`உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா.!' - மறைந்த இயக்குநர் இமயத்தின் புகைப்பட நினைவல...
'அரசை விமர்சித்த டிவி சானல்கள் அரசு கேபிளில் முடக்கமா?' - எதிர்க்கட்சிகள் கண்டனம்; ராஜ்மோகன் பதில்
தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து பாலிமர் செய்திகள், நியூஸ் தமிழ் 24X7, தமிழ் ஜனம் ஆகிய மூன்று செய்தி சேனல்கள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்வினை ஆற்றியிருக்கின்றனர்.
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில்:
"தமிழ்நாட்டில் சோஃபா மாடல் அரசின் தோல்விகளை ஒளிபரப்பிய காரணத்திற்காக 3 செய்தி சேனல்களை அரசு கேபிளில் நீக்கி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
ரீல்ஸ் கன்டென்டிற்காக, “என்னை எவ்வளவு வேணும்னாலும் விமர்சிங்க” என்று பன்ச் டயலாக் பேசிய முதலமைச்சர், அவரது ஆட்சியின் குறைகளைச் சுட்டிக்காட்டும் செய்தி சேனல்களை முடக்குவதை ஏற்க முடியாது.

மின் வெட்டினால் பொதுமக்கள் படும் அவதி, தொடரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட செய்திகளை ஒளிபரப்பினால், பாசிசத்தின் மற்றொரு வெர்ஷன் ஆக, ஊடகங்களின் குரல்வளையை நெரிக்கிறது தமிழ்நாடு அரசு!
ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதற்கு அரசுத் தரப்பில் வேறு காரணம் சொல்லப்பட்டாலும், அரசை விமர்சிக்காத மற்ற சேனல்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை.
ஊடகங்களை முடக்கினால் உண்மைகளை மறைத்து விடலாம் என்ற எண்ணத்தைக் கைவிட்டு, நீக்கப்பட்ட சேனல்களின் ஒளிபரப்பு தொடர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் எக்ஸ் பதிவு:
"தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து நியூஸ் தமிழ் 24X7, பாலிமர் செய்திகள் மற்றும் தமிழ் ஜனம் ஆகியவை நீக்கப்பட்டிருப்பது, பத்திரிகை சுதந்திரத்தைப் பறிப்பது மட்டுமின்றி ஜனநாயகத்திற்கும் எதிரானதாகும்.
அரசின் நிர்வாக திறமையின்மையை வெளிச்சமிட்டு காட்டும் ஊடகங்களை முடக்குவதும், மாற்றுக் கருத்துக்களை எதிர்கொள்ள முடியாமல் அது முன்வைக்கப்படும் தளங்களையே இருட்டடிப்பதும் தான் தவெக அரசு அளிக்க விரும்பும் மாற்றமா?"
அமமுக நிறுவனர் டி.டி.வி தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில்:
"பாலிமர், நியூஸ் தமிழ் 24*7 மற்றும் தமிழ் ஜனம் ஆகிய மூன்று செய்தி தொலைக்காட்சிகள் தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களால் ஏற்பட்டிருக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருட்களின் தாராளப் புழக்கம், அறிவிக்கப்படாத மின்வெட்டு ஆகியவற்றால் மக்கள் படும் துயரங்களைச் செய்திகளாக வெளியிட்டதற்காகவே குறிப்பிட்ட மூன்று செய்தி தொலைக்காட்சிகளும் அரசு கேபிளில் முடக்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது.
அரசு நிர்வாகத்தின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதிலும், மக்களின் அன்றாட பிரச்னைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வதிலும் முக்கிய பங்காற்றும் செய்தித் தொலைக்காட்சிகளை முடக்க நினைப்பதும், அரசு நிர்வாகத்தின் மீதான விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் ஊடகங்களின் குரலை ஒடுக்க நினைப்பதும் தவெக அரசின் பலவீனத்தையே வெளிப்படுத்துகிறது.
ஜனநாயகத்தில் விமர்சனங்களையும், மாற்றுக்கருத்துக்களையும் சகித்துக் கொள்ளும் மனப்பக்குவமே நல்லாட்சிக்கான அடையாளம் என்பதை இனியாவது உணர்ந்து ஊடக சுதந்திரத்தை அச்சுறுத்த முயலும் இதுபோன்ற நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என தவெக அரசையும், அதன் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்".
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எக்ஸ் பக்க பதிவு:
"அரசு கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பிலிருந்து நியூஸ் பாலிமர் செய்திகள், தமிழ் ஜனம், நியூஸ் தமிழ் 24X7 உள்ளிட்ட செய்தி தொலைக்காட்சி அலைவரிசைகள் தவெக அரசால் நீக்கப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
செய்தித்தொலைக்காட்சிகளை முடக்குவது என்பது சனநாயகத்தின் குரல்வளையை அதிகார கொடுங்கரங்களால் நெரிப்பதற்கு ஒப்பானது. இதற்கு பெயர்தான் சனநாயகமா? இதுதான் சனநாயகன் ஆட்சியா?

