செய்திகள் :

இடைத்தேர்தல் - ஓட்டுக்கு இரண்டு ரூபாய்! - திருப்பத்தூர் பார்முலா தெரியுமா?

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

முந்தைய வட ஆற்காடு மாவட்டம் .. பின்னர் வேலூர் மாவட்டமாகி.. காலப்போக்கில் நிர்வாக ரீதியாக அதுவும் மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு தற்போது திருப்பத்தூர் தனி மாவட்டமாக இருக்கிறது. 

1984 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடை பெற்ற தமிழ்நாட்டின் எட்டாவது சட்டமன்றத் தேர்தலில் ,பிரதமர் இந்திரா காந்தியின் மரணம், எம்.ஜி.ஆரின் உடல்நலக்குறைவு ஆகியவற்றுக்கு மத்தியில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்  - காங்கிரஸ் கூட்டணிஅமோக வெற்றி பெற்று எம்.ஜி.ஆர்  மூன்றாம் முறையாக தமிழகத்தின் முதல்வரானார். 

நூற்றாண்டு விழா... எம்.ஜி.ஆரின் அசத்தல் புகைப்பட கண்காட்சி... படங்கள்: உ.பாண்டி

1984 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற Y.சண்முகம் சில மாதங்களில் மரணம் அடைய , 1985 ஆம் ஆண்டு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது .

எங்களின் பூங்குளம் கிராமம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டு இருந்தது (தற்போது வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ளது) இடைத்தேர்தல் ஜுரம் அப்போதே ஒவ்வொரு கிராமத்திலும் அனல் பறந்தது. அடிக்கடி அம்பாசிடர் காரில் யாராவது கிராமத்திற்குள் வருவதும் , திண்ணைகள் மீது ஏறிக்கொண்டு பேசுவது என்று தினசரி விருந்தினர்கள் வரும் விழாக்கள் போன்று இருந்தது . 

பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் சார்பாக எஸ் .பி. மணவாளனும் தி.மு.க சார்பில் முந்தைய வேட்பாளர் சுந்தரம் நீக்கப்பட்டு G. சண்முகமும் போட்டியிட்டனர் . 

முன்னோட்டம் போதும் ..விஷயத்திற்கு வருவோம்..

அந்த காலகட்டத்தில் எங்கள் உறவினர் ஒருவர் குறிப்பிட்ட கட்சியில் ஊரில் பெரிய மனிதராக வலம் வருவார். அவரை சுற்றி எப்போதும் ஊர் பெருசுகள் சில பேர் சுற்றிக் கொண்டிருப்பார்கள். எம்.எல்.ஏ அல்லது எம்.பி. என்று யார் வந்தாலும் அவர் வீட்டு திண்ணையில் தான் அமர்ந்து பேசுவார்கள் .

நாங்களும் அடிக்கடி அவர் வீட்டிற்கு செல்வதால் அந்த இடைத் தேர்தலின் போது நடந்த சில நிகழ்வுகள் அறிந்தும் அறியாமலும் புரிந்தும் புரியாமலும் கடந்து போய்க் கொண்டிருந்தோம் .

இந்நிலையில் 1985 ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் , எங்கள் உறவினர் என்னைப் போன்ற வாக்குரிமை இல்லாத சிறுவர்களையும் இளைஞர்களையும் அழைத்துக் கொண்டு ஒவ்வொரு பகுதியாக வயல் வரப்புகளில் நடந்து சென்று புங்கை, புளிய மரம் என்று ஏதாவதொரு மரத்தடியில் அமர்ந்து விடுவார்.

1985-ல் சிகிச்சை முடிந்து தமிழகம் திரும்பிய எம்.ஜி.ஆர்

வயலும் வாழ்வும் ஒன்றிய எங்கள் பூங்குளம் கிராமம் பரந்து விரிந்து கிடக்கும். வீடுகள் ஆங்காங்கே பெரும்பாலும் வயலைச் சார்ந்து இருக்கும் ஆதலால் மக்கள் நடமாட்டம் ஆங்காங்கே பரவிக்கிடக்கும்.

உடன் அழைத்து சென்ற எங்களை அருகாமையில் இருக்கும், சின்னப்பையன் , ஆறுமுகம் , அரசக்கவுண்டர் , சீனி , பிரகாசம் என்று அந்தந்த வீட்டில் இருப்பவர்கள் பெயர்களை சொல்லி அந்த வீட்டையும் காட்டி போய் அழைத்து வரச் சொல்வார் . நாங்களும் வரப்பு வெளிகளில் உற்சாகமாக ஓடிசெல்வோம்

நாங்கள் போய் வீட்டில் உள்ள பெரியவர்களை... உறவினர் பெயர் சொல்லி.. மரத்தடியில் அமர்ந்திருக்கிறார்.. உங்களை வரச் சொன்னார் என்று சொன்னவுடன் அவர்களும் மரியாதை நிமித்தமாக வந்து விடுவார்கள்..

அதுவரை எங்களை அழைத்துச்சென்ற உறவினர் , எங்களுக்கே தெரியாமல் வேஷ்டியில் சுருக்கி சுற்றி வைத்திருக்கும் இரண்டு ரூபாய் (!) பண்டல்களை பிரித்து , அவரவர்களின் வீட்டில் உள்ள ஓட்டு எண்ணிக்கைக்கு தகுந்தவாறு ரூபாய் 2, 4, 6, 8 என்று எண்ணிக்கைக்கு தகுந்தவாறு இரண்டு ரூபாய் தாள்களை கொடுத்து.. மறக்காமல் நம்ம கட்சிக்கு ஓட்டு போடுங்க .. போன முறையே தோத்துட்டோம் இந்த முறை ஜெயிக்க வேண்டும் என்று சொல்வார்.

