நாளை டெல்லியில் இந்தியா கூட்டணி கூட்டம்; திமுக பங்கேற்கவில்லை: 'ஒற்றுமையாக இருக்...
''அப்படி செய்திருந்தால் 'அபூர்வ சகோதரர்கள்' தோல்வி படமாகியிருக்கும்!" - நினைவுகள் பகிரும் கமல்ஹாசன்
94-வது வயதில் இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ் 'சிங் கீதம்' என்ற தெலுங்குப் படத்தை எடுத்து முடித்திருக்கிறார்.
இத்திரைப்படம் வருகிற ஜூன் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு இன்று சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கமல்ஹாசன், சிங்கீதம் ஸ்ரீனிவாசாவுடனான நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறார்.

இந்த நிகழ்வில் கமல்ஹாசன், "நான் திட்டமிட்டோ அல்லது தற்செயலாகவோ சிங்கீதம் ஸ்ரீனிவாசராவுடன் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன். எங்கள் இருவருக்குமான முதல் சந்திப்பு மும்பையில் நிகழ்ந்தது.
அப்போது அவர் என்னிடம் இரண்டு கதைகளைக் கூறினார். அதில் ஒன்று 'அத்வைதா' , அதை நாங்கள் படமாக எடுத்தோம். ஆனால், மற்றொரு கதையைப் பற்றி நாங்கள் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தோமே தவிர, எங்களால் அதைத் திரைப்படமாக்க முடியவில்லை.
அதுதான் இந்த 'சிங்கீதம்' திரைப்படம். கிட்டத்தட்ட 45 வருடங்களுக்கு முன்பு, எனக்கு 20 வயது இருக்கும்போது பேசிய கதை அது. இப்போது எனக்கு 71 வயதாகிறது. இப்போதுதான் அந்தப் படம் உருவாவதை நான் பார்க்கிறேன்.
சில யோசனைகளுக்கு என்றும் அழிவில்லை. வயது ஒரு தடையே இல்லை என்பதற்கு சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ் மிகச்சிறந்த உதாரணம்.
அவர் எப்போதும் புதிய ஐடியாக்கள் நிறைந்த ஒரு இளைஞர். இத்தனை வருடங்களாகக் கோடம்பாக்கத்திலும், தமிழ்நாட்டிலும் அவருடைய பெயரை எப்படி உச்சரிப்பது என்பதில் ஒரு பெரிய குழப்பமே இருந்தது.
பலரும் அவரை 'மிஸ்டர் சங்கீதம்' என்று தவறாக அழைத்தபோது அவர் மிகுந்த வருத்தமடைந்தார். ஆனால் 40 வருடங்களுக்குப் பிறகு, இன்று அந்தப் பெயர் குழப்பம் தீர்க்கப்பட்டுள்ளது.
இனி யாரும் அவரை 'சங்கீதம்' என்று தவறாக அழைக்க மாட்டார்கள். அவர் மீண்டும் தனது அசல் பெயரான 'சிங்கீதம்' என்றே அழைக்கப்படுவார். ஆனால் என்னைப்பொறுத்தவரை, அந்தப் பெயரே ஒரு இசைதான். நாங்கள் கேரளாவில் அமர்ந்து பேசும்போதுதான் 'அத்வைதா' என்ற கதை 'புஷ்பக விமானம்' (Pushpaka) திரைப்படமாக மாறியது.

பொதுவாக நாங்கள் வெயில் கொளுத்தும் ஸ்டுடியோக்களில் வியர்த்து விறுவிறுக்க வேலை பார்த்துப் பழகியவர்கள். ஆனால், 'புஷ்பக விமானம்' திரைப்படத்தை ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் முழுமையாக ஏசி வசதியிலேயே எடுத்தோம்.
'படம் முழுக்க வசனமே இல்லை' என்று மற்றவர்கள் எங்களைப் பாராட்டினார்கள். ஆனால் எங்களுக்கோ படம் முழுக்க ஏசியில் வேலை செய்ததே மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருந்தது. அந்த நாட்களை நான் இப்போதும் மிஸ் செய்கிறேன்.
சினிமா என்பது முழுக்க முழுக்க பேஷன் (Passion) சார்ந்தது. அதற்குப் பிறகுதான் அது ஒரு வியாபாரமாக மாறுகிறது. ஆனால் இன்று நிலைமை தலைகீழாக உள்ளது. படம் எடுப்பதற்கு முன்பே அது 100 கோடி, 200 கோடி வசூல் செய்யுமா என்று கணக்கு பார்க்கிறார்கள்.
நாங்கள் 15 லட்சத்தில் எடுத்த 'புஷ்பக விமானம்' படம், எங்களுக்கு 150 கோடி ரூபாய் படம் எடுத்த திருப்தியைக் கொடுத்தது. ஒரு படம் நிச்சயம் வெற்றி பெறும் என்றோ, அல்லது நிச்சயம் தோல்வி அடையும் என்றோ யாராலும் எழுதித் தர முடியாது. ஆனால், 'இந்தப் படத்தின் முடிவில் நாங்கள் மகிழ்ச்சியாக இருப்போம்' என்று எங்களால் சொல்ல முடியும்.
அப்படி மகிழ்ச்சி இல்லை என்றால், நாங்கள் அந்தப் படத்தை ரிலீஸ் செய்ய மாட்டோம். அதுதான் 'அபூர்வ சகோதரர்கள்' திரைப்படத்திலும் நடந்தது. படத்தின் முதல் 20 நாட்கள் எடுத்த காட்சிகளை நாங்கள் அப்படியே கைவிட்டுவிட்டோம்.

அப்படியே தொடர்ந்திருந்தால் அது ஒரு தோல்விப் படமாக அமைந்திருக்கும். ஆனால், அந்தத் தோல்வியிலிருந்து அந்தப் படத்தை நாங்கள் தடுத்து நிறுத்தினோம். அதற்காகச் செலவழிக்கப்பட்ட பணத்திற்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டியிருந்தது, இருந்தாலும் தவறான ஒன்றைச் செய்வதை விட, சரியான ஒன்றைச் செய்ய வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம்.
அந்தப் படத்தில் நான் எப்படி ஒரு உயரம் குறைவான மனிதனாக (அப்பு) நடிக்கப் போகிறேன் என்பது மூன்று ஷாட்டுகளுக்குப் பிறகு அவருக்கே தெரியாது. பலத்த யோசனைகளுக்குப் பிறகே சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்தோம். அப்பு என்பது ஒரே ஒரு தந்திரம் தெரிந்த கதாபாத்திரம் அல்ல, அதில் பல வித்தைகள் இருந்தன." எனக் கூறியிருக்கிறார்.



