செய்தியாளர்களைச் சந்திக்கத்தான் முதல்வர் விஜய் அவர்களுக்கு துணிவில்லை. செய்திகளைச் சந்திக்கவும் துணிவில்லையா? செய்தி தொலைக்காட்சிகளை முடக்கினால் அன்றாடம் நடக்கும் ஆட்சியின் அவலங்களை மறைத்துவிடலாம் என்று நினைப்பது, கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடும் என்று நம்புவதை போன்று அறிவுக்கு புறம்பானது.
உண்மைச் செய்திகள் மக்களிடம் சேராமல், அரசு கேபிளிலிருந்து செய்தித் தொலைக்காட்சிகளை இருட்டடிப்பு செய்வதில் காட்டும் வேகத்தையும், ஆர்வத்தையும் உங்கள் ஆட்சியில் விடிய விடிய தலைநகர் சென்னையில
இருட்டில் தவிக்கும் மக்களைக் காப்பதில் சிறிதேனும் காட்டுங்கள் முதல்வர் அவர்களே!
அதுதான் உங்களை நம்பி வாக்களித்த மக்களுக்குச் செய்கின்ற குறைந்தபட்ச நன்றியாக இருக்கும்!"
தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்:
"ஆணவத்திலும், அடக்குமுறையிலும் திமுகவையே மிஞ்சிய தவெக!
திரு. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான “ரீல்ஸ் மாடல்” அரசுக்கு எதிரான செய்திகளை, உண்மைக் கள நிலவரங்களை மக்களிடையே கொண்டு சேர்த்தமைக்காக, பாலிமர் செய்திகள், நியூஸ் தமிழ் 24X7 மற்றும் தமிழ் ஜனம் ஆகிய சேனல்கள் தமிழக அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.
விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாத தவெக அரசின் இந்த அப்பட்டமான அடக்குமுறை கடும் கண்டனத்திற்குரியது. பல நூறாண்டு காலம் நாம் போராடி பெற்ற கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது. தாங்கள் நினைப்பது மட்டுமே செய்திகளாக ஒலிக்க வேண்டும்.

தங்களுக்குப் பிடித்தவைகள் மட்டுமே காட்சிகளாகப் பதிய வேண்டும் என்ற நோக்கத்தில், தங்களுக்கு எதிராகப் பேசும் சமூக ஊடகவியலாளர்கள் முதல் செய்தி சேனல்கள் வரை அனைவரையும் முடக்க நினைக்கும் தவெக, மற்றொரு “தீயசக்தி”யாக மெல்ல மெல்ல வலுப்பெற்றுக் கொண்டிருக்கிறது.
காரணம், முந்தைய திமுக ஆட்சியிலும் பத்திரிக்கைகளின் குரல்வளை நெறிக்கப்பட்டது. “இம் என்றால் வனவாசம், ஆம் என்றால் சிறைவாசம்” என்ற நிலை தான் இருந்தது. ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதற்கேற்ப தற்போதைய தவெக ஆட்சியிலும் ஊடகச் சுதந்திரம் முடக்கப்படுவது தமிழகத்திற்கு பேராபத்தானது,
எனவே, தமிழக மக்கள் ஒழித்துக் கட்ட நினைத்த திமுகவிடம் ட்ரெய்னிங் எடுத்துக் கொண்ட திரு. ஆதவ் அர்ஜுனா அவர்களை இனியும் நிழல் முதல்வராகத் தொடர அனுமதித்தால், தமிழக மக்களின் பெருங்கோபத்தை முதல்வர் திரு.விஜய் அவர்கள் சந்திக்க நேரிடும் என்பதை எச்சரிக்கையாகவே தெரிவித்துக் கொள்கிறேன்".
பாலிமர் செய்திகள், தமிழ் ஜனம் மற்றும் நியூஸ் தமிழ் 24X7 முடக்கப்பட்டதா என்கிற கேள்விக்கு தமிழ்நாடு செய்தித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்...
"மூன்று சேனல்கள் நீக்கப்பட்டுள்ளன என்ற செய்தி தவறானது.
சம்மந்தப்பட்ட மூன்று சேனல்களை தொழில்நுட்ப பிரச்னைகள் காரணத்தால் தற்காலிகமாக சில செட் ஆஃப் பாக்ஸ்களில் மட்டும் ஒளிபரப்பு செய்ய இயலவில்லை.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி சேனல்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைச் சரி செய்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனம் (Mantra Industries Limited) மூலமாக முழுவீச்சில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன".















