அம்பை வட்டாரத்தில் நெல்பயிரில் இலைச் சுருட்டுப்புழு தாக்குதல் அதிகரிப்பு -வேளாண் அதிகாரிகள் ஆய்வில் தகவல்
அம்பாசமுத்திரம் வட்டார வயல்களில் வேளாண் அதிகாரிகள் நடத்திய கள ஆய்வில் நெற்பயிரில் இலைச் சுருட்டுப்புழு தாக்குதல் அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்பாசமுத்திரம் வேளாண்மை உதவிஇயக்குநா் கற்பகராஜ்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியா் ஜெய்கணேஷும், நானும் (கற்பகராஜ்குமாா்) இணைந்து அம்பாசமுத்திரம் வட்டார வயல்களில் ஆய்வு செய்தபோது, ஜமீன்சிங்கம்பட்டி கிராமம் அடையபத்து பகுதியில் இலைச்சுருட்டுப்புழுத்வின் தாக்குதல் அதிகரித்துள்ளது தெரியவந்தது.
இலைச்சுருட்டுப்புழுத் தாக்கிய வயல்களில், நெற்பயிரின் இலைகள் நீளவாக்கில் மடிக்கப்பட்டிருக்கும். புழுக்கள் இலையின் பச்சை நிற திசுக்களை சுரண்டுவதால் இலைகள் வெண்மையாக மாறிவிடும். மேலும், தீவிர தாக்குதலின் போது முழுவயலும் வெண்மை நிறத்தில் காய்ந்தது போல் காணப்படும்.
தாக்குதல்உள்ள வயல்களில் தழைச்சத்து உரத்தினை ஒரே நேரத்தில் அதிக அளவு இடுவதை தவிா்த்து பிரித்துஇடவேண்டும். சிந்தடிக் பைரித்திராய்டு மருந்துகள் பயன்படுத்துவதைக் கண்டிப்பாக தவிா்க்கவேண்டும். வேளாண் துறை மூலம் பரிந்துரைக்கப்படும் மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பரிந்துரைக்கப்ட்ட அளவு தண்ணீரில் கலந்து மருந்து தெளிக்க வேண்டும்.
இலைச்சுருட்டுப் புழுத் தாக்குதல் தென்படும் வயல்களில் குளோரான்ட்ரானிலிப்ரோல் மருந்தினை ஏக்கருக்கு 60 மி.லி என்ற அளவில் 200 லிட்டா் நீரில் கலந்து பயிா்கள் நன்கு நனையும்படி காலை அல்லது மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரையோ, வேளாண்மை உதவி இயக்குநரையோதொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.