எங்களுக்கு அப்போதெல்லாம் இது ஓட்டுக்கு பணம் என்பது புரியாது. இதேபோன்று கிட்டத்தட்ட ஆறு ஏழு நாட்களுக்கு மேலாக கிராமத்தின் பல்வேறு பகுதிகளையும் சுற்றி வந்து கட்சி சார்பாக ஓட்டுக்கு இரண்டு ரூபாய் வீதம் கொடுத்து முடித்து விட்டார் .

தினசரி இந்த பண பட்டுவாடா முடிந்தவுடன் எங்களுக்கு நாலணா , எட்டணா என்று கொடுத்து தின்பண்டம் வாங்கிக்க சொல்வார்.

என்னதான் இப்படி பண பட்டுவாடா நடந்தாலும் ,அந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட எஸ்.பி.மணவாளன் தான் வெற்றி பெற்றார்.

திருப்பத்தூர்

கொஞ்சம் விவரம் தெரிந்து எங்களுக்கு வாக்குரிமை கிடைத்த பிறகு பழைய நினைவுகளை நினைக்கும் போது...தெரியாமலேயே ஒரு தவறான விஷயத்திற்கு நம்மை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டோம்.

அதன் பிறகு மாநிலத்தில் ஆங்காங்கே எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் எனக்கு திருப்பத்தூர் இடைத்தேர்தல் மனதில் நிழலாடும்.

என்னதான், ஓட்டுக்கு இரண்டாயிரம் ரூபாய் என்ற திருமங்கலம் ஃபார்முலா , இருபது ரூபாய் டோக்கன் என்ற ஆர் .கே. நகர் பார்முலா என்று காலத்துக்கு ஏற்றபடி கவனிப்புகள் மாறிக்கொண்டே வந்தாலும்

1985 ம் ஆண்டு கால கட்டத்திலேயே ஓட்டுக்கு இரண்டு ரூபாய் கொடுத்து வாக்கு சேகரித்த அகராதி திருப்பத்தூர் இடைத்தேர்தலுக்கு உண்டு என்பதை அறியாத வயதில் கண்டு புரியும் வயதில் தெரிந்துகொண்டோம்.

இந்த தேர்தல் பிரசாரத்தின் போது ஒரே நேரத்தில் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் டி.ராஜேந்தர் ஆகியோர் பூங்குளம் கிராமத்திற்குள் நுழைய , ஆளுங்கட்சி கெத்தில் அமைச்சர் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்பட எதிர்கட்சி என்பதால் டி.ராஜேந்தர் ஊர் எல்லையில் நிறுத்தப்பட்டதால் இரண்டு கட்சியினருக்கும் இடையே பெரிய வாக்குவாதம் ஏற்பட்டது.

கடைசியில் ஊர் எல்லையில் நின்றவாறு பேசிய டி.ராஜேந்தர் ஆளுங்கட்சியின் அசுர பலத்தை சுட்டி காட்டி பணக்கார வீட்டு கல்யாணத்தில் போய் பத்து ரூபாய் மொய் வைப்பதை காட்டிலும் (எதிர் கட்சிகளுக்கு குறைவான எம்.எல்.ஏ க்கள் இருப்பதை சுட்டி காட்டி) ஏழை வீட்டு கல்யாணத்தில் இரண்டு ரூபாய் மொய் வைப்பது எவ்வளவோ மேல் .. கடைசிவரை நன்றி உடையவர்களாக இருப்பார்கள் என்று சென்டிமென்டலாக பேசியதை அனைவரும் கை தட்டி ரசித்தது ஞாபகம் இருக்கிறது.

இடைத்தேர்தல்களில் உருவாகும் பல்வேறு பார்முலாகளுக்கு இந்த இரண்டு ரூபாய் பார்முலா தான் முன்னோடி என்பது என்னை போன்றவர்களுக்கு பிற்பாடு புரிந்தது .

-அதிஷ்யன் மேதாவி

தேர்தல்

நாட்டை விற்க போகிறோமா? இல்லை, நாட்டை வியக்க வைக்க போகிறோமா? #தேர்தல்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

SIR: 2002/05 வாக்காளர் பட்டியலில் பெயரை கண்டறிய முடியாதவர்களுக்கு குட் நியூஸ்; அறிக்கை வெளியிட்ட SEC

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இப்பணிகள் தொடர்பாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந... மேலும் பார்க்க

SIR: ”என் முடிவு தீர்வாக இருக்கட்டும்” - அதீத பணி அழுத்தம்; தற்கொலைக்கு முயன்ற அங்கன்வாடி ஊழியர்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கொற்கை பகுதியைச் சேர்ந்தவர் சித்ரா (60). நாச்சியார்கோயில் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கு SIR பணி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில... மேலும் பார்க்க

மின்னணுப் பெட்டி முதல் மக்கள் மன்றம் வரை: தேர்தல் அனுபவங்கள்

அன்புள்ள வாசகர்களே,ஜனநாயகம் என்னும் ஆலமரத்தின் வேராக இருப்பது தேர்தல். ஒரு நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் இந்த மாபெரும் நிகழ்வு குறித்து உங்கள் மனதில் எழும் ஆழமான சிந்தனைகள், அனுபவங்கள் மற்றும் க... மேலும் பார்க்க