பனிமலையின் பகுதி உடைந்து விழுந்த நொடிகள்... நேபாளப் பேரழிவின் தொடக்கத்தை பதிவு ச...
வெற்றி பெற்றது 'நான்' தான்!
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
"நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும், இப்படை தோற்கின் எப்படி வெல்லும்.." -உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் (இடம்பெற்ற 'TITLE SONG' ) - பெயர் போடும் போது பின்னணியில் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் கணீரென்ற குரலில் ஒலிக்கும் பாடல் இது . அதை கேட்டவுடன் படத்தை பற்றிய நமது எதிர்பார்ப்பு அதிகமாகும். பல தடைகளைத் தாண்டி வெளிவந்து அபார வெற்றியை பெற்ற படம். வெற்றி பெற்றது 'நான்'.. அந்த 'நான்' புரட்சித்தலைவர் எம்,ஜி.ஆர். அவர்கள். படத்தின் இயக்குனரும் அவரே. அரசியலில் தனிக்கட்சி ஆரம்பித்து வெற்றி பெற்றது 'நான்' தான் என்பதற்கு முன்னுரை எழுதினார்.
ஒவ்வொரு வெற்றியிலும் சில 'நான்' பல 'நாம்' இருக்கும். பிரதானமாக இருப்பது எது என்று அலசி ஆராய முற்பட்டதே இந்த கட்டுரையின் நோக்கம். கட்டுரைக்கான தலைப்பை தேடி அலைய வேண்டிய அவசியம் இருக்காது. அன்றாட நிகழ்வுகள் கட்டுரைக்கான தலைப்புகளை தந்து கொண்டே இருக்கும். அப்படி கிடைத்ததுதான் இந்த தலைப்பு.

'ஒருதலை ராகம்' 80 களில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம். ஒரு சிலரைத் தவிர முற்றிலும் புதுமுகங்கள் நடித்த படம். முதன் முதலில் பின்னணி பாடகி ஒருவர் பாடாத...அனைத்து பாடல்களும் பின்னணிப் பாடகர்களின் குரலில் ஒலித்த படம். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் என்று முக்கிய பொறுப்புகள் அனைத்தையும் டி.ஆர். அவர்கள் ஏற்றார். அந்த படத்தின் வெற்றிக்கு காரணமான 'நான்' அவருக்கு கிடைக்கவில்லை. மேலும் உரிய அங்கீகாரமும் கொடுக்கப்படவில்லை.
மனம் தளராத டி.ஆர். அவர்கள் 'ரயில் பயணங்களில், நெஞ்சில் ஓர் ராகம், உயிருள்ளவரை உஷா' என்று தொடர் வெற்றிகளை குவித்து கதை,திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, இயக்கம் என்று 7 துறைகளில் சாதனை புரிந்து வெற்றி பெற்றது 'நான்' தான் என்பதை நிரூபித்தார். அவரைத் தவிர அந்த படத்தில் பணிபுரிந்தவர்கள் யாரும் பெரியளவில் வெற்றி பெறவில்லை.
"தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே
தாரணியில் தமிழ் போல நிலை நின்று வாழ்கவே"
நம் கண் முன்னே உயர்ந்து நிற்கும் தஞ்சை பெரிய கோவிலை பற்றிய பாடல். 'உலக பாரம்பரிய சின்னம்' என்று யுனெஸ்கோ வால் அங்கீகாரம் பெற்ற கோயில். இதை கட்டியவர் முதலாம் ராஜராஜ சோழன். இவரது ஆட்சி காலம் சோழர்களின் பொற்காலம் என்று சொல்லலாம். கிபி 10 ஆம் நூற்றாண்டில் நடந்த 'காந்தளூர் சாலை போர்' வெற்றி இவருக்கு பெரும் புகழை தந்தது. இவரது மெய்கீர்த்திகளில் முதன்மையான இடத்தைப் பெற்றது. ஆண்டுதோறும் ஐப்பசி சதயத் திருநாளன்று இவரது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. சரித்திரத்தில் 'நான்' என்ற வார்த்தைக்கு நூறு சதவீதம் பொருத்தமானவர்.
கரிகால் சோழன் முற்கால சோழர்களில் மிகச்சிறந்தவர். உறையூரை தலைநகராக கொண்டு சோழ நாட்டை ஆட்சி செய்தார். பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றாகிய பொருநராற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் இவன்தான். அந்நூல் ஆசிரியரான முடத்தாம கண்ணியார் இவர் ஆட்சியின் சிறப்புகளை எடுத்துரைக்கிறார். காவிரி ஆற்றின் இரு பக்கங்களிலும் உறுதியான கரைகளை கட்டி நீரை ஒழுங்குப்படுத்தினார்.
பல கால்வாய்கள் வெட்டி நீர்ப்பாசன வசதியை மேம்படுத்தினர். தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றினார். இன்று டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரங்களில் முக்கிய பங்கு வகிக்கும் கல்லணை இவர் கட்டியதுதான்.விவசாயிகளின் வெற்றிக்கு காரணம் இந்த 'நான்' என்கிற கரிகால் சோழன் தான்.
