``இந்தியாக் கூட்டணியின் கூட்டத்திற்கு திமுக வராததற்குக் காரணம் இதுதான்" - திருமா...
"வீட்டுக்கு வாங்க" - ஹோம்டூர் போட்ட யூடியூபர்; "வந்துட்டோம்ல" - 10 லட்சத்தை அள்ளிய திருடர்கள்!
யூடியூப்பைத் திறந்தாலே, "ஹலோ ஃப்ரெண்ட்ஸ்... இதான் எங்க வாசல், இதான் எங்க கிச்சன், இதுதான் நாங்க கிலோ கணக்கில் தங்கம் ஒளிச்சு வெச்சிருக்கற சீக்ரெட் பீரோ!" என்று ஊருக்கே தங்கள் வீட்டின் வரைபடத்தை இலவசமாகக் கொடுப்பது ஒரு ட்ரெண்டாகி விட்டது.
நாமும் அதை வாயைப் பிளந்து பார்ப்போம். ஆனால், நாம் மட்டுமா பார்க்கிறோம்? "எந்த ஜன்னல் வழியா உள்ளே போலாம்? சிசிடிவி எங்க இருக்கு?" என்று திருடர்களும் ரொம்ப சின்சியராக நோட்ஸ் எடுத்துக் கொண்டுதான் இந்த வீடியோக்களைப் பார்க்கிறார்கள் என்பதை நிரூபித்துள்ளது இந்த உண்மைச் சம்பவம்.

நடந்தது என்ன?
இடம்: மத்தியப் பிரதேசம், சிவபுரி மாவட்டம், மோஹனி கிராமம்.
பாதிக்கப்பட்டவர்: ரச்சனா குர்ஜார் என்ற யூடியூபர். இவருக்கு யூடியூபில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர்.
சமீபத்தில் ரச்சனா, வழக்கம் போல மற்ற யூடியூபர்களைப் பின்பற்றி தனது வீட்டை ஒரு ஹோம் டூர் வீடியோவாக எடுத்துப் பதிவிட்டுள்ளார். அதில் வீட்டின் முற்றம் தொடங்கி ஒவ்வொரு அறையாகச் சுற்றிக் காட்டியுள்ளார். அதுமட்டுமல்லாமல், தன்னிடம் உள்ள தங்கம், வெள்ளி நகைகள், கட்டுக்கட்டான ரொக்கப் பணம் ஆகியவற்றை ஒரு மேசையின் மீது பரப்பி வைத்து பெருமையாக வீடியோ எடுத்து உலகத்துக்கே காட்டியுள்ளார்.
திருடர்களின் ஆக்ஷன் பிளான்
இந்த வீடியோவை ஒரு திருட்டுக் கும்பல் டுடோரியல் வீடியோ போல பார்த்துப் படித்திருக்கிறது. வீட்டின் அமைப்பு, நகைகள் இருக்கும் இடம் என அனைத்தையும் வீடியோவிலேயே தெரிந்து கொண்ட அந்தத் திருடர்கள், கடந்த சனிக்கிழமை அதிகாலை சுமார் 2 மணியளவில் ரச்சனாவின் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.
உள்ளே வந்ததும் திருடர்கள் செய்த முதல் வேலை, வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஒரு நீண்ட குச்சியைக் கொண்டு வேறுபக்கம் திருப்பி விட்டனர். பின்னர், ரச்சனாவும் அவரது குடும்பத்தினரும் தூங்கிக் கொண்டிருந்த அறையின் கதவை வெளிப்புறமாகப் பூட்டினர்.

வீட்டில் இருந்த தங்கம், வெள்ளி நகைகள், ரொக்கப் பணம் எனச் சுமார் 8 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை மொத்தமாக அள்ளி மூட்டை கட்டியுள்ளனர். இதெல்லாம் சரி... ஹோம் டூர் வீடியோ பார்த்த அசதியோ அல்லது திருடிய களைப்போ என்னவோ தெரியவில்லை, அங்கிருந்த ஒரு அட்டைப்பெட்டி நிறைய இருந்த எனர்ஜி டிரிங்க்ஸ் பாட்டில்களையும் மிச்சம் வைக்காமல் தூக்கிச் சென்றுள்ளனர்!
அதிகாலை 4 மணிக்கு முழித்துப் பார்த்த ரச்சனா குடும்பத்தினர், தாங்கள் அறைக்குள் வைத்துப் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உறவினர்களுக்கு போன் செய்து, அவர்கள் வந்து கதவைத் திறந்த பின்புதான் நடந்த விபரீதம் முழுமையாகத் தெரிந்தது. தற்போது நார்வர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, போலீஸார் திருடர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
லைக்ஸ் முக்கியமா? லாக்கர் முக்கியமா?
"எங்க வீட்டுல அவ்ளோ தங்கம் இருக்கு, இவ்ளோ பணம் இருக்கு" என்று சோஷியல் மீடியாவில் பீற்றிக் கொள்வது, நாமே நம் வீட்டு முகவரியை திருடர்களுக்கு கூகுள் மேப்பில் லொகேஷன் ஷேர் செய்வதற்குச் சமம்.
வீடு என்பது நமது தனிப்பட்ட இடம். அதை உலகத்துக்கே வெளிச்சம் போட்டுக் காட்டுவது பாதுகாப்பானது அல்ல. டிஜிட்டல் உலகில் நாம் பகிரும் ஒரு சிறு தகவல் கூட, நமக்கு எதிராக எப்படி வேண்டுமானாலும் திரும்பலாம் என்பதற்கு இந்த ஹோம் டூர் வீடியோவே ஒரு சிறந்த உதாரணம்.
அது மட்டுமல்ல, திருடப்பட்ட பிறகு நடந்த போலீஸ் விசாரணை, சொந்தம், அக்கம் பக்கத்தினரின் துக்க விசாரிப்புகளையும் ரீல்ஸாக எடுத்து, சுடச்சுட தன் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றிவருகிறார் ரச்சனா.

எனவே, யூடியூபர்களே... ஹோம் டூர் போடுங்க, தப்பில்லை. ஆனால், அதற்காக "பீரோ சாவி இங்கதான் இருக்கு" என்று திருடர்களுக்கு ப்ளூபிரின்ட் போட்டு இன்விடேஷன் அனுப்பாதீர்கள்!














