செய்திகள் :

"வாய்க்கு வந்ததை எல்லாம் வாக்குறுதிகளாக அள்ளி வீசிவிட்டு, இப்போது..!"- பட்ஜெட் குறித்து சீமான்

post image

"மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் ஆக்கப்பூர்வத் திட்டங்களோ, மாநிலத்தின் நிதிச்சுமையைக் குறைக்கும் மாற்றுப்பொருளாதாரப் பெருக்கத்திற்கான நடவடிக்கைகளோ எதுவுமற்று, வெற்றி எனும் பெயரை மட்டுமே கொண்டுள்ள வெற்று அறிக்கைதான் தவெக அரசின் நிதிநிலை அறிக்கை" என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கிறார்.

பட்ஜெட் தொடர்பாக சீமான் வெளியிட்டிருக்கும் பதிவில், "தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2026-27ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை பெரும் ஏமாற்றமளிக்கிறது. மாநிலத்தின் வருவாய் பெருக்கத்திற்கோ, புதிய திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கோ, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கோ, மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கோ என எந்த ஆக்கப்பூர்வ நோக்கங்களும், திட்டங்களும் இல்லாத வெற்று அறிக்கையாக நிதிநிலை அறிக்கையை தயாரித்திருப்பது தவெக அரசின் நிதி நிர்வாக மேலாண்மையின்மையையே காட்டுகிறது.

தமிழக பட்ஜெட்
தமிழக பட்ஜெட்

தேர்தல் சமயத்தில் வாய்க்கு வந்ததை எல்லாம் வாக்குறுதிகளாக அள்ளி வீசிவிட்டு, இப்போது அவற்றைத் திட்டமும், நோக்கமுமின்றி தறிகெட்டு நிற்பது வெட்கக்கேடானது.

முந்தைய 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டதைவிட 2,240 கோடி ரூபாய் குறைவான நிதியை ஒதுக்கியிருக்கிறது தவெக அரசு. இத்தோடு, உயர் கல்வித்துறைக்கு 100 கோடி ரூபாய் குறைவாகவும் ஒதுக்கீடு செய்திருக்கிறது. தொழில்வளர்ச்சி துறைக்கு 1,419 கோடி ரூபாயும், கைத்தறி துறைக்கு 302 கோடி ரூபாயும், நீர்வளத்துறைக்கு 196 கோடி ரூபாயும் குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, மின்துறைக்கான நிதியையும்கூட 5,350 கோடி ரூபாய் அளவுக்குக்குக் குறைத்துள்ளது. இவ்வாறாக, கல்வி, மின்துறை, தொழில் வளர்ச்சி, கைத்தறி, நீர்வளத்துறை உள்ளிட்ட அதிமுக்கிய துறைகளுக்கான நிதியைக் குறைத்திருப்பது பெரும் நிர்வாக வீழ்ச்சியை நோக்கி தமிழ்நாட்டைக் கொண்டு செல்லுமென்பது தெளிவாகிறது. தொழிலாளர் நலத்துறைக்கு கூடுதலாக 30 கோடி ரூபாயும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு கூடுதலாக 50 கோடி ரூபாயும், சமூகநீதித்துறைக்கு கூடுதலாக 13 கோடி ரூபாயும் எனக் குறைவான அளவாக நிதியைக் கூட்டி ஒதுக்கீடு செய்திருப்பது போதுமானதல்ல!

தவெக தனது தேர்தல் அறிக்கையில் வழங்கிய வாக்குறுதிகளான 2,500 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை, ஆண்டுக்கு 6 எரிகாற்று உருளைக்கான பணத்தை வங்கிக்கணக்கில் செலுத்துதல், வேலை இல்லாத இளைஞர்களுக்கு 4,000 ரூபாய் நிதியளிப்பு, பெண்களுக்கான இலவசப் போக்குவரத்துப்பயணம் உள்ளிட்டவைக் குறித்து எந்தவொரு அறிவிப்பையும் இந்நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடாததன் மூலம் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்களை முற்றாக ஏமாற்றியிருக்கிறது தவெக அரசு. மீன்பிடி தடைக்காலத்தில் 20,000 உதவித்தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்த தவெக, தற்போது 7,000 ரூபாய் மட்டுமே வழங்கப்படும் எனக் கூறியிருப்பது ஏமாற்று வேலையாகும்.

சமூகநீதியை உணர்வுப்பூர்வமாக ஏற்றிருக்கிறோம் எனக் கூறிவிட்டு, மாநில அரசின் சார்பில் சாதிவாரிக்கணக்கெடுப்பு எடுப்பது குறித்து எந்தவொரு அறிவிப்பையும் அளிக்காதது மோசடித்தனமாகும். பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாது ஏமாற்றிய நிலையில், குறுவை சாகுபடி பொய்த்துப் போனதால் பாதிக்கப்பட்ட காவிரிப்படுகை விவசாயிகள் ஏக்கருக்கு 25,000 ரூபாய் இழப்பீடு கேட்டு நிற்கும் நிலையில், அதனைப் பற்றிப் பேசாது கடந்துபோவது உழவர் பெருங்குடி மக்களுக்குச் செய்யும் துரோகமாகும்.

