"நான் புல்லட் புரூஃப் கார் வச்சிருக்கேன், ஏன்னா..!"- ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் க...
ஆன்லைன் முதலீடு: லிங்க் அனுப்பி, பொறியாளரிடம் ரூ.3.24 கோடி மோசடி - சைபர் கிரைம் போலீஸார் விசாரணை
வேலூர் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்த 47 வயது நபர், அபுதாபியில் பொறியாளராக வேலைச் செய்கிறார். இவர், அண்மையில் விடுமுறை எடுத்துக்கொண்டு காட்பாடியிலுள்ள தனது வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது, அவரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு முகம் தெரியாத யாரோ ஒரு மர்மநபர் `` `PZENA App’-ல் முதலீடு செய்தால் அதிகம் சம்பாதிக்கலாம்’’ என்று மெசேஜ் அனுப்பியிருக்கிறார்.
பொறியாளரும் அதை நம்பி, மர்மநபர் அனுப்பிய லிங்க் வாயிலாக PZENA App-ஐ டவுன்லோடு செய்து, அதில் முதலீடு செய்யத் தொடங்கியிருக்கிறார். முதலில், பத்தாயிரம் ரூபாய் லாபம் வந்ததைபோல, மர்மநபர் பணம் அனுப்பியிருக்கிறார். இதனால், ஆர்வமடைந்த பொறியாளர் டிரேடிங் செய்வதற்காக மேலும் பணம் செலுத்தியிருக்கிறார்.
தொடர்ந்து, அதிக லாபம் இருப்பு வைக்கப்பட்டிருப்பதைபோல மெசேஜ் அனுப்பப்பட்டதால், ரூ.3.24 கோடி பணத்தை முதலீட்டுக்காக பல்வேறு கட்டமாக செலுத்தியிருக்கிறார் பொறியாளர்.

இதையடுத்து, பணத்தை பரிவர்த்தனை மூலமாக திரும்ப பெற முயன்றபோது, மேலும் குறிப்பிட்டத் தொகையை செலுத்துமாறு அந்த ஆப்பில் இருந்து தகவல்கள் திரும்பத் திரும்ப வந்துகொண்டிருந்தன. அதன் பிறகே, `இது ஒரு மோசடி ஆப்’ என்பதையும், தான் ஏமாற்றப்பட்டிருப்பதையும் அந்த பொறியாளர் தெரிந்துகொண்டார்.
உடனடியாக, 1930 எண்ணில் தொடர்புகொண்டு சைபர் கிரைமில் புகாரை பதிவு செய்தார். இப்புகார் தொடர்பாக, சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
``இதுபோன்று, பொதுமக்கள் யாரும் வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் இதர சமூக ஊடகங்களில் முதலீடு, வீட்டிலிருந்தே வேலை (Investment, Online Trading, Online Part Time Job, Work From Home) சம்பந்தமாக வரும் விளம்பரங்களை நம்பி பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம். மேலும், ஏ.பி.கே ஃபைல் பதிவிறக்கம் செய்யவோ மற்றும் தெரியாத நபர்கள் அனுப்பும் லிங்க்கை கிளிக் செய்யவோ வேண்டாம்’’ என்றும் சைபர் கிரைம் போலீஸார் அறிவுறுத்தியிருக்கின்றனர்.


















