னு கூப்பிடுவாங்க. ‘என்னடா இது ஹீரோவாகணும்னு வந்தா, சூழல் இந்த மாதிரி இருக்கே’னு ஒரே குழப்பம். ஒரு பெட்ரோல் பங்க்ல வேலை செஞ்சுக்கிட்டே வாய்ப்பு தேடிட்டிருந்தேன். அப்போ, பெட்ரோல் போட வரும் காருக்குள்ள ஜெமினி கணேசன், சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ஆர், விஜயகுமாரினு, ஃபுல் மேக்அப்ல மெழுகு பொம்மையாட்டம் உட்காந்திருப்பாங்க.
ஒரு கட்டத்துக்கு மேல, சினிமா இந்த முகத்தை ஹீரோவா ஒத்துக்கிறது கஷ்டம்னு தெரிஞ்சது. சரி, எப்படியாவது சினிமாவுக்குள்ள போகணும்னு உதவி இயக்குநரா நுழைஞ்சேன். அது ஒருவிதமான நிர்பந்தம். இப்போ நினைச்சுப் பார்க்கும்போது, ஆச்சர்யமா இருக்கு.
Really I am proud to be a director!”
எனத் தெரிவித்திருக்கிறார்.