பதிவுத்துறையில் தவெக அரசு செய்த சீர்திருத்தங்கள் மூலம் ஆண்டுக்குக் கூடுதலாக 15,000 கோடி வருவாய் கிடைக்கும் என அரசுத்தரப்பில் கூறப்படுவது உண்மையென்றால், அதிமுக்கிய துறைகளுக்கு நிதியைக் குறைத்தது ஏன்? எனும் கேள்வி எழுகிறது. பிறந்த குழந்தைக்குத் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அரசு கூறுவது அவமானகரமானது. மருத்துவமனையின் தரத்தை உயர்த்தி, மக்களை அரசு மருத்துவமனைகளின் பக்கம் திருப்பாது, தங்க மோதிரம் மூலம் நாடச் செய்வதாகக் கூறுவது அவல நிலையின் உச்சம்.

சீமான்
சீமான்

மூன்று மாதத்தைக்கூட நிறைவுசெய்யாத் தவெகவின் ஆட்சியில் ஏறக்குறைய 25,000 கோடி ரூபாய்வரை கடனை வாங்கி வைத்திருப்பதுதான் இவ்வாட்சியின் நிதிநிர்வாக மேலாண்மையின் இலட்சணமாகும். தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2031ஆம் ஆண்டிற்குள் 1.5 ட்ரில்லியன் டாலராக உயர்த்துவோம் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ள தவெக அரசு, அந்த இலக்கை எப்படி அடைவோம்? என்பது குறித்து எவ்வித தெளிவான வழிமுறையையும் குறிப்பிடவில்லை. நிதியமைச்சர் மரிய வில்சன் நிதிநிலை அறிக்கையைத் தங்கு தடையின்றி வாசிக்கத்தான் தடுமாறுகிறாரென்று பார்த்தால், நிதிநிலை அறிக்கையின் உள்ளடக்கம் அதனைவிடத் தடுமாற்றமாக இருக்கிறது.

மொத்தத்தில், தமிழ்நாட்டை முன்னேற்றிக் கொண்டு செல்வதற்கான ஆக்கப்பூர்வமானத் திட்டங்கள் ஏதும் இல்லாது, அரசின் வருவாயை அதிகரிப்பதற்கோ, மாற்றுப்பொருளாதாரப் பெருக்கத்திற்கோ, நிதிப்பற்றாக்குறையைக் குறைப்பதற்கோ, கடன் சுமையைக் குறைப்பதற்கோ பொருளாதாரச் சீர்திருத்தத் திட்டங்கள், நடவடிக்கைகள் ஏதும் இல்லாது, பெயரில் மட்டுமே வெற்றியைக் கொண்டுள்ள வெற்று நிதிநிலை அறிக்கைதான் தவெக அரசின் நிதிநிலை அறிக்கையாகும்" என்று விமர்சித்திருக்கிறார்.

`எஸ்.பி.வேலுமணியை அதிமுக பொதுச்செயலாளராக்கு சாமி' - குண்டம் இறங்கி வேண்டிய கோவை நிர்வாகி!

அ.தி.மு.க-விற்குள் உட்கட்சிப் பூசல் அதிகரித்து வரும் நிலையில், எஸ்.பி. வேலுமணியை அக்கட்சியின் பொதுச்செயலாளராக வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அ.தி.மு.க. கோவை குறிச... மேலும் பார்க்க

TN Budget: "5 ஆண்டுகள் முடியும்போது ஒட்டுமொத்த கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்"- தங்கம் தென்னரசு

தவெக அரசு 2026 - 2027 ஆம் ஆண்டிற்கான தனது முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்திருந்தது. இந்த நிலையில், முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது அவர்,... மேலும் பார்க்க

இரண்டு மசோதாக்கள் அமல்படுத்த பாஜகவின் பிளான்; ராகுலை சந்தித்த கிரண் ரிஜிஜு - ராகுல் சொன்ன 'நோ'!

தற்போது டெல்லியில் மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதை யாராவது சொன்னால் தான் தெரியும் போல. தினமும் கூட்டத்தொடர் தொடங்குகிறது. அமளி ஏற்படத் தொடங்கிய வேகத்திலேயே சபை ஒத்தி வைக்கப்பட்... மேலும் பார்க்க

TN Budget: `வருந்தத்தக்கது; மக்களின் எதிர்பார்ப்புகளைக் கருத்தில் கொள்ளவில்லை' - சிபிஐ வீரபாண்டியன்

‘தவெக அரசின் நிதிநிலை அறிக்கை சில பிரிவுகளில் முன்னேற்றம் காண வழிவகுக்கும். எனினும் பெரும் பகுதி, மக்களின் எதிர்பார்ப்புகளை கருத்தில் கொள்ளவில்லை’ என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு... மேலும் பார்க்க

TN Budget 2026: `பள்ளிக்கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கீடு குறைப்பா?' - இல்லை என விளக்கும் ராஜ்மோகன்!

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக அரசு 2026 - 2027 ஆம் ஆண்டிற்கான தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது. இதில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.44, 527 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. பலரும் ... மேலும் பார்க்க

ஆட்சி மாறியும் அரசின் கடன் தொடர்கிறது? - தவெக அரசின் ரூ.1.73 லட்சம் கோடி கடன் திட்டம்!

2026-2027ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாடு அரசு புதிய கடனாக ரூ.1 லட்சத்து 73 ஆயிரத்து 445 கோடி பெறத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அதே நேரத்தில், ரூ.51 ஆயிரத்து 971 கோடி மதிப்பிலான பழ... மேலும் பார்க்க