'அஞ்சு கோடி பேர் அஞ்சு கோடி தடவ அஞ்சு பைசாவ திருடுனா...' இந்த புகழ்பெற்ற டயலாக் 'அந்நியன்' படத்தில் இடம்பெற்றது. எழுதியவர் எழுத்தாளர் சுஜாதா அவர்கள். நைலான் கயிறு, கனவு தொழிற்சாலை, பிரிவோம் சந்திப்போம், ப்ரியா, காயத்ரி உள்ளிட்ட ஏராளமான நாவல்களை எழுதியுள்ளார். அவரின் 'சுஜாதாட்ஸ், கற்றதும் பெற்றதும்' விகடனில் வெளிவந்த புகழ்பெற்ற தொடர்கள்.
திரைத்துறையில் இவரின் பங்கு அளப்பரியது. 'பம்பாய், ரோஜா, இந்தியன், அந்நியன், சிவாஜி.. இயக்குனர்கள் மணிரத்னம், ஷங்கர் ஆகியோருடன் இணைந்து பணியாற்றி அந்த படங்கள் இன்றுவரை கொண்டாடும் வகையில் வசனங்களை எழுதியிருப்பார். பெங்களூரில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் (BEL) நிறுவனத்தில் Electronics Engineer ஆக பணிபுரிந்த போது வாக்குப்பதிவு இயந்திர (EVM) வடிவமைப்பில் முக்கிய பங்காற்றினார். அரசியல், திரைப்படம், பத்திரிகைத் துறை அனைத்திலும் சாதனை படைத்தார். இவை அனைத்திலும் 'நான்' என்ற சுஜாதா அவர்கள் மிக மிக உயர்ந்து நிற்கிறார்.

1983 ஆம் ஆண்டில் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை மறக்க முடியுமா. அந்த ஆண்டில் தான் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது... அதுவும் வெல்ல முடியாத அணியாக இருந்த, கிளைவ் லாய்ட், விவியன் ரிச்சர்ட்ஸ் போன்ற பல ஜாம்பவான்கள் நிறைந்த மேற்கிந்திய தீவுகள் அணியை வென்று கோப்பையைக் கைப்பற்றியது. அதற்கு காரணம் கபில்தேவ் அவர்களின் திறமையான வழிநடத்தல்.
ஜிம்பாப்வே நாட்டுக்கு எதிராக நடந்த போட்டியில் மிக மிக மோசமாக நிலையை நோக்கி போய்க்கொண்டு இருந்த அணியை தனி ஒருவராக அதிரடியாக ஆடி 175 (அவுட் ஆகாமல்) ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். அந்த ஆட்டம் தான் கோப்பை இந்தியாவுக்கு கிடைக்க காரணமானது. கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த 'நான்' இதுதான். தனி ஒரு மனிதனாக நின்று சாதித்தார்.
'நான்' என்றால் அது அவளும் நானும்
அவள் என்றால் அது நானும் அவளும்'
-சூரியகாந்தி படத்தில் கவியரசர் இப்படி பாடியுள்ளார். கணவன் மனைவி என்ற இருவர் ஒன்றாக இணைந்தால் அங்கு 'நான்' என்பது மட்டுமே இருக்கும் என்கிறார். 'நாம்' என்பது 'நான்' என்ற வார்த்தைக்குள் இணைந்து விடுகிறது. காதல், அன்பு, பாசம், நேசம் நிறைந்த இல்வாழ்க்கை வெற்றி அடைகிறது. வெற்றி பெற்றது 'நான்' தான்.
ஒன்றுக்குள் இன்னொன்று இணைந்து கிடைக்கும் வெற்றி 'நான்' என்ற வார்த்தைக்குள் அடங்கிவிடும். தோப்பு என்ற ஒரு வார்த்தைக்குள் எத்தனையோ மரங்கள் அடங்கி இருக்கும். அவைகள் பலவிதமான பலன்களை மனிதனுக்கு தருகின்றன.
'நான்' என்பது வெறும் 'நான்' ஆக ஒருமையாக இருந்தால் அங்கு அகம்பாவம் இருக்கும். அந்த 'நான்' பன்மையாக இருந்தால்...அதற்குள் நிறைய நல்ல உள்ளங்கள் இணைந்திருந்தால்.. வெற்றி தேடி வரும்.
" 'நான்' ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்.."
-என்ற வாலியின் வரிகள்நிஜமானது அனைவருக்கும் தெரிந்ததே.
வெற்றி பெற்றவன் 'நான்' தான்.. காலம் சொன்னது. இதை உறுதி செய்ய எந்த நீதிமன்றத்தையும் நாடிச் செல்ல வேண்டியதில்லை.
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!
Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ



















